இதை தெரிஞ்சிக்கோங்க..! மழைக்காலங்களில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா? இல்லையா ?
மழைக் காலங்களில் வாழைப்பழம் சாப்பிட்டால் சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம் என்றும், பிற நோய்கள் தாக்கக் கூடும் என்ற பொதுவான எச்சரிக்கை உணர்வு எல்லோர் மனதிலும் உள்ளது. ஆனால், உண்மையில் மழைக்காலங்களில் வாழைப்பழம் சாப்பிடலாமா கூடாதா..?
பொதுவாக மழைக்காலங்களில் நீர் சார்ந்த மற்றும் சுவாசம் சார்ந்த நோய்கள் நம்மை தாக்கக் கூடும் என்ற சூழலில், நாம் என்ன உணவு உண்ணப் போகிறோம் என்பது குறித்து மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். நீங்கள் தினசரி வாழைப்பழம் சாப்பிடுபவர் என்றால் நீங்களும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் வாழைப்பழம் சாப்பிடுவது முற்றிலும் பாதுகாப்பானது. அது பல வகைகளில் நம் உடலுக்கு நன்மை தரக் கூடியது. ஆனால், எப்போது சாப்பிட வேண்டும், எப்படி சாப்பிட வேண்டும் என்பதே முக்கியமானது.
ஏன் எச்சரிக்கை தேவை? அமினோ அமிலங்கள், விட்டமின் பி6, சி மற்றும் நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், மேங்கனீஸ் போன்ற சத்துக்கள் நிறைந்த வாழைப்பழம் நம் ஆரோக்கியத்திற்கு நல்லது. நமது மூளையின் செயல்பாடுகளை ஊக்குவிக்க இது உதவும். இதய நோய் பாதிப்புகள் மற்றும் ஸ்டிரோக் போன்றவற்றை தடுக்கிறது. அதே சமயம், வாழைப்பழத்தை தவறான சமயத்தில் சாப்பிடக் கூடாது மற்றும் சில வகை உணவுகளோடு சேர்த்து சாப்பிடக் கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
எப்போது தவிர்க்க வேண்டும்? செரிமானக் கோளாறு, இருமல் அல்லது ஆஸ்துமா போன்ற பாதிப்பு கொண்டிருக்கும் நபர்கள் இரவில் இதை சாப்பிடக் கூடாது. இது உடம்பில் கபம் உண்டாக காரணமாகிவிடும். இதைத் தொடர்ந்து சளி பிடிக்கும். ஆகவே பகல் நேரத்தில் சாப்பிடவும். வெறும் வயிற்றில் சாப்பிடலாமா? காலை உடற்பயிற்சி செய்யும் முன்பாக வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் பலருக்கு இருக்கும். ஆனால், இது ஆசிட் ரிஃப்ளெக்ஸ் என்னும் எதுக்களித்தல் பிரச்சனையை உண்டாக்கும். பொட்டாசியம் இருப்பதால் இதய நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது.