1. Home
  2. ஆரோக்கியம்

ஜாம் ஆரோக்கியமானதா? குழந்தைகளுக்கு கொடுக்கலாமா ?

1

குழந்தைகளுக்கு ஜாம் என்றால் மிகவும் பிடிக்கும்..நம்மில் பலர் அவசரமாக வெளியே செல்லும் போதோ அல்லது அலுவலகத்திற்கு செல்லும் போதோ, ஜாம் வீட்டில் இருந்தால், அப்போது பிரட் அல்லது சப்பாத்தியை செய்து கொண்டு, அத்துடன் ஜாம் தொட்டுக் கொண்டு சாப்பிடுவோம். 

அதே போல் அடம்பிடிக்கும் குழந்தைகள் ஆர்வத்துடன் சாப்பிடும் பட்டியலில் முக்கிய இடத்தில் ஜாம் உள்ளது. 'குழந்தைகள் அடம்பிடிக்காமல் சீக்கிரமாக சாப்பிட்டால் சரிதான்; வேலைப்பளு எளிதாக முடிகிறதே' என்ற மனநிலைக்கு பெற்றோரும் தள்ளப்படுவதால், ஜாம் சாப்பிடுவது தொடர்கதையாக உள்ளது.

காலை, இரவு மட்டுமின்றி மதியம் லன்ச் பாக்ஸ்க்கு சப்பாத்தி, ஜாம் கொண்டு செல்லும் குழந்தைகளும் ஆங்காங்கே கணிசமாக உள்ளனர். ஆனால், ஜாம் ஆரோக்கியமானதா? என்றால் நிச்சயமாக இல்லை என்பது தான் டாக்டர்களின் அட்வைஸ். ஒரு டேபிள் ஸ்பூன் ஜாம் என்பது இரண்டு டேபிள் ஸ்பூன் சர்க்கரைக்கு சமமானது.

தயாரிப்பின் போது ஜாமில் உள்ள பழங்கள் வேக வைக்கப்பட்டு, சம அளவு சர்க்கரையுடன் கலக்கப்படுகிறது. கொதிக்க வைக்கும் போது பழங்களில் உள்ள தண்ணீரின் அளவு குறைவது மட்டுமின்றி, அவற்றிலுள்ள சில ஊட்டச்சத்துகள் அழிகின்றன. உதாரணமாக, வைட்டமின் சி போன்ற வெப்பத்தால் பாதிக்கப்படக்கூடிய ஊட்டச்சத்துகள் ஜாம் தயாரிப்பில் முற்றிலும் அழிக்கப்படுகின்றன.

தொடர்ச்சியாக சர்க்கரை அளவு அதிகமுள்ள ஜாம் சாப்பிடும் குழந்தைகளுக்கு, பருவ வயதை எட்டியவுடன் உடல் பருமன் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், பின்னாட்களில் ரத்த அழுத்தம், நீரிழிவு உட்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படவும் வழிவகுக்கிறது.

அதேவேளையில், அடிக்கடி ஜாமை சாப்பிடும்போது ஹார்மோன்களின் தூண்டுதலால் பிற உணவுகளை சாப்பிட தயக்கமடைவர். இதனால், தேவையான ஆரோக்கிய சத்துகள் சரிவர கிடைப்பதில்லை. ஜாமில் ஒருசில ஊட்டச்சத்துகள் இருப்பினும், ஒரு முழு பழத்துடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே, சர்க்கரையின் அளவை கருத்தில் கொண்டு 8 அல்லது 10 வயதாகும் வரை குழந்தைகளுக்கு ஜாம் தருவதை முடிந்தளவு தவிர்க்கலாம்.

Trending News

Latest News

You May Like