இது தெரியுமா ? புதியதாக மண் பானையை வாங்குபவர்கள் அரிசி கழுவிய நீரை 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்..!
குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருக்கும் தண்ணீரைவிட மண்பானையில் வைத்திருக்கும் நீரை விரும்பி அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இயற்கையோடு இணைந்திருப்பதே இன்பம் என்ற முடிவுக்கு நாம் கொஞ்சம் கொஞ்சமாய் திரும்பிக் கொண்டிருக்கிறோம்.
மேலும் விஞ்ஞானிகள் பல வோல்ட் மின்சாரத்தை காலி செய்து தண்ணீரைக் குளிர வைப்பதற்குக் கண்டுபிடித்த ஃபிரிட்ஜ் தொழில்நுட்பத்தை, ஆடம்பரமே இல்லாமல் அசால்ட்டாக நம்மூர் கிராமத்து விஞ்ஞானிகள், வெறும் மண்பானையை வைத்தே செய்து காட்டிவிட்டார்கள்.
மண்பானையின் பெரிய ஆச்சரியம் என்னவென்றால், வெளியில் வெயில் பட்டையைக் கிளப்பும்போது மண்பானை தன்னுள் இருக்கிற நீரை அதிக அளவு குளிரச் செய்யும். வெளிப்புறத்தில் வெயில் குறைவாக இருந்தால் மண்பானையில் உள்ள நீரும் குறைந்த அளவே குளிர்ந்து இருக்கும்.
கடும் கோடையில் உடலுக்கு இதமாக, ஒரு மண்பானை நீரை நன்றாகக் குளிரச் செய்து கொடுக்கிறது என்றால் அது எவ்வளவு பெரிய வரப்பிரசாதம்
புதியதாக மண்பானையை வாங்குபவர்கள் உடனடியாக அதனைப் பயன்படுத்தக் கூடாது. சுத்தம் செய்து சில செயல்முறையைப் பின்பற்ற வேண்டும். மண்பானையில் உள்ள சிறிய நுண் துளைகள் வழியேதான் இப்படி நீர் கசிகிறது. இந்த நீர் தொடர்ந்து ஆவியாகிக் கொண்டே இருக்கிறது. இப்படி பானையின் வெப்பமும், பானையின் உள்ளே இருக்கும் நீரில் உள்ள வெப்பமும் தொடர்ந்து ஆவியாதல் மூலம் வெளியேற்றப்படுகிறது. எனவே நீர் குளிர்ந்த நிலையிலேயே இருக்கிறது
என்ன செய்ய வேண்டும்?!...
*புதியதாக மண் பானையை வாங்குபவர்கள் பானையை வெளிப்புறத்தில் நன்றாகக் கழுவ வேண்டும். பானையின் உள்பக்கத்தில் கழுவக் கூடாது.
*முதலில் பானையில் தண்ணீர் ஊற்றி ஒரு நாள் முழுவதும் வைத்து விட வேண்டும்.
*அதன்பின் பானையை எடுத்து நிழலில் காய வைக்க வேண்டும். பிறகு பானையில் நீர் ஊற்றி வைக்க வேண்டும். சில மணிநேரத்திற்கு ஒரு முறை நீரை மாற்ற வேண்டும்.
*அரிசி கழுவிய நீரை ஊற்றி 2 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். கல் உப்பு சேர்த்த நீரைப் பானையில் ஊற்றி அரை நாள் வரை ஊற வைக்க வேண்டும்.
*தொடர்ந்து மூன்று நாள்கள் வரை சாதாரண நீர், உப்பு நீர் மற்றும் அரிசி கழுவிய நீர் போன்றவற்றை ஊற்ற வேண்டும்.
*பின் பானையைக் காய வைத்து நன்றாக உலர்ந்த பிறகு குடிநீரை ஊற்றி பயன்படுத்த தொடங்கலாம்.
*முக்கியமாக பானையை வெயிலில் காய வைக்க வேண்டாம். அதிகப்படியான வெப்பத்தினால் பானையில் விரிசல் விழுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
*பானையை பயன்படுத்தும் போது, தரையில் வைக்காமல், சிரமப்படாமல் கொஞ்சம் மணல் அள்ளி வந்து அதனைக் கொட்டி குவித்து, அதன் மேல் பானையை வைக்கலாம்.
*அதோடு சுத்தமான துணியை நன்றாகத் தண்ணீரில் நனைத்து பானையின் மீது சுற்றி விடலாம். இப்படிச் செய்வதால் மண் பானையின் நீரானது கூடுதல் குளிர்ச்சியைத் தரும். மறக்காமல் பானையை மூடி வைக்க வேண்டும்.
10 லிட்டர் தண்ணீர் மண்பானையில் 3 தேத்தான் கொட்டை, 1 துண்டு நன்னாரி வேர், சிறிது வெட்டி வேர், 6 மிளகு, லு தேக்கரண்டி சீரகம், இவை அனைத்தையும் சிறிய வெள்ளை துணியில் கட்டி மண்பானை தண்ணீரில் இரவு முழுவதும் போட்டு வைக்கவும். இதன் பெயர் சத்து நீர் முடுச்சு.
காலையில் துணியை பிரித்து சூரிய ஒளியில் வைக்கவும். இந்த சத்து நீர் முடிச்சை மூன்று முறை பயன்படுத்தலாம். இந்த நீரை பயன்படுத்தும் போது உயிராற்றல் அதிகரிக்கும்.
சாதாரணமாக மண்பானையில் பொங்கும் சோறு நல்லா ருசியாகவும் சத்து வெளியேறாமல் அப்படியே கிடைப்பதோடு எளிதில் செரிமானம் ஆகும்.
அந்த சோற்றில் தண்ணீர் ஊற்றி வைத்து மறுநாள் காலையில் அதில் மோர் தயிர் சிறிது உப்பு சேர்த்து அந்த பானத்தை அருந்தும் போது உடலுக்கு நல்ல வலுவை தருகிறது.
இன்றும் கிராம மக்கள் அமுத பானமாக அந்த நீராகாரத்தை தான் பருகுகிறார்கள். அதுவே பாரம்பரிய அரிசியில் சமைத்த சோறாக இருந்தால் மூன்று நாள் கூட வைத்து அதை பருகலாம்.
இன்னும் ருசியாக உடலுக்கு குளிர்ச்சியும் ஆற்றலையும் தரும். வெப்ப காலங்களில் இதுவே சிறந்த காலை உணவாகும்.
இப்படி உடல் ஆரோக்கியத்தைத் தரக்கூடிய நம்முடைய பாரம்பரிய மண் பாத்திரங்களைப் பயன்படுத்தினால், உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும்.
இப்படி உடல் ஆரோக்கியத்தைத் தரக்கூடிய நம்முடைய பாரம்பரிய மண் பாத்திரங்களைப் பயன்படுத்தி உடல் ஆரோக்கியதை காப்போம்.