இது தெரியுமா ? புற்றுநோய் கிருமிகளை கட்டுப்படுத்தும் தேன்..!
தினமும் எலிக்கு தேனும் வழங்கப்பட்டது. சில மாதங்கள் கழித்து நடத்தப்பட்ட ஆய்வில், புற்றுநோய் தாக்கம் தடுக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
குணப்படுத்த முடியாத நோயாக மனித குலத்தை அச்சுறுத்தும் ஒரு சிலவற்றில் புற்றுநோய் முக்கியமானது. சிறு கட்டியாக உருவாகும் இதை ஓரளவு முற்றிய நிலையில் தான் கண்டறிய முடியும்.அதன்பிறகு, இது மேலும் வளர்ச்சியடையாமல் அல்லது பரவிவிடாமல் தடுக்கத்தான் இதுவரை சிகிச்சைகள் உள்ளன.புற்றுநோய்க்கட்டி என்ற நிலையிலிருந்து புற்றுநோயாக மாறும்போதுதான் ஆபத்து அதிகரிக்கிறது.ரத்தத்திலும் புற்றுநோய் கிருமிகள் கலக்கும்.பிறகு அது உடல் முழுவதும் பரவும்.
இந்நிலையில் தேனும், தேன் பொருட்களும் புற்றுநோயை குணப்படுத்த உதவும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
தேன் கூட்டைக் கட்டுவதற்குத் தேனீக்கள் ஒரு விதமான பிசினை பயன்படுத்துகின்றன. இதை தேன் பிசின் அல்லது தேன் மெழுகு என்பார்கள். வேலைக்காரத் தேனீக்களின் உமிழ்நீர்ச் சுரப்பிகளிலிருந்து வரும் ஒரு விதத்திரவம் 'லார்வா' தேனீக்களுக்கு உணவாகும்.. தேனீயின் கொடுக்கில் உள்ள விஷம் ஆபத்து இல்லாதது. ஆனால், தேனீ கொட்டினால் வீக்கம் ஏற்பட்டு கடுகடுக்கும்.அப்படிப்பட்ட தேனீயின் விஷம், தேன் மெழுகு, தேனீயின் உமிழ் நீர் திரவம், தேன் ஆகியவற்றை எலிக்குச் செலுத்தி சோதனை நடத்தியிருக்கிறார்கள். அதற்கு முன்பு எலிக்கு செயற்கையாக புற்றுநோயை ஏற்படுத்தினர். அதன்பிறகே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தினமும் எலிக்கு தேனும் வழங்கப்பட்டது. சில மாதங்கள் கழித்து நடத்தப்பட்ட ஆய்வில், புற்றுநோய் தாக்கம் தடுக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.இதன் பிறகு தனித்தனியாக தேன் மெழுகு, உமிழ்நீர், விஷம் மட்டும் சோதனை எலிக்கு கொடுக்கப்பட்டது. இதில் தேன் மெழுகு மூலம் எலியின் புற்றுநோய்க்கட்டியின் வளர்ச்சி கணிசமாக கட்டுப்படுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்தனர். மேலும் எலியின் ஆயுட்காலமும் அதிகமாகியது.
தேனீயின் விஷம் காரணமாக எலியின் புற்றுநோய் கிருமிகளும் பெருமளவு அழிக்கப்பட்டது. தேனீயின் உமிழ்நீர் காரணமாக எலியின் உடலுக்குள் புற்றுநோய் கிருமிகள் பரவுவது கணிசமாகக் குறைந்திருந்தது.
''தேன் பொருட்கள் புற்றுநோய் கிருமிகள் மடியக் காரணமாகின்றன. அல்லது புற்றுநோய் கிருமிகளுக்குத் தேன் பொருட்கள் விஷமாகின்றன. இதன்மூலம் புற்றுநோய்க் கட்டியின் வளர்ச்சியை தடுப்பதற்கு தேன் பொருட்கள் முக்கிய கருவிகளாகப் பயன்படும்'' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர் ஆய்வாளர்கள்.
இன்னும் இதை உறுதி செய்ய பல கட்ட ஆய்வுகள் தேவைப்படுகின்றன.