இது தெரியுமா ? மழைக்காலத்தில் இந்த 5 பழங்கள் கண்டிப்பாக சாப்பிடுங்க..!
பருவமழை காரணமாகப் பல நோய்த்தொற்றுகள், ஒவ்வாமை, தடிப்புகள், செரிமான பிரச்சனைகள், மலேரியா மற்றும் பிற நோய்கள் ஏற்படுகின்றன. இதுபோன்ற நோய் பிரச்சனைகளை சரி செய்ய சரியான உணவுகளை நாம் எடுத்துக்கொள்வது முக்கியமாகும். இதற்கு நமக்கு பருவகால பழங்கள் உதவுகின்றன. பருவமழை காலத்தில் ஏற்படும் தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்க இயற்கை அளித்த கொடையாக பருவகால பழங்கள் உள்ளன. பருவமழை காலத்தில் கிடைக்கும் சில பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்குப் பேருதவியாக இருக்கின்றன.
லிச்சி
பருவமழை காலத்தில் அதிக ஈரப்பதம் காரணமாக மூச்சு பிரச்சனை உள்ளவர்களும், ஆஸ்துமா நோயாளிகளும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உதவும் பழமாக லிச்சி உள்ளது. இது அதிகமாக ஆண்டி ஆக்ஸிடண்ட்களை கொண்டுள்ளது. நாம் உடல் எடையை இழப்பதற்கு இது உதவுகிறது. மேலும் இதில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது அஜீரணத்தை சரி செய்து செரிமான பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.
நாவற்பழம்
பள்ளி குழந்தைகள் நாவற்பழத்தில் உப்பு தடவி உண்பதை அதிகமாக பார்த்திருப்பீர்கள். நாவற்பழமானது அதிக அளவு ஊட்டச்சத்துக்களையும் குறைவான அளவில் கலோரிகளையும் கொண்டுள்ளது. முக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் வைட்டமின் சியை இது அதிகமாக கொண்டுள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் பருவமழை காலத்தில் இது நமக்கு ஆரோக்கியமான உணவாக இருக்கிறது.
கொய்யாப்பழம்
கொய்யாப்பழத்தில் குறைந்த அளவில் கலோரிகள் உள்ளன. மேலும் இரும்பு, போலேட், பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கள் ஆகியவை இதில் அதிகமாக உள்ளன. பொதுவாக மழைக்காலங்களில் ஏற்படும் நோய்கள் மற்றும் இரைப்பை பிரச்சனைகளை சரி செய்ய கொய்யாப்பழம் உதவுகிறது. எனவே பருவ மழைக்காலங்களில் நமக்கு உகந்த உணவாக கொய்யாப்பழம் உள்ளது.
மாதுளை
மாதுளை பழம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்ட பழமாக உள்ளது. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதன் மூலம் சளி, காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்த்தொற்றுகளைத் தடுக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இது உதவுகிறது. மேலும், இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான அபாயத்தையும் இது குறைக்கிறது. மேலும் உடலில் இரத்த அழுத்தத்தை குறைக்கவும் இது உதவுகிறது. கீல்வாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்த பழம் பல நன்மைகளை பயக்கிறது.
பப்பாளி
பப்பாளி பழத்தில் அதிகமான அளவில் நார்ச்சத்து இருப்பதால் இது செரிமான பிரச்சனைகளை சரி செய்கிறது, மேலும் நமது செரிமான அமைப்பானது நல்ல முறையில் செயல்படவும் இது உதவுகிறது. இதில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. வைட்டமின் சியானது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு உதவுகிறது. எனவே பருவமழை காலங்களில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளியை பயன்படுத்தலாம்.
டெல்டா மாவட்டங்களில் பப்பாளி பழமானது அதிகமாக விளைகிறது என்பதால் அப்பகுதி மக்களுக்கு எளிமையாகவே இந்த பழம் கிடைக்கிறது.
பருவமழை காலம் என்பது ஒவ்வொரு மனிதருக்கும் முக்கியமான காலமாகும், ஏனெனில் இந்த பருவத்தில் நமக்கு நோய் தொற்று ஏற்படுவதற்கான அபாயமானது அதிகமாக உள்ளது. எனவே பருவமழை காலங்களில் எப்போதும் தூய்மையாக இருக்க வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதன் மூலம் நாம் நமது வாழ்க்கையை ஒழுங்குபடுத்த முடியும்.
மேலும் பருவகால பழங்களும் இதற்காக நமக்கு உதவுகின்றன. இவை நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலில் நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கின்றன.