இது தெரியுமா ? முடி செம்பட்டை பிரச்சனைக்கு வந்தாச்சு ஒர் தீர்வு..! இதை ட்ரை பண்ணுங்க போதும்..!
கூந்தல் அடர்ந்து நீண்டு கருமை நிறத்தோடு பொலிவாக இருக்க வேண்டும் என்று தான் எல்லோரும் விரும்பு கிறார்கள். ஆனால் அந்த கருகரு நிறம் மறைந்து செம்பட்டை நிறமும், இள நரையும் இப்போதெல்லாம் இளவயதிலேயே எட்டி பார்க்க தொடங்கி விடுகிறது.
சிலர் செம்பட்டை முடியை கலரிங் செய்தது போல் அழகாக இருப்பதாக எண்ணி விட்டுவிடுவார்கள். ஆனால் இதை அப்படியே விட்டுவிட்டால் முடியின் நிறம் மாறுவதோடு கூந்தல் பொலிவிழந்து போகவும் வாய்ப்புண்டு. அப்படி செம்பட்டை முடி அதிகம் இருந்தால் என்ன செய்யலாம்?
உடல் குளுமையில்லாதவர்கள் கோடைக் காலங்களில் இலேசாக விளக்கெண்ணையை தலைக்கு மசாஜ் செய்து குளித்தால் மூன்று மாதத்தில் முடியின் நிறம் கருமையடைய தொடங்கும்.
தினமும் கூந்தலின் வேர்ப்பகுதியில் தேங்காய் எண்ணெய் தேய்த்து வரவும். இரவு நேரங்களில் ஆலீவ் எண்ணெயை மசாஜ் செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும். வாரம் ஒருமுறை முட்டையின் மஞ்சள் கருவை நீக்கி வெள்ளைக் கருவை ஒரு தம்ளரில் போட்டு நுரைக்க அடித்து தலையில் தேய்த்து குளித்தால் செம்பட்டை நிறம் மறையும்.
பீட்ரூட் சாறு கேரட் சாறு இரண்டையும் சம அளவு கலந்து தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து தலையில் தேய்த்துவர செம்பட்டை நிறம் மறையும். செம்பருத்தி பூவை நல்லெண்ணெயில் காய்ச்சி தடவி வந்தாலும் முடியின் செம்பட்டை நிறம் மறையும்.
மருதாணி இலை சிறிதளவு எடுத்து நிலாவரை இலையை கைப்பிடி எடுத்து மைய அரைத்து கூந்தலில் தடவி அரைமணி நேரம் கழித்து தலைக்கு குளித்தால் நாளடைவில் செம்பட்டை நிறம் மறையும். மருதாணி இலைக்கு பதிலாக மரிக்கொழுந்து இலையையும் சேர்க்கலாம்.
கற்றாழையின் பால் நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும். இதனுடன் பெரிய நெல்லிக்காயை அரைத்து சாறாக்கி பூசி வந்தால் முடி கருத்து வளரும். ஆலமரத்தின் இளவேர் மற்றும் செம்பருத்தி பூ இரண்டையும் இடித்து தூளாக்கி தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வந்தாலும் கூந்தல் கருப்பாகும்.
மருதாணி இலைகளை அரைத்து நிழலில் வடைகளாக தட்டி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தாலும் கருமை நீடிக்கும். இவையெல்லாம் தாண்டி உணவிலும் உடல் ஆரோக்யத்திலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மலச்சிக்கல், உடல் உஷ்ணம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அன்றாடம் 3 அல்லது 4 லிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். உணவு வகைகளில் கீரை, காய்கறிகள், பழங்கள் என்று சத்துமிக்க உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவையெல்லாம் தொடர்ந்து செய்தால் முடி செம்பட்டை பிரச்னை மட்டுமல்ல. கூந்தல் பொலிவோடு, அடர்த்தியாக கருகருவென்று நீண்டும் வளரும்.