1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது....அதற்கு சிறந்த உதாரணம் "சுண்டைக்காய்"..!

1

`சுண்டக்கா மாதிரி இருந்துகிட்டு என்ன வேல பண்றான் பாரு…’ எனும் பழமொழி நம்மிடையே பிரசித்தம்! ஆனால், மூர்த்தி சிறியது என்றாலும் கீர்த்தி பெரியது என்பார்கள். அது இதற்குப் பொருந்தும். சுண்டைக்காய் குட்டியாக, இருந்தாலும் அது கொடுக்கும் நன்மைகள் தனித்துவமானவை.

சுண்டைக்காய் கசப்பாகத்தான் இருக்கும் என்றாலும் அதன் நன்மைகள் உங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை தருகின்றன 

சிலருக்கு பசி உணர்வே இல்லை எனில் அது உடல் நலனின்மையின் அறிகுறியாகும். எனவே அதை உடனே சரி செய்யும் வேலையில் இறங்க வேண்டும். அந்த வகையின் சுண்டைக்காய் உங்கள் பசியை தூண்டுவதில் சிறப்பாக செயலாற்றுகிறது. எனவே சுண்டைக்காயை வாரம் ஒரு முறையேனும் சமைத்து சாப்பிட வேண்டும்.

உங்களுக்கு செரிமானமின்மை, வயிற்று மந்தம் , வயிற்றுக்கோளாறு போன்ற வயிற்றுத் தொந்தரவுகள் இருக்கின்றன எனில் அதற்கு சுண்டைக்காய் நல்ல மருத்துவ பலனாக இருக்கும்.

வயிற்றுவலி, உப்புசம், ஏப்பம், சுவையின்மை போன்ற செரிமானம் சார்ந்த அறிகுறிகளைக் குணமாக்க, சுண்டை வற்றல் இருந்தால் போதும்.சுண்டைக்காய் வற்றல், வயிற்றில் தங்கிய புழுக்களை உடனடியாக வெளித்தள்ளும். கழிச்சல் நோயைக் கட்டுக்குள் வைக்க சுண்டை வற்றலை நன்றாகப் பொடி செய்து, தயிரில் கலந்து சாப்பிடலாம். சில நேரங்களில் சோர்வாக இருக்கும் மந்தமான வயிற்றின் செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் சுண்டை வற்றல் உதவுகிறது.

கால்சியம் சத்து சுண்டைக்காயில் அதிகமாக கிடைக்கிறது. எனவே எலும்பு தேய்மானம், எலும்பின் உறுதித்தன்மையை இழக்காமல் இருக்க சுண்டைக்காயை சாப்பிடுங்கள். இது உங்களுக்கு எதிர்கலத்தில் எலும்பு தொடர்பான பிரச்சனைகளை தடுக்க உதவும்.

சுண்டைக்காய் குழம்பு வைத்து நிறைய சுண்டைக்காயை எடுத்து சாதத்தில் நன்கு பிசைந்து சாப்பிட்டுப்பாருங்கள். உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை குறையலாம். மலச்சிக்கல் பொதுவாக உடல் உஷ்ணம் காரணமாகவும் ஏற்படலாம். எனவே அதை சரி செய்ய உதவும் ரகசியம் சுண்டைக்காயில் இருக்கும்.

சுண்டைக்காய்க்கு சளியை போக்கும் தன்மை உள்ளது. குறிப்பாக நெஞ்சு சளியை எடுக்கும் ஆற்றலும் சுண்டைக்காய்க்கு உண்டு. எனவே பிஞ்சு சுண்டைக்காய்களை குழம்பு அல்லது துவையல் வைத்து சாப்பிடுங்கள்.

பிள்ளைகளின் மலத்தில் புழுக்கள் தென்பட்டால், சுண்டைக்காய் பொடியாக்கி தரலாம். மாதம் இரு முறை சுண்டை சேர்ந்த உணவுகளைச் சேர்த்து வந்தால், செரிமானத் தொந்தரவுகள், உணவு எதிர்த்தெடுத்தல், ஆசனவாய் எரிச்சல், வயிற்றுவலி போன்ற தொந்தரவுகள் நிச்சயம் துன்புறுத்தாது.

`என்ன சாப்பிட்டாலும் உடம்புல ஒட்ட மாட்டேங்குதே’ என்று புலம்புகிறீர்களா! சுண்டைக்கும் அவ்வப்போது உணவில் இடம் அளிக்கத் தொடங்குங்கள்... உங்களுக்குப் பிடித்த வகையில் சுண்டையை சமைத்துக் கொடுக்கச் சொல்லுங்கள். உணவின் சாரங்கள் முறையாக உறிஞ்சப்பட்டு, சதை பிடிக்க ஆரம்பித்துவிடும்.

சுண்டை வற்றல், நெல்லி வற்றல், வெந்தயம், மாதுளை ஓடு, சீரகம், கறிவேப்பிலை… இவற்றை இளவறுப்பாக வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு, ஐந்து சிட்டிகை அளவு மோரில் கலந்து அருந்த, கழிச்சலும் ஆசனவாய் எரிச்சலும் குறையும். மேலும், பசியைத் தூண்டுவதற்காகப் பயன்படும் சித்த மருந்துகளில் சுண்டைக்காய் சேர்க்கப்படுகிறது. சுண்டை இலைகளை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி வீக்கங்களில் வைத்துக் கட்டலாம்.

வயிற்றுக்குள் குத்தாட்டம் போடும் குடற்புழுக்களை அழித்து, செரிமானப் பகுதியை சுத்தம் செய்ய, சுண்டையைவிட சிறந்த உணவு இல்லை என்பதை இப்போதைய தலைமுறையாகிய நீங்களும் புரிந்துகொண்டால் செரிமான நோய்கள் தலைகாட்டாது. 

Trending News

Latest News

You May Like