இது தெரியுமா ? விபத்துகளில் ஏற்படக்கூடிய எலும்பு முறிவை விரைவில் இணைக்கக்கூடிய ஆற்றல் இதுக்கு உள்ளது..!
பிரண்டைகளில் ஓலைப் பிரண்டை, உருட்டுப் பிரண்டை, முப்பிரண்டை, களிப்பிரண்டை, தீம் பிரண்டை, புளிப்பிரண்டை எனப் பல பிரிவுகள் உண்டு. முப்பிரண்டை கிடைப்பது அரிது. பிரண்டைத் துவையல் மிகுந்த ருசியுள்ளது.
இதைச் சாப்பிட்டால் பசி உண்டாகும். செரிமானக் கோளாறைப் போக்கும். மலச்சிக்கலை நீக்கும். குடலில் புழு இருந்தால் அவற்றைக் கொல்லும். உடலுக்கு பலத்தைக் கொடுக்கும். பிரண்டை, நரம்புத்தளர்ச்சியைப் போக்குகிறது. ஆண்மையைப் பெருக்குகிறது. பசியைத் தூண்டிவிடுவதில் இதற்குத்தான் முதலிடம். பிரண்டையால் செய்யப்பட்ட வடகத்தைச் சாப்பிட்டுவந்தால் கப நோய்கள் நீங்கும்.
களிப்பிரண்டையை கணு நீக்கி மிளகு, உப்பு ஆகியவற்றைச்சேர்த்து உணவாகப் புசித்து வந்தால், பிணியினால் நொந்து மெலிந்த உடல் வன்மை பெறும். பிரண்டையின் அடிவேரை நீர் விட்டு நன்றாக அலம்பி, அதை வெயிலில் உலர்த்திப் பொடி செய்து வைத்துக் கொண்டு 10 குன்றி மணி எடை, சாப்பிட எலும்பு முறிவைக் கூட்டுவிக்கும். பிரண்டையுடன் சிறிது மிளகைக் கூட்டி அரைத்துச் சுண்டைக்காய் அளவு, தினந்தோறும் இரண்டு வேளை சாப்பிட சுவாச காசம் (ஆஸ்துமா) சாந்தப்படும்.
வேகவைத்த பிரண்டையை உப்பிட்ட மோரில் போட்டு உலர்த்தி வற்றலாகச் செய்வார்கள். பிரண்டையை நெய்விட்டு அரைத்துக் கொட்டைப் பாக்கு அளவு, தினமும் காலை, மாலை என்று இரு வேளையும் (எட்டு நாள்) சாப்பிட ஆசனத்தினவு, ரத்தமூலம் ஒழியும். பிரண்டையை இடித்துச் சாறு பிழிந்து கொள்ளுங்கள். இத்துடன் புளி, உப்பு சேர்த்துக் காய்ச்சுங்கள்.
குழம்பு பதத்தில் கெட்டியானதும், அடுப்பிலிருந்து இறக்கிச் சூடு தாங்கும் அளவுக்குப் பற்று போடவேண்டும். இப்படிச் செய்தால் சுளுக்கு, சதை பிரளுதல், எலும்பு முறிவினால் ஏற்பட்ட வீக்கம் ஆகியவை குணமாகும். குணமாகும் வரை வைத்தியத்தைத் தொடருங்கள். பிரண்டையில் புரதம், கொழுப்பு, நார்ப்பொருள், மாவுப்பொருள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துகள் உள்ளன. பிரண்டை ஆண்மை சக்தியைப் பெருக்கும்.
முறிந்த எலும்பு விரைவில் கூடுவதற்கு : பிரண்டையின் மிக முக்கிய மருத்துவ பயன்களில் ஒன்று, விபத்துகளில் ஏற்படக்கூடிய எலும்பு முறிவை விரைவில் இணைக்கக்கூடிய மிக சிறந்த ஆற்றல் உள்ளது. உடைந்த எலும்புகளில் புதிய திசுக்களை உருவாக்கி, விரைவில் சீரமைக்க உதவுகிறது. பிரண்டையின் வேரை நன்கு உலர்த்தி, பொடியாக்கி, வெந்நீரில் குழைத்து, பற்று போட்டுவந்தால், முறிந்த எலும்புகள் விரைவில் கூடும். மூட்டுவீக்கம், மூட்டு தேய்மானம் ஆகிய பிரச்சனைகளுக்கு, பிரண்டை சாரை வீக்கமுள்ள மூட்டுகளில் தடவி வந்தால், கொஞ்சம் கொஞ்சமாக வீக்கம் குறையும், மேலும் பிரண்டை சாறுடன், பசும்பால் சேர்த்து குடித்துவந்தால், உடைந்த எலும்புகள் சீக்கிரம் குணமடையும். உணவில் துவையல், சட்னி ஆகிய வகைகளில் உணவில் சேர்த்து வர எலும்புகளுக்கு வலிமையையும், அடர்த்தியும் தந்து, பொதுவான எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
நாம் நடக்கும்போது எதிர்பாராமல் கால் சதை பிரளுதல்அல்லது தீடீரென்று கீழே விழுந்து சதை பிரளுதல், வலி மற்றும் வீக்கம் ஏற்படும். அதற்கு பிரண்டை சாறுடன் புளி, உப்பு சேர்த்து சுண்டக்காய்ச்சி, அதை வலி வீக்கம் உள்ள இடத்தில் பற்று போட்டுவந்தால், விரைவில் வீக்கம் குறைந்து, வலியும் குணமாகிவிடும். மேலும் காது வலி, காதில் சீழ் வடிதலுக்கு, பிரண்டையை நன்கு தீயில் வதக்கி, சாறை எடுத்து காதில் சிறு துளிகள் விட்டுவந்தால், வலி மற்றும் சீழ் வடிதல் நின்றுவிடும்.