இது தெரியுமா ? கண்நோய்களை விரட்டும் நெல்லிக்காய்..!
இந்திரன் தேவலோகத்தில் அமுதத்தை உண்ணும் போது அதில் ஒரு துளி பூலோகத்தில் விழுந்ததாம். அதிலிருந்து முளைத்து உண்டானது தான் நெல்லிமரம் என்று கூறப்படுகிறது. இத்தனை உபயோகமுள்ள ஒரு மரத்தை தெய்வீக மரம் என்று சொல்லலாம். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என இருவகைகள் உண்டு. தமிழகத்திலும், வட மாநிலங்களிலும் அதிகமாக வளர்கிறது.
தமிழகத்தில் வளரும் நெல்லிக்காய் சிறியளவில் கொஞ்சம் துவர்ப்பும், புளிப்பும் அதிகம் கொண்டதாக இருக்கும். வட நாட்டில் வளரும் நெல்லி பெரிதாக இருக்கும். பல மருத்துவக் குணங்கள் இருப்பதாலேயே நெல்லியை அனைவரும் உயர்வாகப்புகழ்கிறார்கள். நெல்லிக்கனியை உண்டு தண்ணீரைக் குடித்தால் அது எப்பேர்பட்ட தண்ணீராக இருந்தாலும் இனிக்கும். இதன் காரணமாகவே கிராமங்களில் கிணற்றுத் தண்ணீர் ருசியாக இல்லாவிட்டால், நெல்லி மரக்கிளையை வெட்டி கிணற்றில் போட்டு விடுவார்கள்.
தண்ணீர் இனிப்பாக மாறிவிடும். பெரியளவில் உள்ள நெல்லிக்காய் ஊறுகாய் செய்யவும், சிறியதை ஆயுர்வேத மருந்துகள், லேகியம் முதலியவை செய்ய பயன்படுத்துகிறார்கள்.
தினம் ஒரு நெல்லிக்காயை உண்டால், அது தேகத்திற்கு புத்துணர்ச்சியைக் கொடுத்து நாம் இளமையாக இருக்க உதவும் டானிக்காக இருக்கும். தொற்றுநோய்கள் அண்டாது. இருதயம், சிறுநீரகம் பலப்படும். ஒரு ஸ்பூன் நெல்லி சாறையும், அரை ஸ்பூன் தேனையும் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் கண் நோய் வராது.உடல் சதை பலப்படும்.
நெல்லிச்சாறுடன் பாகற்காய்சாறைச் சேர்த்துச் சாப்பிட்டால், கணையத்தைத் தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி சர்க்கரை வியாதியைத் தடுக்கும். ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, ஒரு ஸ்பூன் நாவல் பழப்பொடி, ஒரு ஸ்பூன் பாவற்காய் தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வரவே வராது. உலர்ந்த நெல்லிக்காயையும், சிறிது வெல்லத்தையும் சேர்த்து சாப்பிட்டால் முடக்கு வியாதி குணமாகிவிடும். நல்ல சுத்தமான தண்ணீரில் இரண்டு நெல்லிக்காய்களைப் போட்டு ஊற வைத்து அந்தத் தண்ணீரை எடுத்து கண்களை அகல விரித்து கழுவவும்.
கண்ணுக்குச் சிறந்த மருந்து இது. கண் சிவந்து புண்ணாகுதல் முதலிய வியாதிகளை குணப்படுத்தும்.அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பதிலும் நெல்லிக் காய்க்கு பிரதான இடம் உண்டு. நெல்லியின் உள்ளிருக்கும் கொட்டைகளை நன்கு பொடி செய்து அதை தேங்காய் எண்ணெயில் கலந்து, நன்றாக கொதிக்க வைத்து, பின் குளிர வைத்து தலைக்குத் தடவி வந்தாலும், தலை பளபளப்பாகவும் கருமையாகவும், அடர்த்தியாகவும் இருக்க உதவும். தரமான தலை சாயங்களில் நெல்லி விதையைத்தான்
பயன்படுத்துகிறார்கள்.
முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை சித்தர்கள் முதல் பாமரர் வரை அறிவார்கள். ஆனால் நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என உரைத்திருக்கின்றனர். நெல்லிக்காயில் 8.75 மில்லி கிராம் வைட்டமின் சி உள்ளது. தாதுப்புக்களும், இரும்பு சத்தும் நிறைந்துக் காணப்படுகிறது.
ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில் 20 மடங்கு வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. ஆப்பிளை விட 3 மடங்கு புரதச்சத்து நெல்லியில் உள்ளது. அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது. நெல்லிவற்றல், பச்சைபயறு வகைக்கு 20 கிராம் எடுத்து 1 லிட்டர் நீர்விட்டு 200 மி.லி.ராக காய்ச்சி வடித்து, 100 மி.லி என காலையும் மாலையும் அருந்தி வந்தால் தலைச்சுற்றல் கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக்கொதிப்பு நீங்கும்.