இதை தெரிஞ்சிக்கோங்க..! சட்னியில் உப்பு அதிகமானால் எப்படி சரி செய்வது..!
ரசத்தில் புளிப்பு கூடினால், ஒரு கடாயில் சீரகம், பூண்டு, வெங்காயத்தைப் போட்டு தாளித்து அதனுடன் பருப்பு வேகவைத்த தண்ணீர் சேர்க்கவும். இதை தயார் செய்து வைத்திருக்கும் ரசத்தில் ஊற்றி கலக்கவும். இப்போது ரசத்தில் உள்ள புளிப்புச் சுவை குறையும்.
சட்னியில் காரம் அதிகமாக இருந்தால் கேரட், தக்காளி, பீட்ரூட் அல்லது சவ்சவ் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு காயை நன்றாக அரைத்து, எண்ணெய்யில் வதக்கி சேர்க்கவும்.தேங்காய் சட்னியில் காரம் அல்லது உப்பு அதிகமானால், பொட்டுக்கடலை மாவை சிறிதளவு சேர்த்துக் கலக்கவும்.
இட்லி, தோசைமாவில் உப்பு அதிகமானால் ஒரு கரண்டி ரவையை வெறும் வாணலியில் வறுத்து ஐந்துநிமிடம் பாலில் ஊறவிட்டு பின் மாவுடன் சேர்க்க உப்பு குறைந்து சரியாகவிடும்.
குழம்பு, சாம்பார், ரசம் போன்றவற்றில் நெய்யோ, எண்ணெய்யோ சேர்த்தால் காரம் குறைந்து சுவையும் மணமும் கூடி விடும்.
ஜூஸ் தயாரிக்கும்போது ஐஸ்கட்டியின் அளவு கூடினால், சுவை குறையும். அத்தகைய சமயத்தில் அதில் சிறிதளவு சிட்ரஸ் பழச்சாறு, சப்ஜா விதைகள், வெள்ளரி விதை அல்லது இளநீர் ஆகியவற்றை சேர்க்கலாம்.
அசைவ சமையலில், இறைச்சி அதிகமாக வெந்துவிட்டால், ஆலிவ் எண்ணெய், இனிப்பு மற்றும் காரம் கலந்த சாஸ் சேர்த்து நன்றாகக் கிளறி பரிமாறலாம். உணவை எப்போதும் மிதமான சூட்டில் வைத்திருந்தால் இறைச்சி மென்மையாகவே இருக்கும். அசைவ உணவுகளை சமைத்த உடனே ஹாட் பேக்கில் போட்டு வைக்கலாம். இறைச்சியை மீண்டும் மீண்டும் சூடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது.
ஊத்தப்பம் தயாரிக்கும்போது சுற்றிலும் எண்ணெய் ஊற்றியதும் உடனே ஒரு மூடி போட்டு மூடவும். சில வினாடிகளுக்குப் பின்னர் மூடியை எடுத்துப் பார்த்தால் இரண்டு புறமும் சீராக வெந்திருப்பதோடு, ஊத்தப்பம் மிருதுவாகவும் இருக்கும்.
மட்டர் பன்னீர், சோலே மசாலா, பாவ் பாஜி போன்றவற்றில் காரம் அதிகமாகிவிட்டால் ஃபிரெஷ் க்ரீம் அல்லது சூடான பாலில் வெண்ணெய் சேர்த்து உருக்கி அதைச் சேர்த்துவிட காரம் குறைந்து சுவை அதிகமாகிவிடும்.
பிரியாணியில் உப்பு அல்லது காரம் கூடினால், வெங்காயத்தை பொடிதாக நறுக்கி எண்ணெய்யில் வறுத்து சேர்க்கவும். இது பிரியாணியில் உள்ள உப்பை கட்டுப்படுத்தும். காரத்தைக் குறைக்க உலர்ந்த திராட்சையை நெய்யில் வதக்கி சேர்க்கவும். வெல்லப்பாகு, நாட்டுச் சர்க்கரை, எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை சேர்த்து கலந்தாலும் பிரியாணியில் காரத்தை கட்டுப்படுத்த முடியும்.
காரக்குழம்பு தயாரிக்கும்போது காரம் அல்லது உப்பு சுவை அதிகமாகிவிட்டால், சிறிதளவு சின்ன வெங்காயத்தை எண்ணெய்யில் வதக்கி குழம்பில் சேர்க்கலாம். தயிர் அல்லது தேங்காய்ப்பாலை குழம்பில் கலந்து சிறிது நேரம் கொதிக்க வைத்தாலும் காரம் கட்டுப்படும். உருளைக்கிழங்கு அல்லது சவ்சவ் காயை பெரிய துண்டுகளாக வெட்டி குழம்பில் போட்டு 5 முதல் 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். உருளைக்கிழங்கு குழம்பில் உள்ள காரத்தையும், உப்பையும் உறிஞ்சிக்கொள்ளும். சவ்சவ் காயில் இருக்கும் நீர்ச்சத்து குழம்புடன் கலந்து காரம் மற்றும் உப்பை சமநிலைப்படுத்தும்.
வற்றல் குழம்பு, காரக்குழம்பு போன்றவற்றில் தக்காளியை அரைத்துச் சேர்த்து கொதிக்கவிட்டால் காரம் குறைந்து சுவை கூடிவிடும்.
கலவை சாதத்தில் காரம் அதிகமாகிவிட்டால் எண்ணெய் ஒரு தேக்கரண்டி காய்ச்சி ஊற்றிக் கலந்துவிட்டு, பின் வடாம், அப்பளம் இவற்றைப் பொரித்துத் தூளாக்கி தூவி பரிமாற காரம் குறைந்துவிடும்.
பொடி வகைகளில் உப்பு அதிகமாகிவிட்டால் அதிலுள்ள பருப்பு எதுவோ அதைக் கொஞ்சம் வாணலியில் வறுத்துப் பொடித்துச் சேர்க்க உப்பு குறைந்துவிடும்.
இரண்டு தேக்கரண்டி அரிசி, அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு இரண்டையும் அரைமணி நேரம் ஊறவைத்து, மிக்ஸியில் மைய அரைத்து தோசை மாவில் சேர்த்துவிட உப்பு சரியாகிவிடும்.
எந்த உணவு பொருளையும் அலசாமல் பயன்படுத்தக் கூடாது. சிலர் புளியை தண்ணீர் ஊற்றி கரைப்பார்கள். அதற்கு முன்னால் அதை ஒரு முறை தண்ணீர் சேர்த்து அலசி கீழே ஊற்றிவிட்டு, அடுத்து தண்ணீர் ஊற்றி கரைக்க வேண்டும். போலவே, முட்டைகளை நன்றாகக் கழுவிய பின்னர் தான் வேக வைக்க வேண்டும். கீரையில் மண் மற்றும் தூசி தும்பு நிறைய இருக்கும். எனவே கீரையை இரண்டு தடைவையாவது நிச்சயம் கழுவ வேண்டும்.
காலையில் சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்று சிலர் வெங்காயத்தை முந்தின நாள் இரவே நறுக்கி வைத்துக் கொள்வார்கள். அது மிகப்பெரிய தவறாகும். வெங்காயத்துக்கு கிருமிகளை கவர்ந்திழுக்கும் தன்மை உள்ளது. அதனால், வெங்காயத்தை நறுக்கியதும், அது காற்றில் இருக்கும் அனைத்து கிருமிகளையும் கவர்ந்திழுத்து வைத்துக் கொள்ளும். இதை ப்ரிட்ஜில் வைத்தாலும் சரி நன்றாக மூடி வைத்தாலும் சரி நறுக்கி சில மணி நேரங்களான வெங்காயத்தைப் பயன்படுத்துவது நல்லது இல்லை.
இஞ்சியை ஒருபோதும் தோலுடன் சேர்த்து சமைக்கவே கூடாது. கீரையோடு புளியைச் சேர்க்கக் கூடாது.
எந்த உணவு பொருளையும் அதிக நேரம் வதக்கவோ, கருக வைக்கவோ கூடாது. எல்லோருக்குமே உணவு பொருள் என்பது நன்கு சிவந்து இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால், அது உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே, எந்த உணவையும் அதிகமாக வதக்கி கருக வைக்க வேண்டாம். கருகிய அல்லது தீய்ந்த உணவுப் பொருள் புற்றுநோயை ஏற்படுத்தும் என்று சொகிறது ஒரு புதிய ஆராய்ச்சி.
நான்ஸ்டிக் தவாவை இரும்பு தேய்ப்பானைப் பயன்படுத்தி தேய்த்துக் கழுவக் கூடாது.