இது தெரியுமா ? மண்பானை சமையலில் கிடைக்கும் ஆரோக்கியங்கள்..!

உலகில் கிடைக்கும் அலுமினியம், சில்வர், மைக்ரோஓவன் போன்றவற்றில் மக்கள் மூழ்கிவிட்டார்கள்.ஆனால், இவற்றில் சமைத்து உண்ணும் உணவினை விட மண்பானை சமையல் உடலிற்கு ஆரோக்கியத்தை வழங்கும்.
இதனால் தான் அந்தகாலத்தில் எல்லாம் நம் முன்னோர்கள் அதிக வயது உயிர் வாழ்ந்தனர்.மண்பானைகளில் சமைக்கும் போது உணவின் மீது வெப்பம் சீராக, மெதுவாக பரவுகிறது. இது உணவை சரியான முறையில் சமைக்க உதவுகிறது.
மேலும் மண்பானைகளில் உள்ள நுண்துளைகள் மூலம் நீராவி, காற்று உணவில் ஒரே சீராக ஊடுருவி உணவை சமைக்க உதவுகிறது.இதனால் மண்பானைகளில் சமைக்கும் உணவு ஆவியில் வேக வைத்த உணவைப்போன்ற தன்மையை பெறுகிறது. இது உடல் நலனுக்கு உகந்தது.இதனால் உணவில் உள்ள சத்துகள் பாதுகாக்கப்பட்டு, எளிதில் செரிமானமாகும் தரமான உணவு கிடைக்கிறது. மண் பாத்திரங்கள் உணவில் உள்ள அமிலத் தன்மையை சமப்படுத்தும் தன்மை கொண்டவை.
உப்பு, புளிப்பு சுவையுடைய உணவுகள் சமைக்கும் போது, மண்பானை தீங்கான விளைவுகள் எதையும் ஏற்படுத்துவதில்லை.ஆனால் உலோக பாத்திரங்கள் உணவுடன் வினைபுரியும் நிலை உள்ளது. மண்பானையில் சமைக்கும் போது, அதிக எண்ணெய் பயன்படுத்தவும் தேவையில்லை. எனவே மண்பானையில் சமைக்கும் உணவு மிகவும் ஆரோக்கியமானதாகும்.
மண் பானைகளில் சமைக்கும் பொழுது, அதில் உள்ள நுண்துளைகள் சூடு மற்றும் ஈரதன்மையை சமமாக பரவ அனுமதிக்கின்றன. மற்ற வகையான பாத்திரங்களில் தயாரிக்கப்படும் உணவைக் காட்டிலும் மண்பானையில் சேமிக்கப்பட்ட உணவுகள் அதிக ஊட்டச்சத்து மதிப்பைத் தக்க வைத்துக் கொள்கின்றன. மேலும், மண் பானையில் சமைக்கப்படும் அரிசி, இறைச்சி போன்ற உணவுகளும் மென்மையாக பஞ்சு போல வெந்து வரும்.
சமையலில் குறைந்த எண்ணெயை பயன்படுத்த விரும்புபவர்களுக்கு மண் பானை சமையல் ஏற்றது. குறைந்த எண்ணெயை பயன்படுத்தி மண்பானையில் உணவை சமைக்கலாம். இந்த பானைகள் சூடாக அதிக நேரம் எடுக்கும், ஆகையால சமையல் செயல்முறையும் மெதுவாக நடக்கும். இது உணவில் உள்ள இயற்கை ஈரப்பதம் மற்றும் எண்ணெய்களை தக்கவைத்து கொள்ள உதவுகிறது.
மண் பானையில் சமைக்கும் பொழுது உணவின் இயற்கையான வாசனை தக்கவைக்கப்படுகிறது. மண் பானைகளின் தன்மை மற்றும் மெதுவான சமையல் செயல்முறையால் உணவின் மணமும் நிறைந்து இருக்கும்.
மண்பாண்டங்களில் ஆல்கலைன்கள் நிறைந்துள்ளன. இவை தண்ணீரின் அமிலத்தன்மையோடு இணைந்து, உடலின் pH தன்மையை சமன் செய்கிறது. நீரில் அமிலத்தன்மை சமன் செய்யப்படுவதால், வாயுத்தொல்லைகள் நீங்கும்.
மண்பாண்டத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரைப் பருகுவது, சன் ஸ்டோக்கில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது. மற்றொரு நன்மை என்னவென்றால், தொண்டையில் நோய் தொற்று உள்ளவர்கள் இதனைப் பருகுவதால், தொற்று நீங்கி குணமடைவர்.
மற்ற பாத்திரங்களில் நீங்கள் சமைக்கும் பொழுது ஊற்றும் எண்ணெயை விட மட்பாண்டத்தில் நீங்கள் சமைக்கும் பொழுது குறைவாகவே ஊற்றலாம். உணவை மட்பாண்டத்தில் மிதமான தீயில் சமைக்கும் பொழுது நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறது. எனவே இதில் இருக்கும் ஈரப்பதம் மற்றும் இயற்கையாக கிடைக்கும் எண்ணெய் பாதுகாக்கப்படுகிறது எனவே நாம் அதிகமாக எண்ணெய் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது. இதனால் மட்பாண்டத்தில் சமைப்பதால் இதயத்திற்கும் வலு சேர்க்கிறது. மட்பாண்டத்தில் உணவை சமைத்து வந்தால் இதய நோய்க்கான அறிகுறிகள் குறையும்.
முதன் முதலாக மட்பாண்டம் வாங்குபவர்கள் எடுத்தவுடன் அப்படியே கழுவி சமைத்து விடக்கூடாது. மட்பாண்டத்தில் இருக்கும் மண் வாசம் போக வேண்டும். சிறு சிறு மண் துகள்கள் அப்படியே உணவில் கலந்து விடக்கூடும். எனவே முதல் முறை புதிதாக மண்பாண்டம் வாங்குபவர்கள் சிறிது நேரம் அதனை தண்ணீரில் மூழ்கி வைக்கவும். நன்கு உலர்ந்த பின் உங்களிடமிருக்கும் சமையல் எண்ணையை மண்பாண்டத்தின் உள் புறமாக தடவி நிரம்ப தண்ணீரை ஊற்றி குறைந்த தீயில் 2 மணி நேரம் கொதிக்க விடுங்கள். பின்னர் அப்படியே தண்ணீரை ஆற வையுங்கள். இதனால் மட்பாண்டம் திடமாக மாறும். அதன் பிறகு நீங்கள் சமைக்கும் பொழுது எந்த விதமான கசிவும் நுண்துளைகள் மூலம் ஏற்படாமல் இருக்கும். மேலும் மட்பாண்டத்தில் இருக்கும் மண் வாசமும் அகலும்.
அதன் பிறகு சமைக்கப்படும் உணவானது ஆரோக்கியமானதாகவும், ஊட்டச்சத்து நிறைந்ததாகவும், ருசி மிகுந்ததாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இவ்வளவு நன்மைகளை தரக்கூடிய மட்பாண்டத்தை விடுத்து மற்ற பாத்திரங்களை இன்னுமும் பயன்படுத்துவது ஏன்? கூடுமானவரை உங்களுக்கு எதற்கெல்லாம் மட்பாண்டம் பயன்படுத்த முடியுமோ! அந்த உணவு வகைகளுக்கு எல்லாம் மட்பாண்டத்தை வாங்கி பயன்படுத்துங்கள். குறிப்பாக கீரை மற்றும் பருப்பு உணவை சமைக்க மண் பண்டத்தை பயன்படுத்துவது ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்யும்.