1. Home
  2. ஆரோக்கியம்

மழை வெயில் பாதிப்பு... நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம் ஈஸியா!

மழை வெயில் பாதிப்பு... நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம் ஈஸியா!


திடீர் மழை, கடும் வெயில் என்று பருவநிலை மாறிமாறி வாட்டுகிறது. இதனால், சளி, காய்ச்சல் என்று பல நோய்கள் வரிசைகட்டுகின்றன. இந்தப் பருவநிலை மாற்றம் காரணமாக நம்முடைய செரிமான மண்டலத்தின் செயல்பாடு குறைகிறது, நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இதை எதிர்கொள்ளச் செய்ய வேண்டியவற்றைப் பற்றிக் காண்போம். 

கொசுவை விரட்ட... மழை பெய்வதால் தேங்காய் சிரட்டை, உடைந்த பிளாஸ்டிக் பக்கெட், இளநீர் கூடு உள்ளிட்டவற்றில் நீர் தேங்குகிறது. டெங்கு, சிக்குன்குனியா, மலேரியாவைப் பரப்பும் கொசுகள் உற்பத்தியாக இந்த நீர் போதும். எனவே, வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்க்க வேண்டும். தினமும் வீட்டில் உலர்ந்த வேப்பிலை நெருப்பில்போட்டு, அதன் புகையை வீடு முழுக்கக் காட்டினால் கொசுகள் ஓடிவிடும்.

பூஞ்சைத் தொற்றைத் தவிர்க்க... மழையில் பாதம் மற்றும் கால் பராமரிப்பு மிகமிக முக்கியம். பூஞ்சைகள் மழை நீர் வழியாகப் பரவலாம். எனவே, வெளியே சென்று வந்ததும் வெதுவெதுப்பான நீரில் கால்களைக் கழுவ வேண்டும். முடிந்தால், தாங்கக் கூடிய வெப்பநிலையில் வெந்நீரை ஒரு பக்கெட்டில் ஊற்றி, பாதங்களை ஐந்து முதல் 10 நிமிடங்கள் வைத்து எடுக்கலாம். பின்னர், உலர்ந்த பருத்தி துணியில் நன்கு ஒத்தி எடுக்க வேண்டும். விரல்களில் ஈரம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 

குளியல்... வாரத்துக்கு ஒரு முறையாவது நல்லெண்ணெய்யை மற்றும் வேப்பெண்ணெய்யை சம அளவில் கலந்து தலை முதல் பாதம் வரை நன்கு தேய்த்து, 15 - 20 நிமிடங்கள் ஊறவைத்து வெந்நீர் குளியல் எடுக்க வேண்டும். இது, சருமத்தில் கிருமித் தொற்றைத் தவிர்க்கும். ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். 

உணவில் கவனம்... மழையோ, வெயிலோ தினசரி போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டியது அவசியம். அதுவும் வெதுவெதுப்பான நீர் அருந்தும்போது, அது உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தைச் சீராக்கும். குளிர்ந்த நீர் மற்றும் குளிர்பானங்களை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. இஞ்சி, மிளகு கலந்த சூப் அருந்தலாம். தயிர், இறைச்சி, ஃபாஸ்ட் புஃட் உள்ளிட்டவற்றைத் தவிர்க்க வேண்டும். தயிருக்குப் பதில் மோராக அருந்தலாம். மூலிகை டீ அருந்தலாம். துளசி, இஞ்சி டீ செரிமானத்துக்கு உதவும்.

newstm.in

Trending News

Latest News

You May Like