கர்ப்பிணிகள் என்னென்னவற்றைச் சாப்பிடலாம்? கர்ப்பகாலத்தில் உணவு வாயிலாக உடல்நலனை பேணுவது எப்படி?
``கர்ப்பிணிகள் சாப்பிடுவதுதான், குழந்தைக்கும் அதன் வளர்ச்சிக்கும் ஆதாரமானது. கருவுற்ற முதல் மூன்று மாதங்களில் வாந்தி வருவதற்கான உணர்வு மேலோங்கியிருக்கும் என்பதால், அதற்குத் தகுந்தாற்போல் உடம்பு ஏற்றுக்கொள்ளும் உணவைச் சாப்பிட வேண்டும்.
முடிந்த வரை ஹோட்டல் உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்த்து விட்டு, வீட்டில் சமைத்த உணவுகளை மட்டுமே சாப்பிடும்படி அறிவுறுத்துவோம். ஏனென்றால் ஹோட்டல் உணவுகளில் எண்ணெய் மற்றும் மசாலாக்கள் அதிகளவில் இருக்கும். அதிக சர்க்கரை அளவுள்ள உணவைத் தவிர்க்கலாம், அல்லது மிகக் குறைந்தளவு அவற்றை எடுத்துக் கொள்ளலாம். பேறுகாலத்தில் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பதால் சர்க்கரை அளவு அதிகம் உள்ள பொருள்கள் மற்றும் கார்போஹைட்ரேட் மிகுந்த பொருள்களைத் தவிர்க்கச் சொல்கிறோம்.
கீரை வகைகள், காய்கறிகள் மற்றும் பழ வகைகளை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். அந்தந்த சீசனில் விளையும் காய்கறி, பழங்களைச் சாப்பிடலாம். பப்பாளி, அன்னாசிப் பழங்களை கர்ப்பிணிகள் சாப்பிட்டால் கர்ப்பம் கலைந்துவிடும் என்கிற தவறான நம்பிக்கை நிலவுகிறது. இந்தப் பழங்களால் உடல் சூடு அதிகரிக்குமே தவிர, கர்ப்பம் கலையும் என்பதற்கான எந்தவித அறிவியல் ஆதாரங்களும் இல்லை. ஆகவே, அளவாக பப்பாளி, அன்னாசிப் பழங்களையும் சாப்பிடலாம்.
பேறுகால சர்க்கரை நோயைத் தடுக்கும் பொருட்டு மாவுச்சத்தை மிகக் குறைந்த அளவில் எடுத்துக் கொண்டு புரதச்சத்தை அதிக அளவில் எடுத்துக் கொள்ளலாம். சைவம் சாப்பிடுகிறவர்களுக்கு காய்கறிகள், கீரை, பனீர் போன்றவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம் புரதச்சத்து கிடைக்கும். அசைவம் என்றால் கோழி, மீன் வகைகள் மற்றும் முட்டை எடுத்துக் கொள்ளலாம். ஆட்டுக்கறியில் கொழுப்பு மிகுந்திருக்கும் என்பதால் அளவாகச் சாப்பிட வேண்டும்.
பொதுவாகவே கர்ப்பகாலத்தில் மலச்சிக்கல் ஏற்படும் என்பதால் நார்ச்சத்து மிகுந்த முருங்கை, முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகளையும், கீரை வகைகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். மலச்சிக்கலை உண்டாக்கும் கோதுமை மற்றும் மைதாவில் செய்யப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். குறைந்த அளவு தண்ணீர் குடிப்பதாலும் மலச்சிக்கல் ஏற்படும். ஆகவே, நாளொன்றுக்கு சராசரியாக 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.
டீ, காபி ஆகியன உடலில் பித்த அளவை அதிகரிக்கும் என்பதால், கர்ப்பிணிகள் அதனை குறைத்துக் கொள்வது நல்லது. நாளொன்றுக்கு ஒரு கப் டீ/காபி மட்டுமே அருந்துவது நல்லது. பாலில் கால்சியம் இருப்பதால் பால் குடிப்பது நல்லது. தூங்குவதற்கு முன்பு பால் குடிக்க அறிவுறுத்துவோம். ஊறவைத்த கொண்டைக்கடலை, பச்சைப்பயிறு உள்ளிட்டவற்றைச் சாப்பிடலாம். கர்ப்பகாலத்தில் உடல் எடை அதிகரிப்பது இயல்புதான். சராசரியாக 6 -7 கிலோ வரை உடல் எடை கூடும். இந்த சராசரி அளவைக் காட்டிலும் எடை கூடியிருந்தால் ரத்த அழுத்தம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அதிக எடை கூடுவது நல்லதல்ல என்பதால் உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
உணவின் வழியே நாம் எடுத்துக் கொள்ளும் சத்துகள் கொழுப்பாக உடலில் தேங்கி விடக்கூடாது என்றால் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். தினமும் நடைபயிற்சி மேற்கொள்வது அவசியம். எளிதில் செரிமானமாகக்கூடிய உணவுப் பொருள்களைச் சாப்பிட வேண்டும். நல்லதே ஆனாலும் அளவுக்கதிகமாகச் சாப்பிடக்கூடாது