இது தெரியுமா ? இருமலைப் போக்க தூதுவளை இலையை 4 அல்லது 5 எடுத்து அதன்...
இருமலைப் போக்க எளிதான வழி உள்ளது. தூதுவளை இலையை 4 அல்லது 5 எடுத்து அதன் முட்களை நீக்கிவிட்டு கழுவிக் கொள்ளவும்.
இலைக்குள் 4 அல்லது 5 மிளகு வைத்து வெற்றிலைப் போல் மடித்து வாயில் போட்டு மென்று சாப்பிட இரண்டே நாளில் மார்புச் சளி போய், தொடர்ந்து வந்த குத்தல் இருமலும் காணாமல் போகும்.
தூதுவளையை உளுத்தம் பருப்பு, புளி வைத்து துவையல் செய்தும் சாப்பிடுவார்கள். சளி பிடித்தவர்களுக்கு இந்த துவையலை செய்து கொடுத்தால் எந்த மருந்துக்கும் அசராத சளியும் கரைந்து காணாமல் போய் விடும்.
தூதுவளை இலை உடலுக்கு உஷ்ணத்தைக் கொடுக்கும் என்பதால், சூட்டு உடம்புக் காரர்கள் அதிகமாக சாப்பிடக் கூடாது.
உணவாகப் பயன்படும் மூலிகைகளில் தூதுவளைக்கு என்றுமே முக்கிய இடமுண்டு. நெய்யைக் காய்ச்சும்போது, முருங்கை இலைகளைச் சேர்த்துக் காய்ச்சுவதைப்போல, தூதுவளை இலைகளையும் சேர்த்துக் காய்ச்சிப் பயன்படுத்தினால், நெய்யின் மருத்துவக் குணங்கள் பல மடங்கு அதிகரிக்கும். சளி, இருமல் போன்ற குறிகுணங்களைக் கட்டுப்படுத்த `தூதுவளை நெய்’ எனும் ஸ்பெஷல் சித்த மருந்தும் நமது பாரம்பர்யத்தில் உண்டு.
காது நோய்களுக்காக சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள மூலிகைகளுள் தூதுவளையும் முக்கியமான ஒன்று. குளிர்காலத்தில் குடிக்கும் தண்ணீரில் தூதுவளை இலைகளை போட்டுக் காய்ச்சிப் பயன்படுத்தலாம். அடுத்துவரும் மழை மற்றும் குளிர்காலத்தில் தூதுவளை தண்ணீரை முயன்று பாருங்கள்! இதன் இலைச் சாற்றோடு, சிறிது மிளகுத்தூள் சேர்த்து குடிக்க சளி, இருமல் மட்டுமன்றி செரிமான உபாதைகளும் குணமாகும்.
குளிர்காலம் தொடங்கிவிட்டாலே அம்மாவிடம் சொல்லி தூதுவளை ரசம், தூதுவளை சட்னி எனச் சாப்பிடுங்கள். குளிர்கால நோய்கள் உங்களை நெருங்கவே நெருங்காது. தூதுவளை சட்னியை ஒருமுறை சாப்பிட்டுவிட்டீர்கள் என்றால், அதன் பிறகு உங்கள் ஃபேவரைட்டான வொயிட் சட்னி, கிரீன் சட்னியை எல்லாம் சில வாரங்களுக்கு மறந்தே விடுவீர்கள்! தூதுவளையோடு தேங்காய்த் துருவல், மிளகாய் வற்றல், உளுத்தம் பருப்பு சேர்த்துச் செய்யப்படும் தூதுவளைத் துவையல், மழைக்காலத்துக்கான ஸ்பெஷல் உணவு.
ஆஸ்துமா நோயாளர்களுக்கும் நல் உணவு! பத்து முதல் பதினைந்து தூதுவளை இலைகளை எடுத்து சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள். இதை, சின்ன வெங்காயத்தோடு சேர்த்து நல்லெண்ணெயில் லேசாக வதக்கி, ஐந்து நாள்களுக்கு சிறிய நெல்லிக்காய் அளவு காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு வரலாம்! இந்த மூலிகை ரெசிப்பியைப் பயன்படுத்த ஆஸ்துமா நோயாளர்களுக்கு மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமம் பெருமளவில் குறையும். தூதுவளை இலையில் சாறு பிழிந்து தேன் சேர்த்தும் குடிக்கச் சொல்லலாம். நுரையீரல் மற்றும் மூச்சுக்குழாயில் உள்ள சளியை வெளியேற்றும் சிறப்புத் தன்மையும் நம்ம தூதுவளைக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.