மக்களே உஷார்..! உடலில் இரத்தத்தின் அளவு குறைந்தால் அனீமியா என்னும் இரத்த சோகை ஏற்படும்..!

இரத்த சோகையினால் பாதிக்கப்பட்டால் நகங்கள் மற்றும் சருமம் வெளுத்துப் போய் இருப்பதோடு, அதிகப்படியான சோர்வு, இரத்த அழுத்த குறைவு, தலைவலி, மூச்சுத்திணறல், கவனச்சிதறல் போன்ற பல அறிகுறிகள் தென்படும். நம் உடம்பில் போதுமான அளவு ஹீமோகுளோபின் உருவாவதற்கு போதுமான இரும்புச்சத்துள்ள உணவு உட்கொள்ள வேண்டும். அத்தகைய இரும்புச்சத்துக்கள் நிறைந்த உணவு பொருட்கள் குறித்தும், அவற்றில் இருக்கும் சத்துக்கள் குறித்தும் இங்கு விரிவாக பாப்போம்.
உலர் திராட்சை :
பொதுவாக, கருப்பு திராட்சை, பச்சை திராட்சை என இரண்டு வகைகள் உள்ளன. கருப்பு திராட்சையில் ஆந்தோசயனின் , பச்சை திராட்சையில் கேட்டச்சின் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் உள்ளன. ரெஸ்வெரட்ரால் என்னும் வேதியல் பொருள் திராட்சையின் விதையிலும், தோலிலும் நிறைந்துள்ளது. இது, இதயம் சம்பந்தமான நோய்கள், பக்கவாதம், நரம்புத்தளர்ச்சி வராமல் தடுக்க உதவும். ஆக்சிஜன் ரேடிக்கலை உறிஞ்சும் திறன் இதில் மூன்று மடங்கு அதிகம். 100 கிராம் உலர்ந்த திராட்சையில் 23 சதவிகிதம் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. 100 கிராம் உலர்ந்த திராட்சையை சாப்பிட்டாலே இரண்டு மில்லி கிராம் இரும்புச்சத்து கிடைத்துவிடும்.
தக்காளி :
தக்காளியில் வைட்டமின் சி மற்றும் லைகோபைன் போன்றவை வளமையாக நிறைந்துள்ளது. இரும்புச்சத்து நிறைந்த உணவை உட்கொண்டால் மட்டும் இரத்தத்தின் அளவை அதிகரிக்க முடியாது, இரும்புச்சத்தை உறிஞ்சும் வைட்டமின் சி நிறைந்த உணவையும் சேர்த்து வந்தால் தான் இரத்தத்தின் அளவு அதிகரிக்க முடியும்.
மாதுளை :
மாதுளையில் இரும்புச்சத்தைத் தவிர, கால்சியம், புரோட்டீன், நார்ச்சத்து மற்றும் பல வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. உடலில் இரத்த அளவு குறைவாக இருப்பவர்கள், மாதுளையை தினமும் சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பிச் சாப்பிடும் பழங்களில் ஒன்று, மாதுளை. நார்ச்சத்து நிறைந்தது. 100 கிராம் பழத்தில், 0.30 மில்லி கிராம் இரும்புச்சத்து இருக்கிறது. ஆக்சிஜன் ரேடிக்கலை உறிஞ்சும் திறன் இதில் அதிகம். மாதுளம்பழச் சாற்றில் தேன் கலந்து தினமும் காலை உணவுக்குப் பின்னர் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியம் மேம்படும். மாதுளையைத் தொடர்ந்து சாப்பிட்டால், மனஅழுத்தத்தில் இருந்து விடுபடலாம்.
உருளைக்கிழங்குகள் :
உருளைக்கிழங்கில் கலோரிகள் அதிகம் இருந்தாலும் இரும்புச்சத்தும் அதிகம் உள்ளது. ஆகவே இரத்த சோகை இருந்தால் தினமும் உருளைக்கிழங்கை உணவில் சேர்த்து வாருங்கள். உருளைக்கிழங்கில் ஸ்டார்ச் அதிகமாக உள்ளது. இதனை தோலை உரிக்காமல் வேக வைக்கும்போது வைட்டமின் பி, சி மற்றும் தோலில் காணப்படும் தாதுக்கள் பாதுகாக்கப்படுகின்றன. இவை இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினை அதிகரிக்க துணை புரிகிறது. மேலும் இது உடலில் இரும்புச்சத்து உறுஞ்சுதலை அதிகரிக்கிறது.
முட்டைகள் :
முட்டையில் புரதம், கொழுப்பு, வைட்டமின், இரும்பு, கால்சியம் மற்று தாது ஆகிய அனைத்துச் சத்துக்களும் இருப்பதால் இது உடலும் அதிக நன்மைகளைத் தரக்கூடியது. உடலின் ஹீமோகுளோபின் அளவு உள்ளிட்ட உடலுக்குத் தேவையான அத்தியாவசிய பல சத்துக்களும் இதனால் அதிகரிக்கக் கூடும். ஒரு கோழி முட்டையை உடைத்து விட்டுக் கிளறி, ஒரு தேக்கரண்டி அளவு நெய்யும் சேர்த்துத் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய இரத்தம் உண்டாகும். உடல் வலிமையோடு இருக்கும்.
கருப்பு எள்ளு :
இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இதனை உணவின் மேல் தூவி சாப்பிடலாம் அல்லது எள்ளு மிட்டாய் வாங்கியும் சாப்பிடலாம். இதனால் இரத்தத்தின் அளவை அதிகரிக்க முடியும்.
பீட்ரூட் :
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க பீட்ரூட் அதிகமாக பரிந்துரைக்கப்படுகிறது. இரும்பு, ஃபோலிக் அமிலம், நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் இதில் வளமையாக உள்ளது. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். முந்தைய நாள் இரவில் ஒரு பீட்ரூட்டை இரண்டாக வெட்டி அதை நீரில் போட்டு வைக்க வேண்டும். இந்த நீரை காலையில் குடித்து வந்தால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். பீட்ரூட்டை பிரெஷ் ஜூஸ் ஆக செய்தும் அருந்தலாம். மேலும் நார்ச்சத்தும் இதில் உள்ளது. எனவே பீட்ரூட்டை வாரம் ஒருமுறை தவறாமல் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கிடைத்து, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
பார்ஸ்லி :-
பார்ஸ்லியில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் ஆசிட் வளமையாக நிறைந்துள்ளது. இரத்த சோகை உள்ளவர்களுக்கு இது மிகவும் சிறப்பான உணவுப் பொருள். இதில் வைட்டமின் சி மற்றும் இதர வைட்டமின்கள் நிறைந்திருப்பதால், இவை இரத்தம் இரும்புச்சத்தை உறிஞ்ச உதவும்.
சிட்ரஸ் பழங்கள் :-
சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, அன்னாசி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் எலுமிச்சையில், இரும்புச்சத்தை உறிஞ்ச உதவும் வைட்டமின் சி வளமையாக நிறைந்துள்ளது. எனவே இவற்றை அவ்வப்போது உட்கொண்டு வந்தால், இரத்தத்தின் அளவு அதிகரித்து, இரத்த சோகையில் இருந்து விடுபடலாம்.
நெல்லிக்காய் :-
தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு, உடலில் இரத்தத்தின் அளவும் அதிகரிக்கும்.
தேன் :-
தேனில் இரும்புச்சத்து மற்றும் இதர வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் இருக்கிறது. உடலில் இரத்தணுக்களின் அளவை அதிகரிக்க வேண்டுமெனில், எலுமிச்சை ஜூஸில் தேன் சேர்த்து கலந்து, குடித்து வாருங்கள். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.