இது தெரியுமா ? கை முட்டிகளில் உள்ள கருமை நிறம் மறைய டிப்ஸ்..!
உடலில் கடினமான சருமம் என்பது மூட்டுகள் இருக்கும் பகுதிதான். கை மூட்டு, கால் மூட்டு, மணிக்கட்டு,பாதத்தில் இருக்கும் கால் கீழ் மூட்டு (குதிகால்) போன்ற பகுதிகளில் இருக்கும் சருமம் தடித்து கருப்பாக இருக்கும்.
குழந்தைப் பருவத்தில் தவழ்ந்து வந்ததும், கை மூட்டுகளை மேசைகளில் ஊன்றி வைப்பதும் மூட்டுகளில் கருமையை மேலும் உண்டாக்கிவிடுகிறது. இவை தவிர உடலில் வைட்டமின் பி 12 பற்றாக்குறையும் கூட கருமையை அதிகரித்துவிடக்கூடும். குழந்தைப்பருவத்திலேயே உரிய பராமரிப்பு இல்லாத சூழலில் இதை நிரந்தரமாக நீக்க முடியாது என்றாலும் இந்த இடம் மேலும் கருப்பாகாமல் இருக்கவும் அவை குறையவும் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே சரி செய்யலாம்.
ஒரு கொய்யாப்பழம் எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்தால் ‘ஸ்க்ரப்’ போல வரும். அத்துடன் ஒரு எலுமிச்சைப் பழத்தின் சாறை எடுத்துக் கலந்து கை, கால், மூட்டுகளில் நன்கு தேய்த்து மசாஜ் செய்து நன்றாக காய்ந்ததும் கழுவவும்.பிறகு அந்த இடத்தில் மாய்ஸ்சரைசர் பூசவும். இவ்வாறு தொடர்ந்து 2 வாரம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். பால், தேன், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கலக்கி, கருப்பான இடங்களில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும்.
இதுவும் விரைவில் நல்ல பலனைத்தரும். தேவைப்பட்டால் பாதாம் பவுடர் சேர்த்துக் கொள்ளலாம். ஆரஞ்சு தோல் பவுடர், பால் இவற்றை சம அளவில் எடுத்து ஒன்றாக குழைத்து முட்டிகளில் பூசி 15 நிமிடத்துக்கு பிறகு கழுவி வந்தாலும் படிப்படியாக கருப்பு நிறம் மாறும். இதனை தினமும் செய்து வர வேண்டும்.
எலுமிச்சை சாறு: கை, கால் முட்டிகளில் கருப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சப்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளித்து வர நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும்.
உருளைக்கிழங்கு: உருளைகிழங்கு துண்டுகளை சருமத்தின் கருமை மற்றும் தழும்புகள் நிறைந்த இடங்களில், முட்டிகளின் கருமை நிறைந்த பாகங்களில் பூசி 15-30 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். இது சருமத்தின் கருமையை போக்கி, உடல் பொலிவை ஏற்படுத்த உதவும்.
தயிர் - மஞ்சள் பேக்: சருமத்துக்கு தயிர் பயன்படுத்தும்போது பலன் கிடைக்க வேண்டுமென்றால் பசுந்தயிராக இருக்க வேண்டும். கெட்டியான பசுந்தயிரில் மஞ்சள் பொடி கலந்து தேன் சேர்த்து நன்றாக குழைத்து பேக் போல் செய்து முட்டி மற்றும் அது சுற்றியுள்ள பகுதிகளில் போட்டு காயவிடவும். அரைமணி நேரம் கழித்து காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் கருமை நீங்கும்.
தேங்காய் எண்ணெய்: தினசரி நாம் உபயோகித்து வரும் தேங்காய் எண்ணெய்யே சிறந்த மருந்தாகும். தேங்காய் எண்ணெயை மூட்டுப் பகுதியில் விட்டு, 5 - 10 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்தால், நல்ல பலன் தெரியும்.
கடுகு எண்ணெய் சருமத்தில் இறந்த செல்களை நீக்கி சருமத்துக்கு புத்துணர்வு ஊட்டுகிறது. சரு மத்தை பொலிவாக்குகிறது. கடுகு எண்ணெயை இலேசாக சூடாக்கி கை மற்றும் கால் மூட்டுகளில் மசாஜ் செய்து விடவும். தினமும் இரவு நேரங்களில் இந்த மசாஜ் செய்துவிட்டு மறுநாள் குளிக்கும் போது குளிர்ந்த நீரில் கழுவினால் போதும்.
கற்றாழையின் பயனை உணர்ந்து இன்று வீடுகளிலேயே வளர்க்க தொடங்கிவிட்டார்கள். கற்றாழை மடலை இரண்டாக நறுக்கி கை மற்றும் கால் மூட்டுகள் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேய்த்து வந்தால் கருமை மறைய தொடங்கும்.
இதை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். வெளியில் செல்லும் போது கற்ற்றாழை ஜெல்லை தடவி கொண்டு செல்லலாம். சூரிய ஒளி நேரடியாக படும் போது சருமத்தில் நிறமாற்றம் உண்டாகிறது. இதனால் மூட்டுகள் மேலும் கருமை நிறத்தை அடைகிறது கற்றாழையை தடவிய மூட்டுகள் கருமை அடைவது தடுக்கப்படுவதோடு இருக்கும் கருமை நிறமும் குறையத் தொடங்கு கிறது. தொடர் கற்றாழை பராமரிப்பில் சருமம் மினுப்பதை நீங்களே உணரலாம்.
கடலை மாவு, பாசிப்பருப்பு மாவு,சந்தனம் மூன்றையும் தலா 2 டீஸ்பூன் கலந்து தேன், பால், பன்னீர் கலந்து குழைத்து மூட்டுகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பேக் போல் போடவும்அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி இலேசாக கோதுமை தவிடு கொண்டு ஸ்க்ரப் செய்ய வேண்டும். பிறகு ஆலிவ் ஆயில் கொண்டு மசாஜ் செய்யவும்.
இரண்டு நாளுக்கு ஒருமுறையாவது இதை செய்து வந்தால் பத்தே நாளில் மூட்டுகளில் கருமை கா ணாமல் போகும். மூட்டுகளில் இருக்கும் சொரசொரப்பும் குறைந்துவரும். மூட்டு சரும நிறத்துக்கு மாறிவருவதையும் கண்கூடாக பார்க்கலாம்.