இது தெரியுமா ? அனைத்து வகை தோல் நோய்களுக்கும் இது தான் அருமருந்து..!

அன்றைய காலத்து கிராமத்துச் சிறுவர்களின் விளையாட்டுப்பொருளாக இருந்து வந்த பூவரசு மரம் கிணற்றுமேடுகளில் நிச்சயம் இடம்பெற்றிருக்கும். நீர் இறைக்கும் கமலையை இழுத்துவரும் மாடுகள் சோர்ந்து போகாமல் இருப்பதற்காக இதை நட்டு வைத்திருந்தார்கள். இந்த மரங்கள் ஆக்சிஜனை அதிகளவு உற்பத்தி செய்யும் மரங்களில் ஒன்று என்பதால் கிராமம்தோறும் காணப்பட்டன. இன்றைக்குக் கிணற்றில் நீரும் இல்லை, அவற்றிலிருந்து நீர் இறைக்கும் கமலைகள் மட்டுமல்ல மாடுகளும் இல்லை, அவை இளைப்பாறுவதற்காக நடப்பட்ட மரங்களும் இல்லை.
அதுமட்டுமல்ல சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் மார்கழி மாதத்தின் காலைப்பொழுதுகளில் நம் வீட்டுப்பெண்கள் தமிழ்க் கலாசாரத்தின் அடையாளங்களில் ஒன்றாகக்கருதப்படும் கோலமிடுதல் முக்கியமானது. வீடுகளின் முற்றங்களில் விழுந்து கிடக்கும் இலைதழைகள் மற்றும் குப்பைகளை அகற்றி மாட்டுத்தொழுவத்துக்குப் பின்புறம் இருக்கும் உரக்குழியில் போடுவார்கள். பிறகு மாட்டுத்தொழுவத்தில் இருந்து சாணம் எடுத்து வந்து நீர் விட்டுக் கரைத்துத் தெளித்து மாக்கோலம் இட்டு அதன் நடுவே சாணத்தில் பிள்ளையார் பிடித்து அதில் பூவரசம் பூவை செருகி வைப்பார்கள். இது மரபின் மருத்துவம் என்றால் அது மிகையாகாது.
பூவுக்கெல்லாம் அரசன் போல் நோய் தீர்க்கும் மாமருந்தாக இருப்பதால்தான் இதனை பூவரசு என்று அழைக்கின்றனர்.நூற்றாண்டுகளுக்கு மேல் வாழக்கூடிய மரங்களுள் பூவரசும் ஒன்று. காயகல்ப மரமான பூவரசு பூமிக்கு அரசன் என்று அழைக்கப்படும் பெருமையுடையது.
பூவரசம் மரத்தில் இதய வடிவ இலைகளின் நடுவே மஞ்சள் வர்ணத்தில் பூத்துக்குலுங்கும் பூவரச மரத்தின் பூக்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த மலர்கள் உண்பதற்கு உகந்தவை என்று சித்தமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக இந்த இலைகளை விஷத்தை போக்கும் வல்லமை உடையதால் இதனை பூச்சிக்கடி மற்றும் விஷ வண்டுகடிகளுக்கு மருந்தாக இந்த பூக்களை சித்த மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
சொறி, சிரங்கு சொறி சிரங்கினால் அவதிப் படுபவர்கள் பூவரசம் பூவை அரைத்து அவற்றின்மீது பூசிவர தோல் மென்மையாகும், சொறி சிரங்கு குணமடையும். விஷக்கடி குணமாகும் பூச்சிக்கடி, வண்டுக்கடி, காணாக்கடி போன்ற பூச்சிகள் கடித்து அதனால் தோலில் ஊறல் நோய் ஏற்படும். அவர்கள் பூவரசம் பூ 25 கிராம் எடுத்து நசுக்கி, பழகிய மண்சட்டியில் போட்டு, 200 மில்லிலிட்டர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும்...
நீர் பாதியாக சுண்டும் போது இறக்கி வடிகட்டி காலை மாலை வேளைக்கு இரண்டு அவுன்ஸ் குடிக்கவேண்டும். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தினமும் இதுபோல புதிதாக கஷாயம் தயாரித்து குடித்து வரவேண்டும். பின்னர் மூன்று நாட்கள் இடைவெளி விட்டு, மறுபடியில் மூன்று நாட்கள் சாப்பிடவேண்டும். இதனால் விஷக்கடி மூலம் ஏற்பட்ட ஊறல், தடிப்பு, அரிப்பு, மயக்கம், சோம்பல் போன்றவை நீங்கும்.
பூவரசு மரத்தின் வேர்ப்பட்டையை நீர் விட்டு நீர் சேர்த்து கொதிக்க வைத்து அதில் 50 மில்லி அளவு எடுத்து 10 மில்லி விளக்கெண்ணெய் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பேதியாகும். இதன் மூலம் தோல் நோய்களிலிருந்து விடுதலை கிடைக்கும். செதில் செதிலாக உதிரக்கூடிய சொரியாசிஸ் நோய்க்கு பூவரசம்பட்டை நல்ல மருந்தாகும். அதாவது, 100 ஆண்டுகள் ஆன பூவரசு மரத்தின் பட்டையுடன் காய், பூ சேர்த்துப் பொடியாக்கி காலை, மாலை ஒரு டேபிள்ஸ்பூன் வீதம் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும். முற்றிய மரத்தின் பட்டையை இடித்துச் சாறு எடுத்து அதை வாயில் வைத்துக் கொப்புளிப்பதோடு உள்ளுக்குள் விழுங்கி வந்தால் உதட்டில் வரக்கூடிய வெண்தேமல் சரியாகும்.
சர்க்கரை நோயாளிகளுக்குப் புண் ஏற்பட்டால் அது ஆறாமல் மிகுந்த பிரச்னையை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. அப்படிப்பட்ட சூழலில் பூவரசம்பட்டையை நீர் விட்டுக் கொதிக்க வைத்து சூடு ஆறியதும் கழுவி வந்தால் பலன் கிடைக்கும். கழுத்தில் அணியக்கூடிய செயின், கைக்கடிகாரம் போன்றவற்றை அணிவதால் சிலருக்குத் தோலில் கருமை நிறம் ஏற்படும். அப்படிப்பட்ட சூழலில் பூவரசம் பூவின் இதழ்களை நல்லெண்ணெய் விட்டு காய்ச்சி சூடு ஆறியதும் கருமை நிறத்தின் மீது பூசி வந்தால் கரும்படலம் நாளடைவில் மறையும். அல்சைமர் எனும் ஞாபகமறதி நோய்க்கும் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது என்று சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.