1. Home
  2. ஆரோக்கியம்

கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க... உடம்ப குளுகுளுனு வெச்சிக்க... என்ன சாப்பிடணும்... என்ன சாப்பிட கூடாது..?

1

கோடை காலத்தில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளில் பெரும்பாலானவை உடல் சூடு்டைத் தணித்து குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் உணவுகளையும் அதிக நீர்ச்சத்துக்கள் கொண்ட உணவுகளையும் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

கோடை காலத்தில் அடிக்கடி செரிமானப் பிரச்சினைகள் உண்டாகும். அதனால் எளிதில் ஜீரணமாகும் உணவுகளாக இருக்க வேண்டும். குறிப்பாக திரவ உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது.

தக்காளியில் வைட்டமின் சி மற்றும் நீர்ச்சத்து மிக அதிக அளவில் இருக்கிறது.தக்காளியில் உள்ள லைகோபீன் போன்ற பைட்டோ கெமிக்கல்கள் அதிகமாக இருக்கின்றன. இந்த ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நாள்பட்ட நோய்களையும் எதிர்த்துப் போராடுகின்றன.குறிப்பாக புற்றுநோய் போன்றவற்றை எதிர்த்துப் போராடும் தன்மை தக்காளியில் உள்ளது. அதனால் கோடை காலத்தில் தக்காளியை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

கோடை காலத்தில் கிடைக்கும் பருவ கால பழங்களில் ஒன்றான தர்பூசணியில் வைட்டமின்கள், மினரல்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. எல்லாவற்றையும் விட தர்பூசணியில் 90 சதவீதத்துக்கும் மேல் நீர்ச்சத்து நிறைந்திருக்கிறது.தர்பூசணியில் உள்ள லைகோபீன் சூரியனின் புறஊதா கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாப்பதோடு உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்கவும் உதவி செய்கிறது. இதுபோல கோடை கால சீசன் உணவுகளான வெள்ளரிக்காய், முலாம்பழம் ஆகியவற்றையும் எடுத்துக் கொள்ளலாம்.

கோடை கால வெப்பத்தை ஈடுசெய்து நம்மை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள எலுமிச்சை சாறை விட வேறு சிறந்ததொரு பானம் இருக்க முடியுமா என்ன! ஆம் கோடை காலத்தில் நம்முடைய உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமலும் உடலின் ஆற்றலை தக்க வைத்திருக்கவும் எலுமிச்சை சாறு உதவியாக இருக்கும்.

சுரைக்காய் நம்முடைய உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை அதிக அளவில் கொண்டிருக்கிற ஒரு காயாகும். நிறைய வைட்டமின்களும் மினரல்களும் அடங்கியிருக்கும் இந்த சுரைக்காயில் அதிக அளவு நீர் உள்ளடக்கமும் இருப்பதால் செரிமானம் தொடர்பான பிரச்சினைகள் வராமல் தடுக்கும்.அதோடு உடலின் மெட்டபாலிசத்தையும் மேம்படுத்தி உடல் எடையைக் குறைக்கவும் உதவி செய்யும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாக்கெட் செய்யப்பட்ட பழச்சாறுகள் போன்றவற்றைத் தவிர்த்துவிட்டு, அந்தந்த பருவ காலங்களில் கிடைக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

எல்லா பருவ காலங்களைக் காட்டிலும் கோடை காலத்தில் திரவ உவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது உண்மை தான். ஆனால் அது டீ, காபியாக இருக்கக் கூடாது.கோடை காலத்தில் காஃபைன் நிறைந்த டீ, காபியை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவற்றிலுள்ள காஃபைன் மற்றும் சர்க்கரை உடலில் நீர்ச்சத்து குறைபாட்டை உண்டாக்கும். உடலின் நீர்ச்சத்து குறையக் குறைய உடலின் வெப்பநிலையும் உயரும்.

உலர் பழங்கள் உடலுக்கு ஆரோக்கியமானவை தான். ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை தான். ஆனால் கோடை காலத்தில் உலர் பழங்களை மிகக் குறைவாகத்தான் எடுத்து்க் கொள்ள வேண்டும்.ஏனெனில் உலர் பழங்கள் உடலின் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்யும் தன்மை கொண்டவை. அதோடு உலர் பழங்கள் எடுத்துக் கொள்ளும்போது அவை உடலின் நீர்ச்சத்தை அதிகமாக உறிஞ்சிக் கொள்ளும். உடலின் நீர்ச்சத்து குறைய ஆரம்பிக்கும்.

அதிகமாக இறைச்சி மற்றும் பிற அசைவ உணவுகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.அசைவ உணவுகளை கோடை காலத்தில் முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஒருவேளை உங்களுக்கு மீன், சிவப்பு இறைச்சி போன்றவற்றைச் சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் மாதத்தில் ஒருமுறை அல்லது இரண்டு முறை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.வெயில் காலத்தில் அதிகமாக அசைவ உணவுகளை எடுத்துக் கொள்வது பல சமயங்களில் வயிற்றுப் போக்கு போன்றவற்றை உண்டாக்கி செரிமான மண்டலத்தையே ஒட்டுமொத்தமாக பாதிக்கும். அதனால் உங்களுடைய செரமான மண்டலத்தை பாதுகாக்க வேண்டுமென்று நினைத்தால் அசைவ உணவுகளைத் தவிர்த்திடுங்கள்.

அதிக கலோரிகள் கொண்ட உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் ஆகியவற்றை கோடை காலத்தில் தவிர்ப்பது முக்கியம்.
இந்த உணவுகள் யாவும் உங்களுடைய செரிமான ஆற்றலைப் பாதிக்கும்.செரிமானக் கோளாறுகள் உண்டாவதால் குடல் இயக்கம் சரியில்லாமல் போகும்.

Trending News

Latest News

You May Like