1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? காலை நேரம் வெறும் வயிற்றில் முளைகட்டிய தானியங்கள் சாப்பிட கூடாது..!

1

 இன்றைக்கு பொருட்கள் விற்கும் விலைவாசியில் ஆரோக்கியமான உணவை தேடிப் பெறுவது என்பது அத்தனை சுலபமல்ல. நமக்கு அன்றாடம் பயன்படும் காய்கறிகள்கூட நாட்பட்டதாகத் தானே கிடைக்கின்றது.அதை ஈடு செய்ய இதுப் போன்ற முளை கட்டீய பயிறு மற்றும் தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் குறைந்த செலவில் அதிக ஆரோக்கியத்தையும் பெறலாம்.

முக்கியமாக இது போன்ற முளை கட்டிய பயிறுகளிலிருந்து வைட்டமின் சி என்ற உயிர் சத்து மிக அதிக அளவில் பெற முடியும்.இவைகள் சிறிய குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற வகையில் மிக எளிதில் ஜீரணமாகும்.

இவைகளை முளை கட்டுவதும் மிகவும் சுலபம்,எந்த வகை தானியமாக இருந்தாலும் அதை நன்கு கழுவி இரவு முழுவதும் கிட்டத்தட்ட பன்னிரெண்டு மணி நேரம் சுத்தமான நீரில் ஊற வைக்க வேண்டும்.அடுத்த நாளைக்கு ஒரு மெல்லிய துணியில் ஊறிய தானியங்களை கட்டி சூரிய ஓளி படுப்படியான நல்ல காற்றோட்டமான இடத்தில் தொங்கவிட்டால் குறைந்தது எட்டு மணிநேரத்தில் அதிலிருந்து புதிய முளைகள் தோன்ற ஆரம்பிக்கும்.

சில தானியங்கள் முளை விட அதிக நேரம் எடுக்கும், அதுவரை போதுமான தண்ணீரை தெளித்து வர வேண்டும் இல்லாவிடில் தானியம் காய்ந்துவிடும். அல்லது அழுகி விடும். இவ்வாறு முளைவிட்ட தானியங்கள் மற்றும் பயறு வகைகளை இதை அப்படியே பச்சையாக சாலட்டாக செய்து சாப்பிடலாம் அல்லது வேகவைத்தும் பிடித்த விதத்தில் செய்து சாப்பிடலாம்.

* ஒரு நாளில் காலை, மதியம், மாலை, இரவு என நான்கு வேளைகளில் எந்த வேளையிலும் முளைகட்டிய தானியங்களை சாப்பிடலாம். ஒரு நாளைக்கு எதாவது ஒரு வேளைதான் சாப்பிட வேண்டும். மதிய உணவில் சாப்பிடுவது இன்னும் சிறந்தது.

* காலை உணவு எனில் 50-65 கிராம், மதிய உணவு எனில் 70 - 80 கிராம், இரவு உணவு எனில் 70 - 75 கிராம் என்ற அளவில் முளைகட்டிய தானியங்கள் சாப்பிடலாம். அப்படி சாப்பிடும்போது, அவ்வேளை உணவில் 50-50, அதாவது பாதி அளவு சாப்பாடு, பாதி அளவு முளைகட்டிய தானியம் என்று இருக்குமாறு சாப்பிடலாம். இந்த அளவுகள் குறையலாம், ஆனால் அதிகமாகக் கூடாது. 

* மதிய மற்றும் இரவு உணவுகளுடன், வேகவைக்காத முளைகட்டிய தானியங்களை சேர்த்துச் சாப்பிடலாம். அல்லது சாப்பிடுவதில் பாதி அளவு வேகவைக்காமலும், பாதி அளவு வேகவைத்தும் சாப்பிடலாம்.

எப்படிச் சாப்பிடக்கூடாது?

* காலை நேரம் வெறும் வயிற்றில் முளைகட்டிய தானியங்கள் சாப்பிட கூடாது. காரணம், தானியங்களை தண்ணீரில் ஊறவைத்து முளைகட்டச் செய்வதால் (germination process), அவற்றில் அமிலத்தன்மை அதிகரித்து வைட்டமின் ‘சி’ சத்து அதிகமாகச் சேர்ந்திருக்கும். பொதுவாக, காலை நேரம் வெறும் வயிற்றில் அமிலத்தன்மை அதிகமாகச் சுரக்கும். அப்போது முளைகட்டிய தானியத்தை சாப்பிட்டால் அசிடிட்டி, அல்சர் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, இட்லி, தோசை, சப்பாத்தி, சாப்பாடு என ஏதாவது ஒரு காலை உணவுடன் வேகவைக்காத முளைகட்டிய தானியங்கள் சாப்பிடுவது நல்லது. ஒருவேளை காலையில் முளைகட்டிய தானியங்களை மட்டும் சாப்பிடுவதாக இருந்தால், அவற்றை வேகவைத்துச் சாப்பிடுவது பரிந்துரைக்கத்தக்கது.

* காலை, மதியம், இரவு என எந்த வேளையாக இருந்தாலும், முளைகட்டிய தானியங்களை மட்டும் அவ்வேளைக்கான உணவாகச் சாப்பிடக் கூடாது. ஏனெனில், முளைகட்டிய தானியத்தில் புரோட்டீன், விட்டமின் சத்துகள் கிடைத்தாலும், நம் உடலுக்கு அவை மட்டுமே போதாது. எனர்ஜி, கார்போஹைட்ரேட்ஸ், மினரல்ஸ் போன்ற சத்துகளும் சமச்சீர் அளவுகளில் தேவை என்பதால், முளைகட்டிய தானியங்களை மட்டும் ஒரு வேளைக்கான உணவாகச் சாப்பிடக்கூடாது. 

* முளைகட்டிய தானியங்களைச் சாப்பிடும்போது சிலருக்கு செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம் என்பதால், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அவற்றைத் தவிர்க்க வேண்டும். முளைகட்டிய பச்சைப்பயறு எளிதில் செரிமானம் ஆகக்கூடியது என்பதால், 5 - 10 வயதுக்  குழந்தைகளுக்கு அதை அடிக்கடி தரலாம். மற்ற வகை முளைகட்டிய தானியங்களை அவர்களுக்கு எப்போதாவது கொடுக்கலாம். 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் எல்லா வகையான முளைகட்டிய தானியங்களையும் சாப்பிடலாம். முளைகட்டிய தானியங்களை வறுத்து ஸ்நாக்ஸாகக் கொடுக்கும்போது குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். 

* தினமும் ஒரே வகை தானியத்தை முளைக்கவிட்டு சாப்பிடுவது தவறு. மாறாக, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தானிய வகைகளை உட்கொள்வதே சிறந்தது.

* தானியங்களை ஊறவைக்க தூய்மையான தண்ணீரையே பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். இந்தக் காரணத்தினாலேயே, கடைகளில் ரெடிமேடாக கிடைக்கும் முளைகட்டிய தானியங்களைத் தவிர்த்து, வீட்டில் தயாரித்து சாப்பிடுவதே சிறந்தது.  

* அசிடிட்டி, அல்சர், நெஞ்சு எரிச்சல் பிரச்னைகள் உள்ளவர்களும், கர்ப்பிணிகள் மற்றும் வயதானவர்களும் முளைகட்டிய தானியங்களை நிச்சயமாக வேகவைத்துதான் சாப்பிடவேண்டும்.'' 

Trending News

Latest News

You May Like