தீபாவளி ஸ்பெஷல் ரெசிபி - தித்திக்கும் அதிரசம் முதல் திகட்டாத தேன்குழல் வரை..!
தீபாவளியையும், அதிரசத்தையும் பிரிக்கவே முடியாது. எல்லோருக்கும் பிடித்தமான இதனை எப்படி செய்வது என பார்ப்போம்...
தேவையானப் பொருட்கள்: அரிசி – அரை கிலோ, வெல்லம் – 300 கிராம், ஏலக்காய் சிறிதளவு, நெய் – 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை: பச்சரிசியை 4 மணி நேரம் ஊற வைத்து நீரை வடித்து மிக்ஸியில் அரைத்து, மாவினை நைசாக சலித்துக் கொள்ளவும். வெல்லத்தை தூளாக்கி அடிகனமான பாத்திரத்தில் போட்டு வெல்லம் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி பிசுபிசுப்பு பதம் வந்தவுடன் அதில் ஏலக்காயை பொடித்து போடவும். பின்னர் அரிசி மாவை சிறிது சிறிதாக தூவி கட்டிகள் இல்லாமல் கிளறவும். மாவு நன்கு வெந்து குமிழ் குமிழாக வரும் போது நெய் ஊற்றி இறக்கவும். பிறகு அதை அதிசரங்களாகத் தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
மாவை இரண்டு நாட்களுக்கு முன்பு தயார் செய்து வைத்து விட்டு, பிறகு அதிரசம் செய்தால் அதன் சுவை சுண்டி இழுக்கும்.
தீபாவளியை இன்னும் மகிழ்ச்சியாக மாற்றும். குறிப்பிட்ட கார வகைகளில் தேன்குழலுக்கு என்று முக்கிய இடம் உண்டு. அதை எவ்வாறு செய்வது என கீழே கொடுக்கிறோம்...
தேவையானவை: பச்சரிசி (தண்ணீரில் கழுவி, நிழலில் உலர்த்தியது) - 400 கிராம், உளுந்து - 100 கிராம் (சிவக்க வறுக்கவும்), சீரகம் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - அரை கிலோ.
செய்முறை: அரிசியுடன் வறுத்த உளுந்து சேர்த்து மெஷினில் அரைத்து சலிக்கவும். மாவுடன் உப்பு, பெருங்காயத்தூள், சீரகம், ஒரு கரண்டி சூடான எண்ணெய் விட்டு, சிறிதளவு நீரும் சேர்த்துப் பிசைந்து, தேன்குழல் பிடியில் போட்டு சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.
லட்டு செய்து, இந்த வருட தீபாவளியை சிறப்பாக்குங்கள்!
தேவையானவை: கடலை மாவு - 200 கிராம், சர்க்கரை - 350 கிராம், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, முந்திரி, திராட்சை - தலா 20, லவங்கம் - 8, கல்கண்டு - 15, பச்சைக் கற்பூரம் - ஒரு சிட்டிகை, முழு ஏலக்காய் - 5, பால் - ஒரு டீஸ்பூன், கேசரி பொடி - சிறிதளவு.
செய்முறை: சர்க்கரையில் 50 மில்லி நீர் விட்டு சூடாக்கவும். கொதிக்கும் போது அதில், பால் மட்டும் கேசரி பொடி சேர்த்து பாகு காய்ச்சி இறக்கவும். கடலை மாவுடன் நீர் சேர்த்து, பஜ்ஜி மாவு போல் கெட்டியாக கரைக்கவும். எண்ணெயை சூடாக்கி, மாவை ஜார்னி கரண்டியில் விட்டு எண்ணெயில் விழும்படி தேய்த்து, முத்து முத்தாகப் பொரித்து பாகில் சேர்க்கவும். முந்திரி, திராட்சை, லவங்கம் இவற்றை பொரித்து முழு ஏலக்காய், கல்கண்டு, பச்சைக் கற்பூரம் ஆகியவற்றை அந்த பாகு கலவையில் கொட்டிக் கிளறவும். பிறகு அதனை உருண்டையாக பிடிக்கவும்.
தீபாவளிக்கு ஈஸியான அவல் மிக்ஸர் செய்வதைப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்: கெட்டி அவல் – 250 கிராம், உப்பு – தேவைகேற்ப, மிளகாய்த்தூள் – தேவைகேற்ப, பூண்டு – 4 பல், கறிவேப்பிலை – சிறிது, பொரி கடலை – சிறிது, வேர்கடலை – சிறிது, எண்ணெய் – பொரித்தெடுக்க தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெயை சூடாக்கி, ஒரு தேக்கரண்டி அவலை முதலில் எண்ணையில் பொரித்து எண்ணெய் சரியான சூட்டில் உள்ளதா என சரிபார்க்கவும். இப்பொழுது சிறிது, சிறிதாக அவலை எண்ணெயில் பொரித்து ஒரு பேப்பரில் பரப்பவும்.
தேவையற்ற எண்ணெயை பேப்பர் உறிஞ்சிவிடும். பிறகு, உப்பு, மிளகாய்த்தூளை நன்கு பொடித்து அவலுடன் சேர்க்கவும். பூண்டு, கறிவேப்பிலை,பொரிகடலை மற்றும் வேர்க்கடலை எண்ணையில் வறுத்து சேர்க்க சுவையும், மணமும் கூடும்.
தீபாவளி என்றாலே இனிப்புகள் தான். அந்நாளில் இந்த சுவையான ஜாங்கிரியை செய்து மகிழுங்கள்.
தேவையானவை: முழு உளுந்து - 200 கிராம், அரிசி - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - 300 கிராம், கேசரி கலர் அல்லது மஞ்சள் ஃபுட் கலர் - சிறிதளவு, ஏலக்காய் எசன்ஸ் அல்லது ரோஸ் எசன்ஸ் - சில துளிகள், சீவிய முந்திரி - சிறிதளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை: உளுந்தை களைந்து அரிசியுடன் அரை மணி ஊறவிட்டு கிரைண்டரில் பொங்க பொங்க அரைத்து (கெட்டியாக), ஃபுட் கலர் சேர்க்கவும். சர்க்கரையுடன், அது கரையும் அளவு நீர் விட்டு, பிசுக்கு பதத்தில் பாகு காய்ச்சி, அகலமான பேசின் அல்லது தாம்பாளத்தில் ஊற்றி, எசென்ஸ் சேர்க்கவும்.
துணி / பால் கவரில் சிறிய துளையிட்டு மாவு நிரப்பி, சூடான எண்ணெயில் ஜாங்கிரியாக பிழிந்தெடுத்து, ரெடியாக இருக்கும் சர்க்கரைப் பாகில் சேர்த்து, 10 நிமிடம் ஊறிய பின் எடுத்துவிடவும். சீவிய முந்திரி கொண்டு அலங்கரிக்கவும்.