தொண்டையில் கிச் கிச், கரகரப்பு...பாட்டி வைத்தியம் பட்டுன்னு விட்டுடும்!
முனோர்கள் காலத்தில் பெரும்பாலும் உடல் ஆரோக்கிய குறைபாடுகள் எல்லாமே கைவைத்தியம் மூலம் எளிதாக போக்கிகொண்டார்கள். அப்படி அவர்கள் செய்த வைத்தியமும் வேகமாக உடலை குணப்படுத்த செய்தது. இது குறித்து தெரிந்துகொள்வோம்.
1.அதிமதுரம் ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் இரண்டிலுமே பயன்படுத்தப்படுகிறது. நல்ல இனிப்பு குணம் கொண்ட இவை தனியான இனிப்பு சுவை. உடலில் கபம் அதிகரிக்கும் போது மூச்சுகுழாய், சுவாசக்குழாயில் அதிகரித்து தொண்டை கரகரப்பு பிரச்சனையை உண்டாக்கும். அதிமதுர டீ குடிப்பதன் மூலம் தொண்டை கரகரப்பை விரட்டி அடிக்கலாம்.
ஒரு டம்ளர் நீரை கொதிக்க வைத்து கால் டீஸ்பூன் அளவு அதிமதுரப்பொடியை சேர்த்து அடுப்பை அணைக்கவும். பிறகு அதில் தேவையெனில் இனிப்புக்கு தேன் சேர்த்து இளஞ்சூட்டோடு தொண்டையில் படும் படி குடித்துவந்தால் பலன் உடனடியாக கிடைக்கும்.
2.மஞ்சள் மிகச்சிறந்த கிருமிநாசினி. மாத்திரைகள் இல்லாமலே உடலில் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் பொருள் மஞ்சள். தொண்டை கரகரப்பு இருக்கும் போது காபி டீ தவிர்த்து பாலை சூடாக்கி அதில் சிட்டிகை மஞ்சளையும், சிட்டிகை மிளகுத்தூளையும் சேர்த்து இனிப்புக்கு நாட்டு சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து இளஞ்சூடாக குடிக்க வேண்டும்.
தினமும் மூன்று முறை கூட குடிக்கலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே இவை ஏற்றது. பெரியவர்களுக்கு கலக்கும் போது மிளகுத்தூள் சற்று கூடுதலாகவும், குழந்தைகளுக்கு பழகும் போது சிட்டிகை அளவுக்கு குறைவாகவும் சேர்க்கலாம். இதனால் தொண்டையில் எரிச்சல், வலியும் குறையத்தொடங்கும். குடித்த இரண்டு நாளில் நல்ல பலன் தெரியும்.
3.இஞ்சி காற்றூப்பாதையில் உண்டாகும் சுருக்கத்தைதடுத்து கோழையை வெளியேற்ற உதவுகிறது. சளி, காய்ச்சலை விரட்டி அடிக்கும் கை மருந்தாக பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டுவருகிறது. குறிப்பாக தொண்டைப்புண் குணப்படுத்தவும் இஞ்சி சாறு பயன்படுகிறது. ஆனால் உரிய முறையில் எடுத்துகொண்டால் தொண்டை கரகரப்பு காணாமல் போக கூடும்.
ஒரு டம்ளர் நீரை கொதிக்க வைத்து, ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி நசுக்கி சேர்க்கவும். இஞ்சியும் நீரும் சேர்ந்து நன்றாக கொதித்து அரை டம்ளர் அளவுக்கு வந்ததும் இறக்கி நாட்டு சர்க்கரை அல்லது தேன் சேர்த்து பால் கலக்காமல் குடிக்க வேண்டும். இளஞ்சூடு தொண்டையில் நனைய வேண்டும் அப்படி நனைந்தாலே தொண்டை கரகரப்புக்கு விடுதலை தான்.
4.இது சமீப வருடங்களாக இங்கு பிரபலம் ஆகியுள்ளது என்றாலும் பலனும் நிச்சயம் உண்டு. காஃபி, டீ போன்று இதில் காபைன் இல்லை. இயற்கையாகவே நரம்பையும் தசையும் அமைதிப்படுத்த உதவக்கூடியது. உடலில் எதிர்ப்புசக்தியை அதிகப்படுத்த இயற்கையான வழியில் முயற்சிப்பவர்கள் கெமோமில் தேநீர் குடிக்கலாம்.
குறிப்பாக காய்ச்சல், சளி, வறண்ட தொண்டை காலங்களில் உண்டாகும் உபாதையை குணப்படுத்த இவை விரைவில் உதவும். ஒரு டம்ளர் நீரை சூடு செய்து கெமோமில் மலர்களை சேர்த்து கொதிக்க வைத்தால் மலரின் நறுமணத்தை உணர முடியும். பிறகு இனிப்பு சேர்த்து 5 நிமிடங்கள் கழித்து நிறம் மாறியதும் வடிகட்டி குடிக்க வேண்டும். தேவையெனில் எலுமிச்சைச்சாறு சேர்க்கலாம்.
5.தொண்டை கரகரப்புக்கு எலுமிச்சை சேர்த்தால் உபாதை அதிகமாகும் என்று நினைக்க வேண்டாம். ஒரு டம்ளர் வெந்நீரில் எலுமிச்சையை பிழிந்து இனிப்புக்கு தேன் கலந்து இளஞ்சூடாக இருக்கும் போதே தொண்டையில் படும்படி நிதானமாக விழுங்க வேண்டும். தினமும் இரண்டு அல்லது மூன்று வேளை இதை எடுத்துகொள்ளலாம். இனிப்புக்கு மாற்றாக உப்பும் சேர்க்கலாம். தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்தாலே பலன் கிடைக்கும்.
எலுமிச்சை வைட்டமின் சி நிறைந்தது என்பதோடு ஆன்டி ஆக்ஸிடண்ட் நிறைந்தது என்பதால் தொண்டைக்கு இதமாக இருக்கும். மேற்கண்ட ஐந்துமே பக்கவிளைவுகள் இல்லாதவை என்பதோடு தொண்டைக்கு இதம் அளிப்பவையும் கூட. தொண்டை கரகரப்பை உணர்ந்ததும் இந்த ஐந்தில் ஒன்றை எடுத்துவந்தால் நிவாரணம் கிடைக்கும்.