1. Home
  2. ஆரோக்கியம்

நாம் வாங்கும் மீன் நல்ல மீனா..? கெட்டுப்போன மீனா..? எப்படி கண்டுபிடிப்பது..!

1

ஒவ்வொரு வகையான மீன்களிலும், ஒவ்வொரு சத்துக்கள் இருக்கின்றன என்றாலும், சில அடிப்படையான சத்துக்கள் கிட்டத்தட்ட அனைத்து மீன்களிலுமே உள்ளன..மட்டன், சிக்கன்போல ஒரே விலை என்றில்லாமல் ஒவ்வொரு வகை மீனும் ஒவ்வொரு விலை என்பதால், எல்லாப் பொருளாதார நிலையில் இருப்பவர்களாலும் மீன்களை வாங்க முடியும். மீன் குழம்புக்காகவே வார இறுதி நாள்களை எதிர்பார்க்கிற மீன் பிரியர்கள் நம்மிடையே ஏராளம்.

சாச்சுரேட் கொழுப்பு இந்த மீன்களில் உள்ளதால் உடல் எடையை அதிகரிக்காது... மூளைக்கு மிகச்சிறந்த உணவாக மீன் திகழ்கிறது.. மனித ஆயுளையும் கூட்டுகிறது.

கண்பார்வை குறைபாடு, தைராய்டு பிரச்சனைகள் தீர்வதற்கு மீன்கள் நல்ல மருந்தாகவும் பயன்படுகின்றன.. மீன் உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயம் குறைகிறது... நரம்புத்தளர்ச்சி நோயும் நீங்குகிறது. மீன் உணவு சாப்பிட்டால் மன அழுத்த நோய் வராமல் தடுக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

புரோட்டின், விட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் என பல சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.. சிலவகை மீன்களில் அதிகளவில் ஒமேகா 3 நிறைந்துள்ளதால், இதனை சாப்பிடுமாறு மருத்துவர்களே பரிந்துரைக்கின்றனர். இந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது, உடல் எடையை சீராக வைத்து கொள்ள உதவுகிறது. இந்த கொழுப்பு அமிலங்கள் மூளை மற்றும் கண்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியமாக அமைகிறது... அத்துடன், இதயத்துக்கு ஆரோக்கியத்தை தருகிறது.
 

மீன் ஃபிரெஷ்ஷாக இருக்கிறதா என்பதைப் பெரும்பாலும் செவுள்களை நிமிர்த்திப்பார்த்துதான் தீர்மானிப்போம். செவுள்கள் ரத்தநிறத்தில் இல்லாமல் வெளிர் நிறத்தில் இருந்தால் அது கெட்டுப்போன மீன் என்பதை உறுதிசெய்துவிடலாம். அதே நேரம், ரசாயனங்கள் பூசப்பட்ட மீன்களில் செவுள்களும் ரத்த நிறத்தில்தான் இருக்கும், செவுளைப் பிளந்து அந்த இடத்தை தொட்டுப் பார்த்தால் கைகளில் பிசினைப் போலவும் ஒரு கூழ்மப் பொருளைத் தொடுவதுபோலவும் உணரமுடிந்தால் மட்டுமே அது ஃபிரெஷ் மீன்.

அதேபோல மீன்களை வாங்கும்போது மீனின் சதைப்பகுதியை கை விரல்களால் அழுத்திப்பார்க்க வேண்டும். அப்படிப் பார்க்கும்போது மீன் விரைப்பாக, தடிமனாக இருக்க வேண்டும். தொளதொளவென இருக்குமேயானால் அது கெட்டுப்போன மீன்.

மீனின் தலைப்பகுதியைக் கைகளால் தூக்கிப் பார்த்தால், மீனின் வால்பகுதி கீழே தொய்ந்து தொங்கிய நிலையில் இருந்தால், அது கெட்டுப்போன மீன். கெடாத மீனாக இருந்தால் மீனின் தலைப்பகுதியைத் தூக்கும்போது வால் பகுதி விரைப்பாகத் தெரியும்.

ஃபார்மலின் ரசாயனம் பூசப்பட்ட மீன்களில் இருந்து மருந்து வாடை வீசும். அதை வைத்தே அது ரசாயனம் கலக்கப்பட்டது எனக் கண்டுபிடித்து விட முடியும்.

மீனின் கண்கள் பளபளப்பாக இருக்க வேண்டும். ரத்த நிறத்திலோ, மங்கிய வெளிர் நிறத்திலோ கண்கள் இருக்குமேயானால் அது நெடுநாள் ஐஸில் வைக்கப்பட்ட மீனாகத்தான் இருக்கும்.

கடல் மீன்களுக்கு மட்டுமல்ல, ஆறு மற்றும் குளங்களில் பிடித்த மீன்களையும் மேற்கூறிய வகைகளில் பரிசோதித்துப் பார்த்தே வாங்க வேண்டும். குளத்து மீன்களை ஐஸ்கட்டியில் வைத்தால் சுருங்கிவிடும். ஆகையால் குளத்து மீன்களை ஐஸில் வைத்து உண்ணக் கூடாது. தவிர, அவை இறந்துவிட்டாலும் உண்ணக் கூடாது. உயிருடன் பிடித்தே, சமைத்து உண்ண வேண்டும்.

ஒருவேளை கெட்டுப்போன மீன் என்று தெரியாமல் சமைத்து வைத்துவிட்டாலும், அதை உண்ணும்போதே தெரிந்துவிடும். அதனுடைய சதைப்பகுதி மாவுபோல இருக்கும். இதைச் சாப்பிட்டால் ஃபுட் பாய்சன் ஆவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

மீன்களை வாங்கிய பிறகு, சமைப்பதற்கு சில மணி நேரம் ஆகும் என்றால், சுத்தம் செய்யப்பட்ட மீன்களை புளிக்கரைசலில் அல்லது எலுமிச்சைச் சாறு கலந்த நீரில் ஊறவைத்தால் சமைக்கும்வரையிலும் கெடாமல் இருக்கும்.

மீன்களைச் சுத்தம் செய்ததும் உப்பு, மஞ்சள் தூள் போட்டு மூன்று முறை அலசினால், ஒருவேளை ரசாயனங்கள் பூசப்பட்டிருந்தாலும் அவற்றால் ஏற்படுகிற விளைவுகள் குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

வெயில் காலங்களில் மீன்கள் வெகு சீக்கிரமே கெட்டுவிடும். அதனால், அந்த நேரத்தில் மீன்கள் வாங்கும்போது அதிக கவனத்தோடு இருக்க வேண்டும்.

Trending News

Latest News

You May Like