தீபாவளி அன்று அசைவ சாப்பாடு சாப்பிடும் பழக்கம் எப்படி வந்தது தெரியுமா ?

தீபாவளிப் பண்டிகை என்றாலே சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் மனதிலும் ஒரு கொண்டாட்ட எண்ணம் வந்துவிடும். அவரவர் வசதிக்கு ஏற்ப அனைத்து மதத்தினரும் கொண்டாடும் ஒரே பண்டிகை இந்த தீப ஒளித் திருநாள் தான்.
குறிப்பாக மூன்று முக்கிய கதைகள் சொல்லபடுகின்றன. ராமாயண கதைப்படி, ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பும் நாளை கொண்டாடியதுதான் தீபாவளி என்று சொல்லப்படுகிறது. இன்னொன்று என்னவென்றால் கடவுள் கிருஷ்ணர் நரகாசுரனை அழித்த நாள் என்றும் அதனை கொண்டாடும் நாள் என்றும் சொல்லப்படுகிறது. மற்றொன்று சமண மதத்தின் மகாவீரர் வீடுபேறு அடைந்த நாள்.
மகாவீரர் வீடுபேறு அடைந்த நாளை சமண மதத்தவர், அவரது சிறப்பைப் போற்ற, தீபங்கள் ஏற்றி வழிபடுகின்ற நாள் என்றும் சொல்லப்படுகிறது. பஞ்சாபில், 1577ஆம் ஆண்டில் இத்தினத்தில் தான் தங்கள் புனித திருத்தலமான பொற்கோவில் கட்டுமானப் பணியை துவங்கினர். அதைக் கொண்டாடவே தீபாவளித் திருநாளன்று இரவில் சீக்கியர்கள் தங்கள் வீடுகளிலும், குருத்வாராக்களிலும் தீபங்களையும் மெழுகுவர்த்திகளையும் ஏற்றி வைத்து தீபாவளித் திருநாளை கொண்டாடி மகிழ்கின்றனர். குஜராத் மாநிலத்தை பொறுத்தவரையில், தீபாவளித் திருநாளை புத்தாண்டு தினமாக கொண்டாடி மகிழ்கின்றனர். இப்படி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதற்கு பல்வேறு காரணங்களும் பல விதமாகவும் கொண்டாடப்படுகிறது. ஆனால், இந்தக் கதைகள் எல்லாம் வலியுறுத்துவது தீமைகளை அழித்து மக்களின் மனதில் மகிழ்ச்சியை மலரச் செய்த நன்னாள் என்பது ஒன்றுதான். எனவேதான் இதை சாதி, மதம் பேதமின்றி அனைத்து தரப்பினரும் கொண்டாடுவதை பார்க்க முடிகிறது.
தீபாவளி நாளில் நரகாசூரனை மகிழ்விக்க நல்லெண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணியவேண்டும் என்பது மரபு. அதை முடித்துவிட்டு அப்படியே ஸ்வீட் பலகாரங்களை முடித்து விட்டு தீபாவளி நாளில் அசைவ உணவு இல்லாமல் எப்படி என்று இளைஞர்களும், சிறுவர்களும் கேட்பார்கள். மட்டன் பிரியாணி, சிக்கன் கிரேவி, போன்லெஸ் ப்ரை, மீன் பொறியல் முட்டை அவியல் என பல ஐயிட்டங்களை கலந்து கட்டி சாப்பிடுவார்கள். கூடவே டிவியில் சிறப்பு திரைப்படங்களும் பார்த்துக்கொண்டே சாப்பிடுவதுதான் தீபாவளியின் சிறப்பம்சமாகிவிட்டது. தென் இந்தியாவில் அசைவம் இல்லாமல் தீபாவளி என்றால் ஆச்சர்யத்துடன் கேட்க தொன்றுகிறது அல்லவா.. ஆனால், வட இந்தியாவில் தீபாவளி நாளில் அசைவத்தை மறந்தும் தொட மாட்டார்கள்.
அதாவது, 19ஆம் நூற்றாண்டுவரை தீபாவளி குறித்த குறிப்புகள் தமிழ் வரலாற்றில் எதுவும் இல்லை என்பதே வரலாற்று ஆய்வாளர்கள் முன்வைக்கும் கருத்தாக இருக்கிறது. அதே நேரத்தில் இன்று பரவலாக கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை , விசயநகர மன்னர்களின் காலத்தில் தெலுங்கு பிராமணர் வழியாக தமிழ்நாட்டிற்கு வந்த திருவிழா என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.தமிழக பண்பாடுகளில் இறைச்சி உணவு என்பதே, விருந்தாக ஒருவருக்கு கொடுக்கும் உணவாக பார்க்கப்படுகிறது. அசைவ உணவு சாப்பிடுவர்கள் இன்றுவரை வீட்டிற்கு முக்கிய விருந்தினர்கள் வந்தால், சிக்கன், மட்டன் என கறி விருந்து வைக்கும் பழக்கம் உள்ளது. மற்றவர்களுக்கு விருந்து கொடுக்கும்போது அதனை சிறப்பாக கொடுப்பதற்கு இறைச்சி கலந்த உணவு அளிப்பதை கவுரமாக கருதும் வழக்கம் நெடுங்காலமாக தமிழ்நாட்டில் உள்ளது.
அதேபோல், கொண்டாட்ட மனநிலையில் இருந்தால் முதலில் கறி விருந்து வைத்துதான் சாப்பிடுவது வழக்கம் உள்ளது. இன்றளவில் இளைஞர்கள் மத்தியில்கூட, ஒரு கொண்டாட்ட மனநிலை அல்லது உற்சாகமாக கொண்டாடும் நிகழ்ச்சி என்றால் கண்டிபாக அதில் அசைவம் இருக்கும். அதன் தொடர்ச்சியாகவே, தீபாவளி பண்டிகையிலும் கறி விருந்து வைக்கிறார்களே தவிர வேறு சிறப்பான காரணங்கள் ஏதுமில்லை என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது. வட இந்தியாவை பொறுத்தவரை தீபாவளி பண்டிகை புனித நாளாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக ராமாயண கதைப்படி, ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பும் நாளை கொண்டாடியதுதான் தீபங்களாக விளக்கு ஏற்றி கொண்டாடடப்படுவதாக புராண கதைகள் சொல்கின்றன. எனவே, இந்த நாளில் அசைவ உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்து சைவ உணவுகளை அன்றைய நாளில் சாப்பிடும் பழக்கம் வட இந்திய மக்களிடம் எற்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.