இது தெரியுமா ? கல் அடைப்பு முதல் ஆண்மை குறைபாடு வரை பல பிரச்சினை தீர்க்கும் நெருஞ்சில்...!

விளை நிலங்களிலும்,சாலை ஓரங்களிலும்,களைச்செடியாக முளைத்திருக்கும் நெருஞ்சி பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.
நெருஞ்சி இலையில், இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை காணப்படுகின்றன. இது பாலியல் பிரச்சினைகளையும், சிறுநீர் கோளாறுகளையும் நீக்கும் அருமருந்தாக உள்ளது.
நெருஞ்சில் செடியை அரிசியோடு சேர்த்து வேக வைத்து, வடித்த கஞ்சியோடு நாட்டுச் சர்க்கரை கலந்து கொடுக்க, சிறுநீர் எரிச்சல், வெள்ளைப்படுதல் நோய் குணமாகும். குளிர்ச்சித் தன்மை கொண்ட நெருஞ்சில், சிறுநீர்ப் பெருக்கியாகச் செயல்பட்டு, உடலின் வெப்பத்தை முறைப்படுத்தும்.
சிறுநீரகக் கற்களை உடைத்து வெளியேற்றப் பயன்படும் தாவரங்களுள் நெருஞ்சில் முக்கியமானது. ‘நீர்க்கட்டு துன்மாமிசம் கல்லடைப்பு… நெருஞ்சிநறும் வித்தை நினை’ எனும் அகத்தியரின் பாடல், நீரடைப்பு, சதையடைப்பு, கல்லடைப்பு சார்ந்த அறிகுறிகளைக் குறைப்பதில் நெருஞ்சில் சிறந்தது என்பதை வலியுறுத்துகிறது.
நெருஞ்சில் செடியை அரைத்து வெள்ளாட்டுப் பாலில் ஊற வைத்து வடிகட்டி, தேனில் கலந்து கொடுக்க ஆண்மை அதிகரிக்கும் என்கிறது சித்த மருத்துவம். நெருஞ்சில் விதைப் பொடி, நீர்முள்ளி விதைப் பொடி, வெள்ளரி விதைப் பொடி ஆகியவற்றை ஒன்றுசேர்த்து பாலில் கலந்து குடித்துவர, விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
நல்ல உறக்கத்தை வரவழைக்க, நெருஞ்சில் பொடியைப் பாலில் கலந்து இரவில் குடித்து வரலாம். நெருஞ்சில் விதைகளையும் கொத்துமல்லி விதைகளையும் சம அளவு எடுத்து, கஷாயமாக்கிப் பருக, வேனிற் கால நோய்கள் கட்டுப்படும். நெருஞ்சில் பொடி கொண்டு தயாரிக்கப்படும் நெருஞ்சில் பானத்தை, சுரத்தைக் குறைப்பதற்காக காஷ்மீர் பகுதி மக்கள் பயன்படுத்துகின்றனர்.
மஞ்சள் காமாலை உள்ளவர்களுக்கு கீழா நெல்ல அருமருந்து என்பது நமக்குத் தெரியும். ஆனால் வெறும் கீழாநெல்லி மட்டும் அதற்கு மருந்தாகக் கொடுப்பதில்லை. கீழாநெல்லி வேருடன் அதே சமஅளவு நெருஞ்சி வேரும் சேர்த்து பொடி செய்தோ அல்லது பேஸ்ட் போல அரைத்தோ அதை இளநீர் அல்லது மோரில் கலந்து குடித்து வந்தால் மஞ்சள் காமாலை கட்டுக்குள் வரும்.
உடல் சூட்டின் காரணமாக தலைவலி, கண் எரிச்சல் ஆகியவை உண்டாகும். அருகம்புல்லையும் நெருஞ்சி இலை மற்றும் தண்டோடு எடுத்து சுத்தம் செய்து அவற்றுடன் சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீர் விட்டுக் காய்ச்சி, அரை லிட்டராக வற்றியதும் அந்த நீரை குடித்து வந்தால் கண் எரிச்சல், கண் வலி, கண்ணில் நீர் வருவது போன்ற கண் சம்பந்தப்பட்ட பல நோய்களும் தீரும்.