1. Home
  2. ஆரோக்கியம்

இன்று கிருஷ்ண ஜெயந்தி... ஸ்பெஷல் ரெசிப்பி செய்யலாம் வாங்க..!

1

கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த உப்புச்சீடை

தேவையான பொருட்கள்

பச்சரிசி மாவு -ஒரு ஆழாக்கு

உளுந்து மாவு -3 டீஸ்பூன் வெண்ணெய் -இரண்டு டேபிள் ஸ்பூன் பெருங்காயத்தூள், சீரகத்தூள்_ தலா அரை டீஸ்பூன்

தேங்காய் துருவல்- ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு எண்ணெய்- தேவையான அளவு.

செய்முறை

கை முறுக்கிற்கு செய்த அதே பதத்தில் மாவை தயார் செய்து கொள்ளவும். பச்சரிசி மாவை வெறும் வாணலியில் நன்கு வறுத்து ஆறவிடவும் .பிறகு பச்சரிசி மாவு, உளுந்து மாவு, பெருங்காயத்தூள், சீரகத்தூள் தேங்காய் துருவல் ,வெண்ணெய், உப்பு எல்லாவற்றையும் நன்கு கலந்து தேவையான நீர் விட்டு கெட்டியாக பிசைந்து ஒரு சுத்தமான வெள்ளை துணியில் சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி போட்டு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் போட்டு பொரித்தெடுக்கவும்.

கை முறுக்கு

தேவையான பொருட்கள்

பச்சரிசி -ஒரு கிலோ

உளுத்தம் பருப்பு -100 கிராம்

வெண்ணெய்- 1/4 கிலோ

பெருங்காயத்தூள்- 2 டீஸ்பூன்

சீரகத்தூள்- ஒரு டீஸ்பூன்

உப்பு எண்ணெய் -தேவையான அளவு

செய்முறை

பச்சரிசி நன்கு சுத்தம் செய்து 2 மணி நேரம் ஊற விட்டு பிறகு நீரை வடித்து நிழலில் அல்லது ஃபேன் காற்றில் நன்கு உலர விடவும். உலர்ந்தபின் மிஷினில் கொடுத்து நைசாக அரைத்து நன்கு சலித்துக் கொள்ளவும். உளுத்தம் பருப்பை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்து ஆறவிட்டு மிக்ஸியில் நைசாக அரைத்து சலிக்கவும். அரிசி மாவு, உளுந்து மாவு, வெண்ணெய், உப்பு பெருங்காயத்தூள் ,சீரகத்தூள் ஆகியவற்றை நன்கு கலந்து இரண்டு பாகமாக பிரித்துக் கொள்ளவும். இதில் ஒரு பங்கு மாவை மட்டும் எடுத்து அளவாக நீர் விட்டு நன்கு பிசையவும் பிசைந்த மாவை கைமுறுக்காகச் சுற்றி வெள்ளை துணியில் வைக்கவும்.

சுமார் 20 பிழிந்த பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் முறுக்குகளை போட்டு இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை சிம்மில் வைத்து வேகவிட்டு எடுக்கவும். கரகர மொறு மொறு கை முறுக்கு ரெடி.

மினி தட்டை

தேவையான பொருட்கள்

புழுங்கல் அரிசி -2 கப்

பொட்டுக்கடலை மாவு- அரை கப்

பாசிப்பருப்பு வறுத்தரைத்த மாவு- ஒரு டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் 8

தேங்காய் துருவல்- அரை கப்

பெருங்காயம் சிறிதளவு

எலுமிச்சம் பழச்சாறு- இரண்டு டேபிள் ஸ்பூன் பெருங்காயத்தூள்-ஒரு டீஸ்பூன்

நெய் ஒரு டேபிள் ஸ்பூன்

எண்ணெய் தேவையான அளவு

உப்பு தேவையான அளவு

செய்முறை

புழுங்கல் அரிசியை நன்கு கழுவி ஒரு மணி நேரம் ஊற விடவும். பின்னர் அதனுடன் பச்சை மிளகாய் ,தேங்காய் துருவல், பெருங்காயத்தூள், எலுமிச்சை பழச்சாறு உப்பு சேர்த்து நைசாக கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். அதில் பொட்டுக்கடலை மாவு பாசிப்பருப்பு மாவு சேர்த்து நன்கு கெட்டியாக பிசையவும். அந்த மாவில் இருந்து கோலிகுண்டு அளவு உருண்டைகள் எடுத்து சின்ன சின்ன தட்டைகளாக தட்டிக் கொள்ளவும். மிதமான தீயில் எண்ணெயை காய வைத்து தட்டைகளை பொரித்தெடுக்க வித்தியாசமான மினி தட்டை ரெடி..

வெல்லச் சீடை

தேவையான பொருட்கள்

அரிசி மாவு- ஒரு ஆழாக்கு

உளுந்து மாவு -3 டீஸ்பூன்

வெள்ளை எள் -ஒரு டீஸ்பூன்

ஏலப் பொடி -கால் டீஸ்பூன்

தேங்காய் துருவல்- ஒரு டேபிள் ஸ்பூன் வெல்லப்ப்பொடி -முக்கால் ஆழாக்கு உப்பு -1சிட்டிகை

எண்ணெய்- பொறிக்க தேவையான அளவு.

வெல்லத்தை நீரில் போட்டு மண் போக வடிகட்டி இளம் பாகு வைத்து அதில் அரிசி மாவு ,உளுந்து மாவு, எள், ஏலப் பொடி, தேங்காய் துருவல் ,உப்பு ஒரு சிட்டிகை சேர்த்து தேவையான நீர் விட்டு கெட்டியாக பிசைந்து சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி வாணலில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் போட்டு எடுக்க இனிப்புச் சீடை ரெடி.

ட்ரை குலோப் ஜாமுன்

தேவையான பொருட்கள்

சர்க்கரை இல்லாத கோவா- 300 கிராம்

மைதா- 150 கிராம்

சர்க்கரை- 700 கிராம்

சமையல் சோடா உப்பு- அரை டீஸ்பூன் ஏலக்காய் தூள்- அரை டீஸ்பூன் எண்ணெய் அல்லது நெய் பொரிக்க தேவையான அளவு.

செய்முறை சர்க்கரையுடன் அரை லிட்டர் நீர் சேர்த்து கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவும். சர்க்கரைஜீரா ரெடி .கோவா, மைதா ,சமையல் சோடா ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலக்கவும். 50 கிராம் நெய்யையும் சேர்த்து கொஞ்சமாக நீர் சேர்த்து மென்மையாகப் பிசைந்து வட்டமாகவோ, நீள் உருண்டைகளாகவோ உருட்டி மிதமாக காய்ந்த எண்ணெய் அல்லது நெய்யில் பொரித்து எடுத்து சர்க்கரை ஜீராவில் போடவும். சிறிது ஊறியதும் எடுத்து தட்டில் அடுக்கவும். சுவையான ட்ரைகுலோப் ஜாமுன் ரெடி .

பாதாம் அல்வா

தேவையான பொருட்கள்

பாதாம் பருப்பு- 200 கிராம் (நீரில் ஊற விட்டு தோலை எடுக்கவும்)

சர்க்கரை- 150 கிராம்

நெய்- 25 கிராம்

பாதாம் எசன்ஸ் - சில துளிகள்.

செய்முறை

தோல் நீக்கிய பாதாமை மிக்ஸியில் இட்டு சிறிது நீர் சேர்த்து நல்ல விழுதாக அரைத்துக் கொள்ளவும். சர்க்கரையில் சிறிது நீர் சேர்த்து கம்பிப் பதம் தயாரிக்கவும். அதில் பாதாம் எசென்ஸ் சேர்க்கவும். பிறகு அரைத்த பாதாம் விழுது மற்றும் நெய் இரண்டையும் சேர்த்து நன்கு சுருளக் கிளறி இறக்க ரிச்சான பாதாம் அல்வா ரெடி .

கோதுமை ரவை கேசரி

தேவையான பொருட்கள்

கோதுமை ரவை -ஒரு கப்

சர்க்கரை- ஒன்றரை கப்

கோவா -கால் கப்

பாதாம்- 20

நெய் அரைக்கப்

ஏலக்காய் தூள் - கால் டீஸ்பூன் அல்லது பாதாம் எசென்ஸ்- சிறிதளவு.

செய்முறை .

பாதாமை கொதி நீரில் 5 நிமிடங்கள் போட்டு எடுத்து தோல் நீக்கி மெல்லியதாக சீவிக் கொள்ளவும். அடி கனமான வாணலியில் நெய்யைக் காயவைத்து கோதுமை ரவையை சேர்த்து நன்கு வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும் .அதில் மூன்று கப் கொதிக்கும் நீரை சேர்க்கவும். ஐந்து நிமிடங்கள் அடுப்பை பெரிதாக வைத்து ரவை வெந்ததும் மூடி போட்டு சிறு தீயில் நன்கு வேக விடவும். பின்பு சர்க்கரை ,கோவா சேர்த்து நன்கு கிளறவும். கலவை இளகி மீண்டும் இறுகும் போது ஏலக்காய் தூள் அல்லது பாதாம் எசன்ஸ் சேர்த்து கிளறி இறக்கவும்.

நைவேத்தியங்களை சுவையாக தயாரித்து அன்புடன் படைக்க கிருஷ்ணர் நம்ம வீட்டிலேயே தங்கி விடுவது நிச்சயம்.

Trending News

Latest News

You May Like