ஆண் பிள்ளைகளின் பதின்ம பருவத்தை அறிவோம்!

பள்ளிகளும், சமூகமும் வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளுக்கு கற்றுத்தரும் எதிர்பாலின கவர்ச்சி பற்றிய விழிப்புணர்வை இயல்பாகவே பெண் பிள்ளைகளின் மீது ஈர்ப்பு உண்டாகும் ஆண் பிள்ளைகளுக்கு தருவதில்லை.

ஆண் பிள்ளைகளின் பதின்ம பருவத்தை அறிவோம்!
X

பெண் குழந்தைகள் பூப்படைந்தது முதலே பெற்றோர்களாலும், பெரியோர்களாலும் கண்காணிக்கப்படுகிறார்கள். அவர்கள் மீது அதீத அக்கறை கொள்கிறார்கள். மாதவிடாய் காலங்களில் பெண் குழந்தைகளைத் தாங்கி பிடிக்கிறார்கள்.பருவ வயதில் உண்டாகும் ஹார்மோன் சுரப்புகளால் அவர்களது பாதை திசைமாறாமல் சரியான பாதையில் பயணிக்க மெனக்கெடுகிறார்கள் ஒவ்வொரு பெற்றோர்களும். ஆனால் இத்தகைய மெனக்கெடல் ஆண்களுக்கும் தேவை என்பதை உணர்ந்திருக்கிறோமோ.

பருவமடைதலும், பூப்படைதலும் பெண்களுக்கு மட்டுமே என்று நினைத்துக்கொண்டிருக்கும் பெற்றோர்கள் இன்றும் உண்டு. ஆனால் ஆண் குழந் தைகளும் வயதுக்கு வருகிறார்கள். ஆண்கள் 12 வயதாகும் போது வயதுக்கு வருவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஆனால் 9 முதல் 14 வயது வரை ஆண்கள் வயதுக்கு வரும் காலம் என்கிறார்கள் மருத்துவர்கள். தற்போது இந்த வயது வித்தியாசம் குறைந்து 6 வயதிலேயேயும் ஆண் குழந்தை வயதுக்கு வருவதாக தெரிவித்துள்ளது அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று.

பருவ மாற்றங்களில் அவதி:
ஆண் குழந்தைக்கு 10 வயது சிறுவனாக மாறும் போது பருவ மாற்றம் உண்டாகும். பெண் குழந்தைகள் ஒரே நாளில் பூப்படைவது போல் அல்ல ஆண்பிள்ளைகளின் வளர்ச்சி. மென்மையான குரல் தேய்ந்து ஆண் குரலுக்கே உரிய கரகரப்பு வெளிப்படும். முகத்தில் தாடி, மீசை அரும்ப தொடங்கும்.

இப்படி படிப்படியாக உடல் மாற்றங்கள் உண்டாகும். உடல் வளர்ச்சி குறைந்து காணப்பட்ட சிறுவன் கூட இந்தப் பருவ மாற்றத்துக்குப் பிறகுஅதீத அசுர வளர்ச்சியடைந்துவிடுவான். இவையெல்லாவற்றையும் உணரும் சிறுவனுக்கு அதனால் உண்டாகும் அசெளகரியம் பற்றி போதிய விழிப் புணர்வு இருக்காது.

இந்த பருவ வயது மாற்றத்துக்கு காரணம் ஹார்மோன் சுரப்பிகள்தான். ஆரம்பத்தில் அட்ரீனல் சுரப்பி சுரக்கும். பிறகு மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி சுரப்பதால் இனப்பெருக்க உறுப்புகள் வளரும். இதிலிருந்து பாலியல் ஹார்மோன் ஆன டெஸ்டோஸ்டிரான் சுரக்கும்.

பெற்றோர்களின் கடமை:
பொதுவாக ஆண் பிள்ளைகள் அம்மாக்களின் செல்லங்கள் என்று சொன்னாலும் கூட அம்மாக்களிடம் இந்த அசெளகரியமான விஷயங்களைப் பேச பிள்ளைகள் தயங்குவார்கள்.

ஆண்பிள்ளைகள் இந்த வயதைக் கடக்க அப்பாக்கள் தான் பிள்ளைகளை வழிநடத்த வேண்டும். பள்ளிகளும், சமூகமும் வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளுக்கு கற்றுத்தரும் எதிர்பாலின கவர்ச்சி பற்றிய விழிப்புணர்வை இயல்பாகவே பெண் பிள்ளைகளின் மீது ஈர்ப்பு உண்டாகும் ஆண் பிள்ளைகளுக்கு தருவதில்லை.

பெண் குழந்தை பூப்படைந்தால் பாதுகாக்கும் கவசம் போல் கற்றுத்தரும் பெற்றோர்கள் ஆண்குழந்தைகளை மட்டும் அலட்சியம் செய்வதால் தான் மனரீதியாக, உடல் ரீதியாக உண்டாகும் மாற்றத்தை அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. பெற்றோர்கள் தான் அவர்களை சரியான முறையில் அணுக முடியும்.

வயதுக்கு வந்த ஆண் பிள்ளைகள், பெண் பிள்ளைகளின் மீது உண்டாகும் ஈர்ப்பை இன்னதென்று சொல்ல தெரியாமல் நண்பர்களிடமோ சமூக வலைதளங்களிலோ தேடும் போது தடம் மாறி போகவும் வாய்ப்புண்டு. பெண் பிள்ளைகளின் மீது இருக்கும் அதே அக்கறையை வயது வந்த ஆண் பிள்ளைகளிடம் காண்பிக்க வேண்டும் என்பதையே உளவியல் நிபுணர்களும் வலியுறுத்துகிறார்கள்.

newstm.in

newstm.in

Next Story
Share it