1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? இதயநோய் வராமல் தவிர்க்க எளிய வழிகள்..!

1

உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லை என்பார்கள். 24 மணி நேரத்தில்சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம், தூங்க ஏழு மணி நேரம். மீதம் 16 மணி நேரம் உள்ளது. இதில், ஒரு மணி நேரத்தை ஒதுக்க முடியவில்லை என்றால், 45 நிமிடங்களையாவது உடற்பயிற்சிக்குச் செலவிடுங்கள். நடைப் பயிற்சி, ஓட்டப் பயிற்சி அல்லது நீச்சல் பயிற்சி செய்வது உடலுக்கு ஆரோக்கியம் தரும்.

வேலைக்குச் செல்லும் பெண்கள், கணவனுடன் இருசக்கர வாகனம் அல்லது பேருந்தில் செல்கின்றனர். அவர்கள், இரண்டு பஸ் நிறுத்தத்துக்கு முன்பு இறங்கி வீட்டுக்கு நடந்தே வந்தால்கூடப் போதும், ஆரோக்கியமாக இருக்கலாம். தினசரி ஒரே மாதிரியான பயிற்சியைச் செய்வதைக்காட்டிலும், வித்தியாசமாக ஏதாவது பயிற்சிகளைச் செய்ய முயற்சியுங்கள்.

* வீட்டு வேலை செய்யுங்கள்
ஜிம்முக்குச் சென்று வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்வதுதான் பயிற்சி என்று இல்லை. வீட்டு வேலை, தோட்டப் பராமரிப்பு, மாடிப்படி ஏறி இறங்குவதும்கூட உடலுக்கானப் பயிற்சிகள்தான்.

*போதுமான தூக்கம்
பெரியவர்கள் நாள் ஒன்றுக்கு குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும். 7 மணி நேரத்துக்கும் குறைவாகத் தூங்குபவர்களுக்கு மாரடைப்பு உள்ளிட்ட இதயநோய்க்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.

போதுமான தூக்கமின்மை, மன அழுத்தம் உள்ளிட்டப் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. மனஅழுத்தம் அதிகரிக்கும்போது, வெளியாகும் ஹார்மோன் இதயத்தைப் பாதிக்கிறது.

*ஆரோக்கியமான உணவு பழக்கம்:
எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பது அல்ல... என்ன சாப்பிடுகிறோம் என்பதுதான் முக்கியம்.

வயிறு முட்டச் சாப்பிடும்போது, உடலில் கலோரியின் அளவு அதிகரிக்கும். இந்த அதிகப்படியான கலோரி கொழுப்பாக மாற்றப்பட்டுவிடும். எனவே, உணவில் கவனம் தேவை.

கலோரி குறைந்த அதேசமயம் ஊட்டச்சத்து நிறைந்த காய்கறி, பழங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.

காய்கறிகளில் அதிக அளவில் வைட்டமின்கள், தாது உப்புக்கள் மற்றும் நார்ச்சத்து உள்ளன.

அதிக கலோரி, சோடியம் உப்பு அதிகம் உள்ள உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட, அதிக அளவில் சுத்திகரிக்கப்பட்ட உணவு வகைகளைத் தவிர்த்துவிடுங்கள். இது உங்கள் உடல் அளவை மட்டும் அல்ல, இதயமும் ஆரோக்கியமாக இருக்க உதவும்.

* க்ரீன் டீ பருகுங்கள்:

இதில் அதிக அளவில் ஆன்டிஆக்சிடன்ட் இருப்பதால், உடலில் உள்ள கெட்டக் கொழுப்பு அளவையும், உயர் ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது. தினமும் ஒரு கப் அளவுக்கு க்ரீன் டீ பருகுவது போதுமானது. க்ரீன் டீயை, கொதிக்கும் தண்ணீரில் போட்டு, சில நிமிடங்கள் கழித்து இறக்கி, வடிகட்டி அப்படியே அருந்த வேண்டும். சுவைக்காக சர்க்கரை, தேன் என எதையும் சேர்க்க வேண்டாம்.

*உணவுப் பொருட்களில் ஊட்டச்சத்து அளவைக் கவனியுங்கள்

இன்று எந்த ஓர் உணவுப் பொருளை வாங்கினாலும், அவற்றோடு ஊட்டச்சத்துப் பட்டியலும் இணைப்பாகவே வருகிறது. பெரும்பாலும் யாரும் அதைப் பார்ப்பது இல்லை. இனியாவது அந்தப் பட்டியலில் கலோரி மற்றும் கொழுப்பு எவ்வளவு உள்ளது என்று பாருங்கள்.

சாச்சுரேட்டட் கொழுப்பு எனப்படும் நிறைவுற்ற கொழுப்பு 7 சதவிகிதத்துக்கும் மேல் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

ஒரு கிராமுக்கு மேல் 'டிரான்ஸ் ஃபேட்’ இருக்கக் கூடாது. இந்த சேச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் டிரான்ஸ் கொழுப்புதான் ரத்தத்தில் கொழுப்பு அளவை அதிகரித்து, அதன் மூலம் இதய ரத்தக்குழாய் அடைப்புக்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன.

இறைச்சி, பால் பொருட்கள், தேங்காய் எண்ணெய், பனை எண்ணெயில் சாச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது. இந்தப் பொருட்களைக் குறைந்த அளவில் பயன்படுத்த வேண்டும்.

*உணவில் பூண்டு

தினசரி உணவில் பூண்டைச் சேர்த்துக்கொள்ளுங்கள். பூண்டில், ரத்தக்குழாயைத் தாக்குபவற்றை எதிர்த்துச் செயலாற்றும் 15 வகையான ஆன்டி ஆக்சிடன்ட்கள் உள்ளன. பூண்டு ரத்தக் குழாய்களுக்குள் ரத்தம் உறைவதைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. மேலும், கொழுப்பின் அளவைக் குறைக்கும் ஆற்றலும் பூண்டுக்கு உண்டு 

புகை பிடிக்காதீர்

புகையிலைப் புகையில் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட வேதிப்பொருட்கள் உள்ளன. இதில் பெரும்பாலான வேதிப்பொருட்கள் இதயத்துக்கும் மூளைக்கும் ரத்தத்தைக் கொண்டுசெல்லும் ரத்த நாளங்களையும் இதயத்தையும் பாதிக்கக் கூடியவை. மாரடைப்பும் பக்கவாதமும் வரும் அபாயத்தைக் குறைப்பதற்காக ஒருவர் செய்யக்கூடிய மிகச் சிறந்த செயல், புகைபிடிக்காமல் இருப்பதுதான்.

நார்ச்சத்துள்ள உணவு

தானியங்கள், பயறுகள் (பருப்புகள், உலர்ந்த பட்டாணிகள், அவரை வகைகள்), பழங்கள், காய்கறிகள், ஆகியவற்றில் இரண்டு வகையான உணவு நார்ச்சத்துகள் உள்ளன ஒன்று கரையாதது, மற்றொன்று கரையக்கூடியது. கரையாத நார்ச்சத்து பெரும்பாலும் முழு தானியங்களில் உள்ளது. இவை மலச்சிக்கலையும், குடல் அழற்சியால் உணவுப் பாதையில் தோன்றும் பைவடிவக்கட்டிகள் (டைவர்டி குளோசிஸ்) உருவாவதையும் தடுக்க உதவுகிறது. அத்துடன் கூடுமானவரை குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது. ஓட்ஸ், உலர்ந்த பயறுகள், அவரைகள், (ஆப்பிள், ஆரஞ்சு, பம்ளிமாஸ் போன்ற) பழங்கள் போன்றவற்றில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது ரத்தக் கொலஸ்டிரால் அளவை குறைக்க உதவும். மேலும், அதிக அளவில் நார்ச்சத்து நிறைந்த உணவை உண்பது, உடல்பருமன் ஆவதைக் குறைப்பதற்கான சாத்தியத்துடன் தொடர்புடையது.

Trending News

Latest News

You May Like