தினமும் காலை உணவுடன் பாதாம் அரிசி கஞ்சி எடுத்துக்கொண்டால்...

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே நேரமின்றி ஓடிக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் ஆரோக்யமான உணவா அல்லது நம் உடலுக்கு அவசியமான உணவா என்றா பார்க்கிறோம். உணவை ரசித்து சாப்பிடக் கூட நேரமில்லாததால் தான் நம் உடலை பல நோய்கள் ரசித்துக் கொண்டிருக்கிறது. வேகமான உலகில் வேகமான உணவை சாப்பிட்டு, வேகமாக படுக்கையில் விழுந்து கிடக்கும் போது ஆரோக்யமாக சாப்பிட்டிருக்கலாமோ என்ற எண்ணம் வருவது இயற்கைதான். அதிக சத்துக்களைக் கொண்டு அதிக நேரம் பிடிக்காமல் செய்யக்கூடிய ஆரோக்ய உணவுகள் நம் வசம் கொட்டிக்கிடக்கிறது. அவற்றில் ஒன்று பாதாம். சற்று விலை அதிகமானது என்றாலும் உடலுக்கு ஆரோக்யம் என்னும் வகையில் அவசியம்தான். பலவீனமான உடலை பலப்படுத்தும் சக்தி பாதாமுக்கு உண்டு. தினமும் காலை உணவுடன் பாதாம் அரிசி கஞ்சி எடுத்துக்கொண்டால் உடலுக்கு தேவையான அத்தனைச் சத்துக்களும் குடும்பத்தில் அனைவருக்கும் கிடைக்கும்.
பாதாம் அரிசி கஞ்சி (5 பேருக்கானது)
தேவை: பாதாம் - 6 அல்லது 8, புழுங்கல் அரிசி -1 மேசைக்கரண்டி, நாட்டுச்சர்க்கரை - இனிப்புக்கேற்ப, உப்பு - தேவைக்கு, பால் - 2 தம்ளர்.
செய்முறை:
முன் தினம் இரவு பாதாமை சிறிது நீரில் ஊறவைக்கவும். அரிசியையும் நன்றாகக் களைந்து சிறிது நீர் சேர்த்து ஊறவைக்கவும். மறுநாள் மிக்ஸியில் (அம்மியின் பயன் பெருமளவு குறைந்துவிட்டதால்) ஊறவைத்த அரிசியை மைய அரைத்து, பாதாமையும் தோல் உரிக்காமல் சேர்த்து மைய அரைத்தெடுக்கவும். அகன்ற பாத்திரத்தில் அரைத்த விழுதைச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பை மிதமானத்தீயில் வைத்து கைவிடாமல் கிளறவும். நன்றாக கொதி வந்ததும் பால் விட்டு, இனிப்புக்கேற்ப நாட்டுச்சர்க்கரை சேர்த்து எல்லாம் நன்றாக கலந்ததும் இறக்கி ஆறியதும் பரிமாறவும். நாட்டுச்சர்க்கரைக்குப் பதில் உப்பும் சேர்க்கலாம்.
காலை உணவை மறுத்து அடம்பிடிக்கும் குழந்தைகளின் ஆரோக்யத்தைக் காக்கும் பாதாம் அரிசி கஞ்சியை வாரம் 3 முறை செய்து கொடுத்தால் குழந்தைகளின் வளர்ச்சியும் ஆரோக்யமும் அதிகரிக்கும். குழந்தைகள் சுறுசுறுப்புடனும் அறிவுப்பூர்வமாக வளைய வருவார்கள். மூளைக்குச் செல்லும் நரம்புகளைத் தூண்டும் ஆற்றல் ஆரோக்யமான உணவுகளுக்கு உண்டு. அந்த வகையில் மருத்துவர்கள் மதிப்பெண் அதிகம் கொடுப்பது பாதாமுக்குத் தான். இல்லத்தரசிகளே.. ஒரு முறை இந்தக் கஞ்சியை ட்ரை செய்யுங்கள். இதன் அபரிமித ருசி உங்கள் குடும்பத்தையே கட்டுக்குள் வைக்கும்.