பிரியாணி செய்ய முக்கிய பொருளான இஞ்சி பூண்டு பேஸ்ட் கெடாமல் இருக்க என்ன செய்யணும்..?
நீண்ட நாட்களுக்கு இஞ்சி பூண்டு விழுது கெட்டுப்போகாமலும் ஃப்ரெஷ்ஷாக இருக்க சில டிப்ஸ்களை தெரிந்து கொள்வோம்..
- ஈரப்பதத்துடன் எந்த பொருளையும் சேமித்து வைக்கும் போது அது விரைவில் கெட்டுவிடுகின்றது. அதனால், இஞ்சி பூண்டு விழுதை அரைப்பதற்கு முன்னதாக, கழுவி நறுக்கி வைத்த இஞ்சி மற்றும் பூண்டை நன்கு உலர வைக்கவும். இஞ்சி மற்றும் பூண்டு ஈரப்பதமின்றி இருக்கும் போது அரைத்து வைத்தால் நீண்ட நாட்களுக்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
- இஞ்சி-பூண்டு பேஸ்ட் செய்த பிறகு, இந்த கலவையில் ஒன்றரை தேக்கரண்டி சூரியகாந்தி அல்லது கடலை அல்லது ஆலிவ் எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து கலந்து காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் சேமித்து வையுங்கள். இப்படி செய்யும் போது, இஞ்சி பூண்டு பேஸ்ட் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
- இஞ்சி-பூண்டு விழுதை காற்றுப் புகாத ஜிப்லாக் பையில் வைத்து ஃபிரிட்ஜில் வைத்து விட்டால் பல நாட்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும். முக்கியமாக, இந்த பையில் ஓட்டைகள் அல்லது கசிவுகள் இல்லாததை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
- நாம் சேமித்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுதின் மேற்பகுதியில் அடர் பச்சை அல்லது மஞ்சள் நிறமாக தோன்ற ஆரம்பித்தால், விரைவில் பேஸ்ட் கெட்டு விடும் என்பதை குறிக்கிறது. எனவே, இது நடக்காமல் இருக்க, இந்த பேஸ்டுடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து, காற்று புகாத டப்பாவில் வைத்து ஃபிரிட்ஜில் வைத்து விடுங்கள்.
- சந்தையில் நாம் வாங்கும் பெரும்பாலான பொருட்கள், அதாவது ஊறுகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் போன்றவை க்ளிங் ஃபிலிம் அல்லது பார்ச்மென்ட் பேப்பரால் மூடப்பட்டிருக்கும். இவை வெளிப்புற சூழலின் ஈரப்பதம் மற்றும் எண்ணெய் தன்மையை தடுக்கிறது. அதனால் தான் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை காற்று புகாத கண்ணாடி ஜாடியில் சேமித்து, க்ளிங் ஃபிலிம் அல்லது பார்ச்மென்ட் பேப்பரால் மூட வேண்டும். இப்படி செய்வதால் பேஸ்ட் பல மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.
- இஞ்சி பூண்டு விழுதை ஒரு பேக்கிங் பேப்பரில் பரப்பி, 2 முதல் 3 நிமிடங்களுக்கு மைக்ரோவேவ் ஓவனில் 50 டிகிரி சென்டிகிரேடில் வைக்கவும். இதனால் பேஸ்டில் இருக்கும் ஈரப்பதம் முற்றிலுமாக போய்விடுகிறது. இப்போது காற்று புகாத பாட்டிலில் இந்த பேஸ்டை சேர்த்து ஃப்ரிட்ஜில் சேமித்து வைய்யுங்கள். இந்த ட்ரை இஞ்சி பூண்டு பேஸ்ட் பல நாட்களுக்கு பயன்படுத்தலாம்.
- இஞ்சி பூண்டு விழுதை ஐஸ் க்யூப் ட்ரேயில் வைத்து சில மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். இவை நன்றாக உறைந்த பின்னர், காற்று புகாத ஜிப்லாக் பையில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். இவை, குறைந்தது மூன்று மாதங்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும் என்று கூறப்படுகிறது. சமைக்கும் போது, ஒரு க்யூபை எடுத்து பயன்படுத்தினால் போதுமானது.