இது தெரியுமா ? சிவப்பு கொய்யா ஆப்பிளை விட சிறந்த பழம்..!

கொய்யா பழத்தில் இரண்டு வகைகள் உள்ளன. அவை, சிவப்பு மற்றும் வெள்ளை கொய்யா. இந்த இரண்டு வகை பழங்களும் அதன் நிறத்தில் மட்டுமல்ல, மருத்துவ குணங்களிலும் மாறுபாடுகளைக் கொண்டது.கொய்யா பழம் மிகவும் சர்வ சாதாரணமாக கிடைக்க கூடிய ஓர் பழமாகும். நாம் ஆப்பிளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் இந்த கொய்யாப்பழத்திற்கு கொடுப்பதில்லை.
ஒவ்வொரு பழத்தின் நிறத்திற்கு ஏற்ப அவற்றின் குண நலன்கள் மாறுபடும். பழத்தில் இருக்கக்கூடிய சத்துக்கள், தாதுக்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல்களினால் தான் பழங்களில் நிறம் வேறுபடுகிறது. கொய்யா பழங்களில் மிகவும் சுவையுடைய பழம் சிவப்பு கொய்யா. இது குறைவான கலோரி மற்றும் அதிக நார்சத்து கொண்டது. நாம் இப்போது சிவப்பு கொய்யாவில் இருக்கக்கூடிய சிறப்பம்சங்கள் என்னவென்று தெரிந்து கொள்வோம்.
சிவப்பு நிறத்தில் இருக்கும் கொய்யா பழத்தில் கேரட் மற்றும் தக்காளி பழத்தில் இருக்கும் கரோட்டினாய்டு என்னும் நிறமி அதிகம் உள்ளது. இந்த கரோட்டினாய்டு என்பது ஒரு வகை ஆன்டி ஆக்சிடன்ட். இது பழங்கள் மற்றும் காய்கறிகளில் தான் அதிகமிருக்கும்.
இந்த கரோட்டினாய்டு ஆரஞ்சுப்பழம், கொய்யாப்பழம், கேரட் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியவற்றில் அதிகமிருக்கிறது. இதை தான் வைட்டமின் ஏ என்று சொல்கிறோம். ஆரோக்கியமான சருமத்திற்கும், கண்பார்வைக்கும் வைட்டமின் ஏ மிகவும் அவசியமான ஒன்றாகும்.
கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தருவதோடு எலும்புகளுக்கு பலத்தையும் சேர்க்கிறது. தினம் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சி அடையும். மேலும் தினமும் 2 கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் இருக்காது.
சிவப்பு கொய்யா நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க ஏற்றது. இதில் அதிகப்படியான நார்ச்சத்துக்கள் இருக்கின்றன. எனவே சிவப்பு கொய்யாவை சாப்பிடுவதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். ஆகவே சர்க்கரை நோயாளிகள் சிவப்பு கொய்யாப்பழத்தை சாப்பிடலாம்.
கொய்யாப்பழத்தில் வைட்டமின் ஏ அதிக அளவில் இருப்பதால் அது கர்ப்பிணிகளுக்கும், வயிற்றில் வளரும் கருவுக்கும் கண் குறைபாட்டை போக்க உதவுகிறது. கொய்யாப்பழத்தில் போலிக் அமிலமும், வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளதால், குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்பட செய்கிறது.
சிவப்பு நிற கொய்யா பழத்தில் ஆன்டி ஆக்சிடண்டுகள் அதிகமாக உள்ளதால், நமது உடம்பில் உள்ள புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடி புற்றுநோய், மார்பக புற்று நோய் ஏற்படாமல் தடுக்கிறது. எனவே இந்த பழத்தை தினமும் சாப்பிடுவது நல்லது.
இரும்புசத்து அதிகம் கொண்ட இந்த சிவப்பு கொய்யாவைச் சாப்பிடுவதால், நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வைரஸ் தொற்றுகளினால் ஏற்படக்கூடிய காய்ச்சல், இருமல், சளி ஆகிய பிரச்சனைகள் வராமல் தடுக்கப்படும். உடல் எடையை சீரான விகிதத்தில் மேம்படுத்தவும் கொய்யாப்பழம் மிகவும் உதவி செய்கிறது.
கொய்யாப்பழத்தை தோல் நீக்காமல் சாப்பிட வேண்டும். கொய்யாவின் தோலில் தான் அதிக சத்துக்கள் உள்ளது. இது தோல் வறட்சியை நீக்கி, முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது. மேலும் முதுமை தோற்றத்தை குறைத்து இளமையாக மாற்றுகிறது.
ஆகவே இந்த மருத்துவ குணம் வாய்ந்த, மிக எளிதாகவும், விலை மலிவாகவும் கிடைக்கக்கூடிய சிவப்பு கொய்யா பழத்தை அதிக அளவில் வாங்கி சாப்பிட்டால் இப்படிப்பட்ட நோய் பாதிப்புகளிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளலாம். “வருமுன் காப்பதே சிறந்தது” என்பதற்கேற்ப நோய் ஏற்படுவதற்கு முன்னரே இந்த பழங்களை உண்டு நோயற்ற வாழ்வு வாழலாம்.