இதை தெரிஞ்சிக்கோங்க.. குழந்தைகளுக்கு பழமாகக் கொடுக்கலாமா?

பழங்கள் அனைவருக்கும் ஆரோக்கியத்தைக் கொடுக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். வெவ்வேறு வண்ணப் பழங்கள் வெவ்வேறு ஊட்டச்சத்துக்களையும், வெவ்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் தேவையான ஊட்டச்சத்து தேவைகள் மாறுபடும்.
ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வண்ணங்களில் பலவிதமான பழங்களை நாம் சாப்பிடுவது முக்கியம். எனவே, குழந்தைகளுக்கு எந்தெந்தப் பழங்களை கொடுக்கலாம் என்று தெரிந்துக் கொள்வோம். ஸ்ட்ராபெர்ரி, தர்பூசணி, ராஸ்பெர்ரி, செர்ரி, ஆப்பிள், ஆரஞ்சு, மாம்பழம், பீச், ஆப்ரிகாட், அன்னாசி, வாழைப்பழம், எலுமிச்சை, கிவி, ஆப்பிள், திராட்சை, பேரிக்காய், நெல்லிக்காய், பிளம்ஸ், திராட்சை என பல பழங்களையும் கொடுக்கலாம்.
சரி, குழந்தைகளுக்கு பழமாகக் கொடுக்கலாமா? அல்லது சாறு பிழிந்து அதன் சத்துக்களை மட்டும் கொடுக்கலாமா என்ற சந்தேகமும் எழுகிறது. இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பழங்களாகவே கொடுக்கலாம். ஆனால், குழந்தைகள் சாப்பிடமாட்டார்களோ என்ற சந்தேகத்திலேயே பெற்றோர் சாறு வடிவில் பழங்களைக் கொடுக்கின்றனர். அதேபோல், குழந்தைகள் வளர வளர, அவர்கள் பழங்களை உண்ணும் அளவும் குறைந்து போய்விடுகிறது. பொதுவாக பழச்சாறுகளில் அதிக ஆற்றல் இருந்தாலும், பழத்தின் அடிப்படை நன்மையான நார்ச்சத்து குறைந்துவிடுவதால், முழுப் பயனும் கிடைப்பதில்லை. இதனால், பற்கள் சேதமடையும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. எனவே, பழத்தை சாறாக கொடுப்பதைவிட, அப்படியே சாப்பிட பழக்க வேண்டும்.
அதேபோல, புதியதாக விளைந்த பழங்கள் கிடைக்கவில்லை என்றால், உலர் பழங்களையாவது கொடுக்கவேண்டும். பழங்களை குழந்தைகளுக்கு கொடுப்பது தொடர்பான தவறான கருத்துக்களும் கட்டுக்கதைகளும் உலா வருகின்றன. சர்க்கரைச்சத்து அதிகமாக இருப்பதால், பழங்களை குழந்தைகளுக்கு குறைவாக கொடுப்பதை உதாரணமாக சொல்லலாம். குழந்தைகளின் பற்கள் சேதமடைந்துவிடும் என்பதால், பழங்களை கொடுக்காமல் இருக்கின்றனர். உண்மையில் இது தவறான எண்ணம் ஆகும்.
பழங்களில் உள்ள சர்க்கரையானது, செயற்கை சர்க்கரையைப்போல, தீங்கு செய்வதில்லை. பழங்களில் சர்க்கரைச் சத்து மட்டுமல்ல, வேறுபல முக்கியமான ஊட்டச்சத்துக்களும் உள்ளன. பழங்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள், குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது என்பதோடு, நோய் மற்றும் தொற்றுநோயிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது.",