இது தெரியுமா ? வெறும் வயிற்றில் கேரட் ஜூஸ் குடித்தால்..
காய்கறிகளானது உடல் ஆரோக்கியத்திற்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள் அனைத்தையும் உள்ளடக்கி உள்ளன. அதில் கண்ணைப் பறிக்கும் வகையிலான நிறத்தைக் கொண்ட ஒரு காய்கறி தான் கேரட். பொதுவாக கேரட் சாப்பிடுவது கண்களுக்கு நல்லது என்று பலர் சொல்வதைக் கேட்டிருப்போம்.
ஏனெனில் கேரட்டில் கண்களின் ஆரோக்கியத்திற்கு வேண்டிய வைட்டமின் ஏ ஏராளமான அளவில் நிறைந்துள்ளன. இது தவிர கேரட்டில் இன்னும் பல்வேறு சத்துக்கள் உள்ளன. இப்படிப்பட்ட கேரட்டை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஜூஸாகவும் உட்கொள்ளலாம். ஆனால் கேரட்டின் ஜூஸை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அதில் உள்ள சத்துக்களை முழுமையாக உடல் உறிஞ்சி, உடலுறுப்புக்களின் செயல்பாடு மிகவும் சிறப்பாக இருக்கும் என்பது தெரியுமா? கீழே தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடித்தால் கிடைக்கும் நன்மைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.
கண்களுக்கு நல்லது
கேரட்டில் பீட்டா கரோட்டீன் என்னும் பொருள் அதிகமாக உள்ளது. இந்த பீட்டா கரோட்டீன் உடலினுள் வைட்டமின் ஏ-ஆக மாற்றமடைந்து, கண் பார்வையை மேம்படுத்தவும், பராமரிக்கவும் உதவுகிறது. எப்போது உடலில் வைட்டமின் ஏ குறைபாடு ஏற்படுகிறதோ, அப்போது பார்வையில் பிரச்சனையை சந்திக்க நேரிடும். இந்த வைட்டமின் ஏ குறைபாட்டை சரிசெய்யாமல் விட்டுவிட்டால், கண் பார்வை போகவும் வாய்ப்புள்ளது. எனவே பார்வை தெளிவாக தெரியவும், கண்கள் ஆரோக்கியமாக இருக்கவும் கேரட் பெரிதும் உதவி புரியும்.
பொலிவான சருமம்
கேரட் சருமத்திற்கு மிகவும் நல்லது. தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸை குடித்து வந்தால், அது முதுமைக் கோடுகள், சரும சுருக்கங்கள் மற்றும் பிற முதுமைக்கான அடையாளங்களைத் தடுக்க உதவி புரிவதோடு, சருமத்திற்கு நல்ல பொலிவைத் தரும். ஏனெனில் இதில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகளவில் உள்ளன. ஆகவே தினமும் இந்த ஜூஸை குடிக்கும் போது, சருமம் புத்துணர்ச்சியுடனும், பொலிவாகவும், இளமையாகவும் காட்சியளிப்பதைக் காணலாம்.
அஜீரண கோளாறைத் தடுக்கும்
அடிக்கடி வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினையை சந்திப்பவர்கள் அடிக்கடி தங்களுடைய டயட்டில் கேரட் ஜூஸை சேர்த்துக் கொள்வது நல்லது. தினமும் ஒரு கிளாஸ் கேரட் ஜூஸ் குடிப்பதால் ஜீரண மண்டலம் சிறப்பாக செயல்படும். கேரட்டில் கரையும் மற்றும் கரையா நார்ச்சத்துக்கள் இரண்டுமே இருப்பதால் இது மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்க உதவும்.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்
அதிகம் கேரட்டில் கரோட்டினாய்டுகள் வளமான அளவில் உள்ளன. இந்த கரோட்டினாய்டுகள் உடலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாக செயல்பட்டு, உடலை சுத்தம் செய்ய உதவுகிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் கேரட் ஜூஸை குடிக்கும் போது, அந்த ஜூஸில் உள்ள முழு சத்துக்களும் உடலால் உறிஞ்சப்பட்டு, உடலின் மெட்டபாலிசம் சிறப்பாக இருக்கும்.
எடை இழப்புக்கு உதவும்
தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் கேரட் ஜூஸை குடியுங்கள். இதனால் அதில் உள்ள நார்ச்சத்து, நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்திருப்பதோடு, கண்ட உணவுகளின் மீதான ஆர்வத்தைக் குறைக்கும். அதுவும் கேரட் ஜூஸ் உடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து குடித்தால் உடல் எடை இருமடங்கு வேகத்தில் குறையும்.
நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கேரட் ஜூஸ் பெரிதும் உதவி புரியும். ஏனெனில் கேரட் ஜூஸில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த தேவையான வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமின் பி6, பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்றவை உள்ளன.
சர்க்கரை நோய்க்கு நல்லது
கேரட் ஜூஸ் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் கேரட் ஜூஸானது இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள மற்றும் பராமரிக்க உதவி புரிகிறது. மேலும் இதில் கலோரிகள் குறைவு மற்றும் சர்க்கரை அளவும் குறையும். எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் கேரட் ஜூஸைக் குடித்தால், இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்கலாம்.
இதய நோயைத் தடுக்கும்
ஒருவருக்கு இதய நோய் வருவதற்கு அதிகப்படியான கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்றவை தான் முக்கிய காரணம். ஆனால் கேரட் ஜூஸில் பொட்டாசியம் அதிகளவில் உள்ளன. இது கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைப்பதோடு, இரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது. இதன் விளைவாக இதய நோயின் அபாயம் குறைகிறது.