1. Home
  2. ஆரோக்கியம்

மண் பாத்திரத்தில் சமைக்கப்படும் உணவுகள் ஏன் நல்லது தெரியுமா ?

1

இன்று நவீன யுகத்தில்  நாகரீகம் என்ற பெயரில் நாம் இலகுவாக செய்யக்கூடிய வகையில் பாத்திரங்கள் உருமாறி இருக்கிறது. குறிப்பாக நான் ஸ்டிக் பாத்திரங்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது என கூறலாம். 

இவை நமக்கு ஆரோக்கியத்தை தருகிறதா? என்றால் அவை கேள்விக்குறியாக தான் உள்ளது. நமது முன்னோர்கள் எவ்வளவு ஆரோக்கியமாக வாழ்ந்திருக்கிறார்கள். 

நோய்கள் எதுவும் இல்லாமல் இருந்திருக்கிறார்கள் என்று என்றாவது நீங்கள் யோசித்துப் பார்த்தது உண்டா? அதற்கு என்ன காரணம் என்று நீங்கள் சிந்தித்துப் பார்த்தால் உங்களுக்கு மிக எளிதில் விடை கிடைக்கும்.

இன்று சமையல் அறைகளில் அதிக அளவு பயன்படுத்தப்படும் அலுமினிய குக்கர்கள் அனைத்தும் உடலுக்கு பாதகம் செய்யக்கூடிய பொருட்கள் தான் என்பது உங்களுக்கு தெரியாதா?

இதனால் ஏற்படுகின்ற பல விளைவுகளை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். குறிப்பாக அதிகரித்து இருக்கும் புற்று நோய்களுக்கு காரணமாக கூட இவற்றை நாம் கூறலாம்.

ஆனால் நமது முன்னோர்கள் பயன்படுத்திய மண் பானைகள் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுத்தது. அறிவியல் வளராத காலத்தில் அவர்கள் எப்படி இந்த மண் பானைகளை சமைகளுக்கு பயன்படுத்தினார்கள், என்பதை நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.

ஆரம்ப காலத்தில் நமது முன்னோர்கள் பெரும்பாலும் மண் பாத்திரங்களை தான் சமையலுக்கு பயன்படுத்தினார்கள். இந்த மண்பாண்டங்களில் சமைக்கும் போது உணவின் மீது வெப்பம் மெதுவாகவும், ஒரே சீராகவும் பரவுவதால் சத்துக்கள் அழியாமல் சமைக்க முடியும்.

அதுமட்டுமல்லாமல் மண் பாத்திரங்களில் இருக்கும் நுண் துளைகள் மூலம் நீராவியும், காற்றும் உணவில் ஊடுருவதால் சரியான பதத்தில் வைட்டமின்கள் நம் உடலுக்கு கிடைக்கும்.

மேலும் மண் பாத்திரத்தில் சமைக்கப்படும் உணவுகள் பல மணி நேரம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். மண் பாத்திரத்தில் சமைக்கும் போது எண்ணெய் பயன்பாடும் குறைவாகவே இருக்கும்.

மண் பாத்திரத்தில் சமைப்பதின் மூலம் உணவில் இருக்கும் அமிலத்தன்மை சமப்படுத்தப்படும். உப்பு, புளி சுவையுள்ள உணவுகளை சமைக்கும் போது உலோகப் பாத்திரத்தில் சமைப்பதற்கு பதிலாக மண் பாண்டத்தில் சமைப்பதால் எந்த வேதி மாற்றமும் ஏற்படாது.

  அன்றாடம் ஒரு கீரையைச் சாப்பிட வேண்டும் என்று  மருத்துவர் சொன்னதை பின்பற்றும் இல்லத்தரசிகள் குக்கரின் உபாயத்தால் தான்  கீரையை வேக வைக்கிறார்கள். கீரையும் வெந்துவிடுகிறது. கூடவே சத்துக்களும் அழிந்து விடுகின்றன. பதமாய் பக்குவமாய் சமைப்பதில் நம் முன்னோர்கள் அனுபவமிக்கவர்கள்.  எதை எப்படி செய்து சாப்பிட்டால் ருசிக்கும். சத்து கொடுக்கும் என்பதையும் உணர்ந்திருந்தார்கள்.   

  மண் பாத்திரத்தில் சமைக்கும்போது வெப்பமானது அனைத்து இடங்களுக்கும் ஒரே சீராக பரவுகிறது. மண்பாத்திரங்களில் நுண் துளைகள் இருக்கின்றன. இதன் மூலம் காற்றும் நீராவியும் உணவில் ஊடுருவி   சரியான முறையில் சமைக்க உதவுகின்றன.  இதனால்  மண் பாத்திரங்களில் எந்த உணவைச் சமைத்தாலும் ஆவியில் வேக வைத்த உணவைப் போன்ற  பலனைத் தருகிறது. சத்துக்கள் இழக்காமல் செரிமானம் ஆகவும் துணைபுரிகின்றன. உணவை சரியான முறையில் சமைக்க மண்பாத்திரங்களே முதலிடம் பிடிக்கின்றன.

மண் பாத்திரங்களில் சமைக்கும் போது அதிகளவு எண்ணெய் தேவைப்படாது.   அடுப்பை அணைத்த பின்பும் குழம்பு மண்பானையில் கொதித்துக் கொண்டிருக்கும். குறிப்பாக காரக்குழம்பு, மீன் குழம்பு மண்சட்டியில் வைக்கும் போது அடுப்பை அணைத்து நீண்ட நேரம் வரை  குழம்பு கொதிப்பதைப் பார்க்கவே  நன்றாக இருக்கும். சமைக்கும்போது உப்பு, புளி போன்ற பொருள்கள் உணவுடன் வினை புரிந்து அமிலத்தை உண்டாக்கும். உலோகங்களில் சமைக்கும் போது இவை கெடுதலைத் தரும். ஆனால் மண்பானைகள் அமிலத்தன்மையைச் சமன்படுத்தும் சக்தி கொண்டவை.

மண்பாண்டத்தில் செய்யப்படும் சமையலில்  உணவுப் பொருள்களின் சுவையை இயல்பாகவே உணரலாம். சமைக்கும் போது உணவில் இருக்கும் சத்துக்கள் ஆவியாகும். குறிப்பாக பச்சைக்காய்கறிகள்  சமைக்கும்போது இதிலுள்ள குளோரோஃபில் ஆவியாகும் தன்மை கொண்டது. மண் பாத்திரங்களில் சமைக் கும் போது மட்டுமே இவற்றின் சத்து சிதையாமல் காக்கப்படும். ருசியும் குறையாது.

 அப்பத்தாவின் கைவண்ணமும், அம்மாச்சியின் மணக்கும் மீன்குழம்பு ருசியும் கைப்பக்குவத்தைத் தாண்டி, மண்சட்டியில் சமைப்பதால் கூட இருக்கலாம் என்றே சொல்லலாம். நமது முன்னோர்கள் பொங்கல் பானையில் வைக்கும் பொங்கலை நான்கு நாட்கள் வரை  வைத்து சாப்பிடுவார்கள்.  பொங்கலன்று செய்யும் கதம்ப சாம்பார்  பத்து நாள்கள்  ஆனாலும்    சுண்ட  வைத்து சுண்ட வைத்துச் சாப்பிடுவார்கள்.   மண் பானைகள் நன்மை தரும் பாக்டீரியாக்களை உற்பத்தி செய்யும். சீரான வெப்பநிலையைக் கொண்டிருப்பதால் மண் பாத்திரங்களில் நீண்ட நேரம் வரை உணவுப்பொருள் கெடாமல் இருப்பதும் காரணம்.

  . மண் பானைகளில் குடிநீர் இயற்கையாகவே குளிர்ச்சியாக இருக்கும் காரணம் இதன் நுண் துளைகளின் வழியே உள்ளே இருக்கும் நீர் ஆவியாகிக் கொண்டே இருக்கும். பானை வெப்பம், உள்ளிருக்கும் நீரின் வெப்பம் ஆவியாகிக்கொண்டே இருப்பதால் நீர் குளிர்ச்சியாக இருக்கிறது. இயற்கை கொடுத்த  ஓசோனை பாதிக்காத  குளிர்சாதனமே மண்பாத்திரங்கள் என்று சொல்லலாம்.  

சோறு ஆக்க அடிசிற் பானை, தானியம் சேர்க்க அஃகப் பானை, இரும்பு உருக்க எஃகு பானை, நீரை வடிகட்ட வடிநீர் பானை, துணி அவிக்க வெள்ளாவிப் பானை, திருமணச் சடங்கின் போது அரசாணிப்பானை என மண்பானைகளில் மட்டும்  70க்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. வாட்டர் கேன், இட்லி பானை, குக்கர், டின்னர் செட், தயிர் மொந்தை, வாணலி எல்லாமே மண்ணால் செய்யப் பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது வாட்டர் பியூரிஃபையர், மின்சாரம் இல்லாமல் செயல்படும்  ஃப்ரிட்ஜ் கூட வந்துவிட்டது. ஆரோக்கியத்தை விரும்பும் மக்கள் மண் பாத்திரங்களை ஆர்வத்தோடு வாங்கிச் செல்கிறார்கள்.

உதாரணத்துக்கு ஒன்று… முருங்கைக் காம்புகளைச் சிறிதாக நறுக்கி  தண்ணீரில் அலசி மண்சட்டியில் நன்றாக வேகவைத்து கடைந்து சிறிது மிளகுத்தூள், உப்புத்தூள் சேர்த்து குடித்துவாருங்கள். ஒரு மாதம் கழித்து  உங்கள் கால்சியம் அளவையும் பரிசோதியுங்கள்.  மருந்தாவது, மாத்திரையாவது.. மண்சட்டி போதும் என்று  சொல்வீர்கள்.

அறுசுவையான உணவு ஆரோக்கியமாய் கிடைக்க மண்பாத்திரங்களில் சமைக்கும் சமையலே சிறந்தது என்கிறார்கள்  இயற்கை மருத்துவர்கள்.

Trending News

Latest News

You May Like