1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? குழந்தைகள் எந்த வயது வரை நம்மோடு தூங்கலாம் தெரியுமா ?

1

பல குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் தூங்கும் பழக்கத்தை வழக்கமாகவே கொண்டுள்ளனர். இந்த பழக்கம் அவர்கள் சிறு பிள்ளையாக இருக்கும் வரை சரி, ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவர்கள் பெரியவர்களாக வளரும்போது ஒரு சில அசௌகரியங்கள் ஏற்படும்.

குழந்தைப் பருவத்தில், பெற்றோரிடம் அதிக பற்றுதல் இருக்கும். இந்த காரணத்திற்காக, அவருடன் தூங்குவது தவறல்ல. ஆனால் குழந்தைகள் வளரும்போது, ​​அவர்கள் தனியாக தூங்கப் பழக விரும்புகிறார்கள். சில நேரங்களில் குழந்தையே தனியாக தூங்க விரும்பினால் கூட பெற்றோர்கள் விடுவதில்லை. இது முற்றிலும் தவறான செயல். இப்படி தொடந்து செய்யும் பட்சத்தில் அக்குழந்தை எப்பொழுதும் தூங்குவதற்கு பெற்றோரை தேடுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு.

திடீரென உங்கள் பிள்ளையை தனியாக தூங்க வற்புறுத்தாதீர்கள். எந்த குழந்தையாக இருந்தாலும் திடீரென தனியாக இருக்கப் பழகி விடாது. அதற்கு முதல் படியாக அவர்களை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தனியாக தூங்க வையுங்கள். அதன் பின்னர் தனியாக தூங்கும் நாட்களை படிப்படியாக அதிகரிக்கவும். இதனை தொடர்ந்து செய்வதன் மூலம் அவர்கள் தனியாக தூங்குவதற்கு சிறிது பழகிக் கொள்வார்கள்.

தினமும் இரவு உறங்கச் செல்வதற்கு முன் உங்கள் குழந்தைகளை ஃபிரஷ் அப் செய்து நைட் டிரெஸ் போட்டு விட்டு அவர்களை மெத்தையில் தூங்கும் நிலையில் படுக்கவைத்து போர்வைகளை போத்தி அருகில் அமர்ந்து நல்ல கதை ஒன்றை சொல்லுங்கள்.பின்னர் விளக்குகளை அணைத்து விட்டு குட்நைட் சொல்லிவிட்டு செல்லுங்கள். இவ்வாறு உங்கள் குழந்தைகள் தனியாக உறங்குவதை கான சிரமமாக இருக்கலாம். இன்றே இந்த வழக்கத்தை முறித்துக் கொள்ளலாம் எனத் தோன்றலாம். ஆனால் இவ்வாறாக செய்வது மிகவும் முக்கியம். இப்படி செய்தால் தான் உங்கள் குழந்தைகள் விரைவாக தனியாக உறங்குவதற்கு பழகுவார்கள்.

பொதுவாக, ஏழு வயது வரை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தங்களோடு தூங்க வைக்கலாம் என்று நிபுணர்கள் கருத்து கூறுகின்றனர். ஏழு வயது வரை அவர்கள் மனதளவில் குழந்தைதான். எனவே, இருட்டைக் கண்டு பயப்படுவது, அழுவது போன்றவை நிகழாமல் இருக்க பெற்றவர்களுடன் தூங்குவதே சரியானது. அவர்களுக்கு அந்த வயது வரை தாயின் அணைப்பு நிச்சயம் தேவை. குழந்தை தானாகவே எப்பொழுது தனிமையை விரும்புகிறதோ அந்த நாள் வரை குழந்தையுடன் நாம் சேர்ந்து தூங்குவதில் தவறில்லை. நாமே அவர்களைக் கட்டாயப்படுத்தி தனியறையில் தூங்க வைப்பது சரியாகாது. வயதாக ஆக உனக்கென்று ஒரு அறை அவசியம் என்பதை நிதானமாக அவர்களுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைத்து அவர்களை இரவு தனி அறையில் தூங்கப் பழக்கலாம்.

பொதுவாக, சில குழந்தைகள் 10 வயது வரை கூட பெற்றவர்களுடன் தூங்க விரும்புகிறார்கள். அதையும் மனதில் கொண்டு நம் குழந்தைக்கு எது சரியோ அதை செய்யலாம். குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லை என்றால், தனியாக தூங்கும்போது பயம் உண்டாகலாம் அல்லது அடிக்கடி விழிப்புணர்வு வந்தாலோ அந்த சமயத்தில் குழந்தைகளை தனியாக படுக்க விடாமல் தாயின் அணைப்பில் வைத்திருப்பது நல்லது.

ஏழு முதல் எட்டு வயதுக்குப் பிறகு குழந்தைகளை தனி அறையில் தூங்க வைக்கலாம். அதையும் எடுத்த உடனே, ‘உனக்கு இவ்வளவு வயசு ஆயிடுத்து. இனி நீ தனி ரூம்லதான் தூங்கணும்’ என்று சொன்னால் பயப்படுவார்கள். எனவே, தனி அறையில் அவர்களுக்கென ஸ்பெஷலாக படுக்கை ஏற்பாடு செய்து கொடுத்து, ‘இது இனி உன் ரூம், உனக்கே உனக்கானது, இதனை நீதான் அழகாக சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்’ என கூறினால் அவர்கள் அங்கு தூங்குவதை விரும்புவார்கள்.

ஒரு சில குழந்தைகள் ஸ்பெஷலாக அறையை கொடுத்தாலும் இருளைக் கண்டு பயந்து, பெற்றோர் இல்லாமல் தூங்க மாட்டார்கள். எனவே, தனியாக தூங்க விரும்பாத குழந்தைகளை தாத்தா, பாட்டி என்று பெரியவர்கள் யாரேனும் வீட்டில் இருந்தால் அவர்களுடன் தூங்க வைக்கலாம்.

அதேபோல், அவர்கள் தூங்கச் செல்வதற்கு முன் டிவி, மொபைல் ஃபோன்களை பயன்படுத்த ஊக்குவிக்காமல் இருப்பது நல்லது. அதற்கு பதில் தூக்கம் வரும் வரை புத்தகங்கள் படிக்க பழக்கலாம் அல்லது நல்ல இசையை கேட்கும் பழக்கத்தை ஏற்படுத்தலாம். இப்படிச் செய்ய ஆரம்பித்தால் குழந்தைகள் பயமின்றி தாமாகவே தனி அறையில் தூங்கி விடுவார்கள்.

Trending News

Latest News

You May Like