இது தெரியுமா ? ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இளநீர் குடிக்கலாமா? கூடாதா?
இளநீர் என்பது முழுக்க முழுக்க இயற்கையான உடலை குளிர்ச்சியூட்டும் பானம்.குறிப்பாக எந்தவித பதப்படுத்திகளோ செயற்கையாக சர்க்கரையோ சேர்க்கப்படாத பானம். அதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் குடிக்கக் கூடாது.ஒரு நாளைக்கு இரண்டு முறை 300 மில்லி அளவுக்கு அதிகபட்சமாக குடிக்கலாம்.
இளநீர் குடிப்பதற்கு சரியான நேரம் காலை நேரம் தான். காலை எழுந்ததும் தண்ணீர் நிறைய குடிப்பது நல்லது. அந்த நேரங்களில் இளநீரை குடிக்கலாம்.
அதைத்தவிர இரவு நேரத்தில் குடிப்பதைத் தவிர்த்து விட்டு பகலில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் குடிக்கலாம்.
ரத்த அழுத்தத்துக்கும் இளநீருக்கும் இடையே உள்ள தொடர்பு என்றால் நம்முடைய பொட்டாசியம் தான். இளநீரில் அதிக அளவில் பொட்டாசியம் இருக்கிறது. நம்முடைய உடலில் உள்ள ரத்த அழுத்தத்தை நிர்வகிப்பதில் பொட்டாசியத்திற்கு மிக முக்கியப் பங்கு உண்டு.
இளநீரை பொட்டாசியத்தின் பவர்ஹவுஸ் என்றே சொல்லலாம். இது இரத்த அழுத்தத்தை குறைக்க மிக அத்தியாவசிய தேவை. பொட்டாசியம் உடலின் ஒட்டுமொத்த வாஸ்குலர் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. இது இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படாமல் பாதுகாக்க உதவி செய்கிறது.
உயர் ரத்த அழுத்தப் பிரச்சினைக்கு அடிப்படை காரணங்களில் ஒன்று அதிகப்படியான சோடியம். ரத்தத்தில் உள்ள இந்த சோடியத்தின் அளவைக் குறைக்கும் வேலையை பொட்டாசியம் செய்கிறது. இதனால் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ரத்த அழுத்தத்தின் அளவு சீராக இருக்க உதவி செய்கிறது.
இளநீர் குடிப்பதன் ஆரோக்கிய நன்மைகள்:
நீர்ச்சத்து - உடலை அதிக நீர்ச்சத்துடன் வைத்திருக்க உதவி செய்யும். குறிப்பாக தினசரி உடற்பயிற்சி செய்கிறவர்களுக்கு அதிக ஆற்றல் இழப்பு உண்டாகும். அவர்களுக்கு போதிய அளவு எனர்ஜியும் ஸ்டாமினாவும் கொடுக்கும். உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்கும்.
சரும ஆரோக்கியம் - சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு மிகச்சிறந்த பானமாக இளநீரை சொல்லலாம். அதேபோல சருமப் பராமரிப்பிலும் இளநீரை பயன்படுத்தலாம். இதிலுள்ள ஆன்டி மைக்ரோபியல் மற்றும் ஆன்டி ஆக்சிடண்ட் பண்புகள் சருமத்தை பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.
ஜீரண ஆற்றல் - வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நிறைந்த பானம் என்பதால் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி குளிர்ச்சியாக்குவதோடு ஜீரண ஆற்றலையும் மேம்படுத்துகிறது.
ரத்த சர்க்கரை அளவை நீர்வகிக்கும் - இளநீரில் மக்னீசியம் நிறைந்திருக்கிறது. இது இன்சுலின் சுரப்பைத் தூண்டி ரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுகிறது.
இளநீர் குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்:
சிலருக்கு இளநீர் குடித்ததும் வயிறு அசௌகரியம் உண்டாகும். வாயுத் தொல்லை மற்றும் வயிறு உப்பசம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஆனால் எல்லோருக்கும் இந்த பிரச்சினை உண்டாவதில்லை.
அளவுக்கு அதிகமாக இளநீர் குடிக்கும்போது அது ரத்தத்தில் பொட்டாசியத்தின் அளவை அதிகரிக்கச் செய்யும். இது சிறுநீரகப் பிரச்சினையை உண்டாக்கக் கூடும். ஏற்கனவே சிறுநீரகம் தொடர்பான பிரச்சினை உள்ளவராக இருந்தால் மருத்துவ ஆலோசனைக்கு் பிறகு இளநர் குடிப்பது நல்லது.
வீசிங், சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் (நுரையீரலில் நீர்மத் திசுக்கள் வளர்வது) போன்ற பிரச்சினை உள்ளவர்கள் இளநீர் குடிப்பதை தவிர்ப்பது நல்லது. இது ரத்தத்தில் பொட்டாசியம் அளவை அதிகரிக்கச் செய்யும் என்பதால் அதிகமாக எடுத்துக் கொள்வதை தவிர்க்கலாம். வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு மேல் எடுக்காமல் இருப்பது சிறந்தது.
கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
ஃபிரஷ்ஷான இளநீரை குடிப்பது சிறந்தது. மார்க்கெட்டுகளில் டின்களில் கிடைக்கும் இளநீரை வாங்கிக் குடிப்பதை தவிர்ப்பது நல்லது. ஒருவேளை நீங்கள் அப்படி குடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் அதில் உள்ள லேபிளை மிக கவனமாகப் படியுங்கள். அது வெறும் தேங்காய் தண்ணீர் மட்டும்தானா அல்லது அதில் ஏதேனும் ஸ்வீட்னர்கள் அல்லது பதப்படுத்திகள் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
தாகம் எடுக்கும்போது குடிப்பதைக் காட்டிலும் உடற்பயிற்சிக்கு பிறகு குடிப்பது நல்லது. அது உடற்பயிற்சியின் போது இழந்த ஸ்டாமினாக்களை மீட்டுத்தர உதவும்.
ஏதேனும் அறுவை சிகிச்சைக்கு தயாராகிறவர்கள் அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே இளநீர் குடிப்பதை நிறுத்திவிட வேண்டும். ஏனெனில் இளநீர் ரத்த அழுத்த விகிதத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும். அதனால் அறுவை சிகிச்சையில் ஏதேனும் விளைவுகள் ஏற்படக் கூடும்.