1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? குழந்தைகளுக்கு உண்டாகும் வறட்டு இருமலுக்கான வீட்டு மருத்துவம்..!

1

குழந்தைகளுக்கு வரும் வறட்டு இருமலைக் கண்டாலே பயம்தான்.சிறு குழந்தைகளுக்கு வருகின்ற வறட்டு இருமலால் அவர்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள். தொண்டை உலர்வது, எரிவது போன்ற தொல்லைகளால் அழுதுக்கொண்டே இருப்பார்கள். பாவம், இந்த குழந்தைகளுக்கு தனக்கு என்ன பிரச்னை என்றும் சொல்ல தெரியாது. இருமிக்கொண்டே இருப்பார்கள்.

அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாடிரிக்ஸ் சொல்கிறது, “வறட்டு இருமலுக்கான மருந்துகள், வறட்டு இருமலைவிட மோசமானது. அதுவும் 6 வயதுக்கு உள்ள குழந்தைகளுக்கு இந்த மருந்துகளைப் பரிந்துரை செய்ய கூடாது” என்கிறது.
இந்த வறட்டு இருமலுக்கு என்ன தான் வழி என்கிறீர்களா? நிச்சயம் வழி இருக்கிறது. நம் வீட்டு மருத்துவத்தைப் பயன்படுத்தி, குழந்தைகளுக்கு வரும் வறட்டு இருமலைப் போக்கலாம்.
இருமல் என்பது உடலின் இயற்கையான நிகழ்வு. காற்றை வெளியே தள்ளி, மூக்கில் உள்ள அடைப்புகளை வெளியேற்றும் ஒரு அனிச்சை செயல். ஆனால், வறட்டு இருமல் இருந்தால் சளி வெளியேறாது. தொண்டை எரிச்சல், நெஞ்சில் வலி, தொடர்ந்து இருமினால் நெஞ்சு எரிச்சல் போன்ற தொல்லைகளைத் தரும் இந்த வறட்டு இருமல். அதுவும் இந்தப் பிரச்னை மாலையில் தொடங்கி இரவில் தூங்ககூட விடாமல் செய்துவிடும்.

வறட்டு இருமல் ஏற்படக் காரணங்கள்

சளி
இந்த சளி பிரச்னை இருந்தால், வறட்டு இருமல் குழந்தைக்கு வரும். மூக்கடைப்பு பிரச்னை இருந்தாலும் வரும். சளித் தொல்லைக்கு வீட்டு மருந்து சிறந்தது.

ஃப்ளு (Flu)
சில வைரஸ்களாலும் வறட்டு இருமல் வரும். இது குணமாக கொஞ்சம் அதிகமாகவே நேரம் எடுத்துக்கொள்ளும்.

க்ரூப் (Croop)
வைரஸால் இந்த க்ரூப் பிரச்னை வந்திருக்கும். அழுத்தமான இருமலாக இருக்கும். சத்தம் மிகுந்த இருமலாக இருக்கும். சுவாசப் பாதை வீங்கி இருக்கலாம். இதனாலும் வறட்டு இருமல் வரும்.

மாசு
காற்றில் உள்ள புகை, கெமிக்கல், பெயின்ட் போன்றவற்றால் வரலாம். இது குழந்தைகளை அதிகம் பாதிக்கும்.

வூப்பிங் இருமல் (Whooping)
மூக்கு, தொண்டையில் வரக்கூடிய பாக்டீரியல் தொற்று. மூச்சுவிட கூட சிரமத்தை ஏற்படுத்தும்.
ஆறு மாதத்துக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு மேற்சொன்ன பிரச்னைகள் இருந்தால் மருத்துவரிடம் அழைத்துச் செல்வது நல்லது.

வறட்டு இருமலுக்கான வீட்டு மருத்துவம்

குழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20
வீட்டு வைத்தியங்கள்…

தாய்ப்பால்
திரவ உணவுகள் எப்போதும் உணவுப் பாதையை ஈரத்துடன் பாதுகாக்கும். எரிச்சலைக் குறைக்கும். உங்கள் குழந்தை இன்னும் தாய்ப்பால் குடித்துக் கொண்டிருந்தால் வறட்டு இருமலுக்கு தாய்ப்பாலே சிறந்த மருந்து. அதையே கொடுங்கள். தாய்ப்பாலில் உள்ள ஆன்டிபாடிஸ் இருமலைச் சரியாக்கும்.

தலையை உயர்த்தி வைத்தல்
இருமலால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தால் சின்ன தலையனை அல்லது டவலை மடித்து, குழந்தையின் தலையின் கீழ் வைக்கவும். குழந்தைக்கு பயன்படுத்துவதால் அது மென்மையாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

ஷவர் ஸ்டீம்
ஆவி பிடிப்பதால் வறட்டு இருமல் சரியாகும். பெரியவர்களுக்கு இது சரி, குழந்தைகளுக்கு எப்படி? வெந்நீரை பாத் ரூம் பக்கெட்டில் ஊற்றி கதவை அடைத்துக்கொண்டு நீங்களும் குழந்தையும் பாத் ரூமில் இருங்கள். அந்த ஸ்டீம் குழந்தைக்கு நல்லது செய்யும்.

சலைன் டிராப்ஸ்
இந்த டிராப்ஸ், வறட்டு இருமலை நேரடியாக குணப்படுத்தாது. ஆனால், மூக்கடைப்பு பிரச்னையை சரி செய்து உங்கள் குழந்தையை சீராக சுவாசிக்க வைக்கும். உப்பு கலந்த நீரால் தயாரிக்கப்பட்ட இந்த டிராப்ஸ் குழந்தைகளுக்கு பயன்படுத்த கூடிய நல்ல மருந்து.

தேன்
ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைக்கு பயன்படுத்த கூடிய மருந்து இது. இந்த தேன் மருத்துவத்தைப் பாரம்பரியமாக பயன்படுத்தி வருகின்றனர். பட்டைத்தூளும் தேனும் சரியான அளவில் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் சரியாகும்.

சீரக தண்ணீர்
செரிமானத்துக்கான சிறந்த உணவு சீரகம். குழந்தைகளுக்கு, சிறுவர்களுக்கு சீரக தண்ணீர் கொடுக்க வறட்டு இருமல் சரியாகும். தண்ணீரில் சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து, சீரக தண்ணீரை வடிகட்டிக் கொள்ளுங்கள். தண்ணீர் ஆறியதும் அதைக் குழந்தைக்கு கொடுக்கலாம்.

சிக்கன் சூப்
வீட்டிலே செய்யகூடிய சிக்கன் சூப்பில் சத்துகள் ஏராளமாக உள்ளன. பூண்டு சேர்த்து சிக்கன் சூப் வைத்துக்கொடுங்கள். சளித் தொந்தரவை போக்க சிக்கன் சூப்பை 8 மாதங்களிலிருந்து குழந்தைக்கு தரலாம்.

மஞ்சள் கலந்த பால்
ஆன்டிபாக்டீரியல் சத்துகள் மஞ்சளில் இருப்பதால் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும். ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு டர்மெரிக் மில்க் மசாலாவை கொடுப்பதால், வறட்டு இருமலால் ஏற்படும் எரிச்சலைச் சரி செய்யும்.டர்மெரிக் மில்க் மசாலாவில் கலந்துள்ள மஞ்சள் மற்றும் இருமலை நீக்கும் ஆர்கானிக் மசாலா பொருட்கள் வறட்டு இருமலை விரைவில் விரட்ட வழி வகுக்கும்.

தைலம்
குழந்தையை குளிப்பாட்டும் ஒரு பக்கெட் தண்ணீரில் 2-3 சொட்டு தைலத்தை விட்டு அதிக் குளிக்க வைக்கலாம்.

கற்பூரம் / சூடம்
தேங்காய் எண்ணெயை சிறிது சூடாக்கி அதில் தூள் செய்த கற்பூரத்தை போடுங்கள். இது நன்றாக ஆறிய பிறகு அதில் இருந்து 4 முதல் 5 சொட்டுகள் எண்ணெயை உள்ளங்கையில் தேய்த்து குழந்தையின் மார்பு பகுதியில் நன்றாக தடவி விடுங்கள். மிகவும் குறைவான அளவு கற்பூரத்தை பயன்படுத்துங்கள். ஏனெனில் அதிகளவு கற்பூரத்தை பயன்படுத்தும் போது அது குழந்தையின் சருமத்தை பாதிக்க கூடும்.

மஞ்சள்
விரலி மஞ்சளை எடுத்துக் கொண்டு அதை மெழுகுவர்த்தி அல்லது விளக்கு எரியும் நெருப்பில் சுட்டுக் கொள்ளுங்கள். அந்த புகையை ஒரு நிமிடம் குழந்தை சுவாசிக்கும் படி செய்யுங்கள். மஞ்சள் எரிந்த பிறகு அது நூல் போல தான் வரும் என்பதால் புகையை சுவாசிக்க வைக்க பயப்பட வேண்டாம. 1 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு குடிக்கும் பாலுடன் இம்மியளவு டர்மெரிக் மில்க் மசாலாவை கலந்து கொடுக்கலாம்.டர்மெரிக் மில்க் மசாலாவில் கலந்துள்ள மஞ்சள் மற்றும் சளியை நீக்கும் ஆர்கானிக் மசாலா பொருட்கள் சளி தொல்லையில் இருந்து விரைவில் குணமடைய வழி செய்கிறது

சாய்வான முறையில் தூங்க வைத்தல்
சளி தொந்தரவால் உங்கள் குழந்தை தூங்க சிரமப்படுகிறதா? தலையணையை குழந்தையின் முதுகுப்புறம் வைத்து சற்று சாய்வான முறையில் குழந்தையை தூங்க வையுங்கள். இதனால் மூக்கில் இருந்து சளி தொந்தரவு வராமல் குழந்தை நிம்மதியாக தூங்கும்.

பூண்டு
2 பல் பூண்டை எடுத்து உரித்துக்கொண்டு அதை 50 மில்லி தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் வரை வேக விடவும். ஆறிய பிறகு இந்த தண்ணீரை எடுத்து 2 முதல் 3 மணி நேரத்திற்கு ஒரு முறை குழந்தைக்கு தரவும். 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இதனை தர வேண்டும்.

இஞ்சி
சளியை வெளியேற்றும் தன்மை இஞ்சிக்கு உள்ளது மேலும் மூக்கடைப்புக்கும் இஞ்சி சிறந்த தீர்வளிக்கும். இஞ்சியை பொடியாக துருவிக் கொண்டு அதனை வெந்நீரில் போட்டு வைத்து 10 நிமிடங்களுக்கு பிறகு அந்த தண்ணீரை குழந்தைக்கு தரலாம். 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இதனை தர வேண்டும்.

துளசி இலைகள்
துளசி இலையில் சிறந்த மருத்துவ தன்மை உள்ளதால் இதனை தண்ணீர் அல்லது பாலுடன் சேர்த்து தரலாம். தண்ணீரில் இதனை ஒரு மணி நேரம் ஊறவைத்து பின் அந்த தண்ணீரை குழந்தைக்கு கொடுக்கலாம். இதனை 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைக்கு தர வேண்டும்.

ஓமம்
ஓமத்தை ஒரு கடாயில் போட்டு மிதமான தீயில் வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனை ஒரு துணியில் கொட்டி மூட்டை போல கட்டிக் கொள்ளுங்கள். இதனை குழந்தையின் மூக்கருகே கொண்டு சென்று சுவாசிக்க வையுங்கள். அல்லது குழந்தையின் மூக்கருகே இதனை வைத்து விடலாம்…

வெண்டைக்காய்
வெண்டைக்காயில் உள்ள வழவழப்புத் தன்மை குழந்தையின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். இது குழந்தையின் உடலில் உள்ள சளி மற்றும் இருமல் மற்றும் தொண்டை பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். வெண்டைக்காயை சிறு சிறு துண்டுகளாக்கி அதை கொதிக்கும் தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் வைத்திருக்கவும். ஆறிய பிறகு இந்த தண்ணீரை எடுத்து குழந்தைக்கு குடிக்க தரலாம். ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைக்கு இதனை தர வேண்டும்…

செவ்வந்திப்பூ 
செவ்வந்திப்பூ சிறிது கலந்த டீயை 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைக்கு தரலாம். தொண்டை பிரச்சினைக்கு தீர்வளிக்கும் தன்மை இதில் உள்ளது.

எலுமிச்சம்பழம்
எலுமிச்சம்பழத்தில் வைட்டமின் சி இருப்பதால் அது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைக்கு லெமன் ஜூஸ் உடன் தேன் மற்றும் தண்ணீர் கலந்து தரலாம்…

பட்டை
பட்டையில் உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள் இருப்பதால் இது உடலில் ஏற்படும் தொற்று நோய் மற்றும் பாக்டீரியா தொற்றுக்கு தீர்வளிக்கும். ஆனால் இதனை ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கே தர வேண்டும். பட்டை தூள் கால் ஸ்பூன் எடுத்துக் கொண்டு அதனை ஒரு டேபிள்ஸ்பூன் தேனுடன் கலந்து 4 மணி நேரத்திற்கு ஒரு முறை தரவும். குழந்தைக்கு சளி இருமல் தொந்தரவு இருப்பதாக தோன்றிய ஆரம்ப கட்டத்திலேயே இதனை தருவதன் மூலம் நிவாரணம் கிடைக்கும்.

கடுகு எண்ணெய்
5 முதல் 10 டீஸ்பூன் கடுகு எண்ணெயில் நசுக்கிய பூண்டு மற்றும் ஓமத்தை தாளிக்கவும். ஆறிய பிறகு இந்த கலவையை எடுத்து பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். தேவைப்படும் போது இதனை எடுத்து குழந்தையின் மார்பு பகுதி, நெற்றி மற்றும் தொண்டையில் தடவுங்கள்.

குழந்தைகளுக்கான விக்ஸ்
குழந்தைகளுக்கான விக்ஸ் வாங்கிவைத்துக் கொள்ளுங்கள். சளி தொந்தரவு ஏற்படும் போது குழந்தையின் பாதங்களில் இதனை தடவி சாக்ஸ் போட்டு விடுங்கள். மேலும் இதனை குழந்தையின் மார்பு மற்றும் தொண்டை பகுதியில் தடவலாம். குழந்தைக்கு சிறந்த தீர்வளிக்கும் முறை இது.

ஈரப்பதமூட்டி
பொதுவாக குழந்தைகளுக்கு சளி மற்றும் இருமல் தொல்லை ஏற்படும் போது காற்றை உள்ளிழுப்பதில் சிரமம் ஏற்படும். அப்போது மிதமான ஈரப்பதமூட்டியை அறையில் வைத்து அதை குழந்தையை சுவாசிக்க செய்யலாம்.

ஆவி பிடித்தல்
ஆவி பிடிக்கும் போது குழந்தைகளை தனியாக விடாதீர்கள். பக்கெட் அல்லது பாத் டப்பில் வெந்நீரை எடுத்துக் கொண்டு குழந்தைகளின் கைகளை பிடித்துக் கொண்டு மூச்சை உள்ளிழுக்க வைக்கவும். சூடான காற்று உள்ளே செல்லும் போது குழந்தையின் உடலில் இருக்கும் கபம் வெளியேறி விடும்.

நெய்
2 டேபிள் ஸ்பூன் நெய்யை எடுத்து அதை சூடாக்கி அதில் 2 முதல் 3 மிளகை போட்டு பின் அதனை அரைத்து வறட்டு இருமலால் அவதிப்பட்டு வரும் குழந்தைக்கு கொடுங்கள். ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைக்கு இதனை தரலாம்…

சில குழந்தைகளுக்கு வைரஸ்களால் ஏற்பட்ட வறட்டு இருமலைச் சரியாக்க, நேரம் எடுத்துக்கொள்ளும். மற்றபடி வீட்டு மருத்துவத்தால் குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற வறட்டு இருமல் பிரச்னையை எளிமையாகச் சரி செய்ய முடியும்.

கவனிக்க : ஒரே நேரத்தில் எல்லா மருந்துகளையும் பின்பற்ற வேண்டாம். இதில் குறிப்பிட்டுள்ள எல்லாம் உங்கள் தகவலுக்கு தான். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு தன்மையுடன் இருக்கும் என்பதால் அவர்களின் உடலுக்கு ஏற்றது எது? அலர்ஜியை ஏற்படுத்தக் கூடியது எது என்பதை தெரிந்து கொண்டு எச்சரிக்கையோடு பயன்படுத்துங்கள்.பச்சிளம் குழந்தைகளில் சிலருக்கு இந்த மருத்துவ முறைகள் ஒத்துக் கொள்ளாது என்பதால் குழந்தைகளின் வயதை கருத்தில் கொண்டு இதனை பின்பற்றுங்கள்..
ஒருவேளை புதிதாக எதையும் செய்வதற்கு முன்னர் உங்கள் மருத்துவரை உரிய முறையில் கலந்தாலோசித்து கொள்ளுங்கள்.
குழந்தைகளுக்கு கீழ்கண்ட அறிகுறிகள் இருந்தால் நீங்கள் இந்த முறைகளை பின்பற்றலாம்…
1. லேசான ஜலதோஷம் (மூக்கில் இருந்து நீர் வடிதல்)
2. லேசான இருமல்
3. தொண்டை வலி
4. மூக்கடைப்பு

 

Trending News

Latest News

You May Like