இது தெரியுமா ? குழந்தைகளுக்கு சப்போட்டா பழம் கொடுப்பதால்...

“சிக்கூ” என்று அழைக்கப்படும் சப்போட்டா பழமானது நிறைந்த சுவையும், நல்ல சத்தும் கொண்டது. எல்லா வயதினருக்கும் ஏற்ற அருமையான கனி. இந்திய துணைக் கண்டத்தில் சிக்கூ என்ற பெயரில்இது பிரபலமானது. லேசான பிரவுன் அல்லது மஞ்சள் நிறத்தில் மிகவும் மென்மையாக இருக்கும் இந்தப் பழம், வாயில் வைத்ததுமே அப்படியே கரைந்து போகும் அளவுக்கு சுவையும், குணமும் கொண்டது.
இதில் பிரக்டோஸ், சுக்ரோஸ் ஆகிய இனிப்புகள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் சத்துக்களும் இதில் அடங்கியுள்ளது. இதனால்தான் இதை பழங்களிலேயே சூப்பர் பழம் என்றும் கொண்டாடுகிறார்கள்.
குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பான பழம் சப்போட்டா. நிறைய ஆரோக்கிய அம்சங்கள் இதில் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது, மலச்சிக்கல் இல்லாமல் மலம் நன்றாக கழிய உதவுகிறது. தினசரி இதை கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கு சப்போட்டா எப்போதிலிருந்து கொடுக்கலாம் ?
குழந்தைக்கு ஆறு மாத காலத்திலிருந்தே இதை கொடுக்க ஆரம்பிக்கலாம். கொஞ்சம் கொஞ்சமாக இந்தப் பழத்தை குழந்தைகளுக்கு கொடுத்து வரலாம். சிறு வயதிலிருந்தே இதன் சுவையை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
சப்போட்டாவில் நிறைய சத்துக்கள் உள்ளன. 100 கிராம் பழத்தில் என்ன சத்து இருக்கிறது என்று பார்ப்போம்.,
சக்தி – 73 கிலோகலோரி
கொழுப்பு – 1.26 கிராம்.
கார்போஹைட்ரேட்டுகள் – 13.9 கிராம்
நார்ச்சத்து – 9.6 கிராம்
புரதம் – 0.92 கிராம்
கொலஸ்டிரால் – கிடையாது
வைட்டமின்களும் அதிக அளவில் சப்போட்டா பழத்தில் உள்ளது. அவை என்ன என்ன தெரியுமா?
நியாசின் – 0.200 மில்லிகிராம்
ரிபோபிளேவின் – 0.03 மில்லி கிராம்
தையமின் – 0.01 மில்லிகிராம்
விட்டமின் ஏ – 13.45 எம்சிஜி
விட்டமின் சி – 20.96 மில்லி கிராம்
விட்டமின் பி 6- 0.12 மில்லிகிராம்
போல்டேட் – 10.83 மைக்ரோ கிராம்
குழந்தைக்கு சப்போட்டா தரும் நன்மைகள்:
இனிப்பானது எதுவாக இருந்தாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அப்படி இருக்கும்போது சப்போட்டாவை மட்டும் அவர்கள் விட்டு வைப்பார்களா. முதல் தகுதியே இந்தப் பழம் இனிமையானது என்பதுதான். இதைத் தாண்டி நிறைய பலன்கள் உள்ளன.
ஜீரணம் சரியாகும்-
குழந்தைகளுக்கு அதிக அளவில் வரும் ஒரு பிரச்சினை என்றால் அது அஜீரணப் பிரச்சினைதான். அதை இந்த சப்போட்டா சரி செய்யும். சாப்பாடு செரிமானம் ஆக இதில் உள்ள நார்ச்சத்துக்கள் உதவும். மலச்சிக்கல் சரியாகும்.
உடல் ஆரோக்கியம் மேம்படும்
இந்தப் பழத்தில் வைட்டமின்கள் சி, ஏ ஆகியவை இருப்பதால் குழந்தைகளுக்கு கண் பார்வை தெளிவாகும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். அதேபோல வைட்டமின் பி6 இருப்பதால் மூளை வளர்ச்சி சிறப்பாக இருக்கும். ஹீமோகுளோபின் அளவும் மேம்படும். ஆர்பிசி எனப்படும் சிவப்பணுக்கள் உற்பத்தியும் சிறப்பாக இருக்கும்.
சளி இருமல் சரியாகும்
சளி இருமல் பிரச்சினைக்கும் சப்போட்டா கை கொடுக்கும். மார்புச் சளியும் கட்டுப்படும், மார்புக்கட்டும் போகும். சுவாசம் சீராகும்.
உடலுக்கு சக்தி
சப்போட்டா பழத்தில் பொட்டாசியம், இரும்பு, கால்சியம், காப்பர் ஆகியவை இருப்பதால் உடலுக்கு நல்ல எனர்ஜியும் கிடைக்கும். நமது உடல் வலுவாக இருக்க இவையெல்லாம் உதவும்.
செல் சிதைவு குறையும்
இந்த பழத்தில் ஆன்டி ஆக்சிடன்டுகள் இருப்பதால் செல் டேமேஜ் எனப்படும் செல் அழிவும் தவிர்க்க இப்பழம் உதவுகிறது. இதனால் உடல் வளர்ச்சி சீராக இருக்கும்.
சரி இதெல்லாம் இருக்கட்டும்.. குழந்தைகளுக்கு எந்த வகையில் இந்த பழத்தை கொடுப்பது என்று பார்ப்போம்.குழந்தைகளுக்கு சப்போட்டா பழத்தை கொடுப்பதில் சிக்கல் இல்லை என்றாலும் கூட சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்வது நல்லது.
நன்றாக தோலை உரித்து விட்டு சதைப் பகுதியை மட்டுமே குழந்தைகளுக்குக் கொடுங்கள். விதைகளை கவனமாக நீக்கி விட வேண்டும். ஏனென்றால் அவை சற்று பெரிதாக இருக்கும் என்பதால் வாயில் சிக்கிக் கொள்ளக் கூடாது.
குழந்தைக்கு பல் முளைக்காத பருவம் என்றால் பழத்தை நன்றாக மிக்ஸியில் அடித்து ஜூஸ் போலவும் கொடுக்கலாம். இது எளிதில் ஜீரணமாகவும் உதவும்.
நன்கு பழுத்த பழத்தை மட்டுமே குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுங்கள். அப்போதுதான் விழுங்க எளிதாக இருக்கும். செரிமானமும் ஆகும். அப்படியே முழுப் பழத்தையும் சாப்பிடக் கொடுக்காதீர்கள். அது சாப்பிட சிரமமாக இருக்கும். தொண்டையில் அரிக்கவும் செய்யலாம்.
பழம் மிகவும் கனிந்து போயிருந்தால் அதைக் கொடுக்காதீர்கள். அல்லது அழுகல் வாசனை இருந்தாலும் அதையும் கொடுக்காதீர்கள். நல்ல மணமும், வெளியில் மெத்து மெத்து என்று இருந்தாலும் மட்டும் அதை கொடுங்கள்.
சுவையாக இருக்கிறது என்று அதிகமாக சாப்பிட்டு விடக் கூடாது. போதிய அளவில் மட்டுமே சாப்பிடக் கொடுங்கள். இல்லாவிட்டால் செரிக்காமல் போய் விடும்.