ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் அப்பளம், வடை, வற்றல், சிப்ஸ் சாப்பிடலாமா ?
இதய நோய் வந்து விட்டது; வந்த பின் எந்த மாதிரியான உணவு சாப்பிடலாம்; இதய நோயோடு பிற நோய் பாதிப்புள்ளோர் எதை சாப்பிடலாம்; எதை கைவிட வேண்டும் தெரியுமா ?
இதய நோயாளிகள் தாராளமாக என்னென்ன சாப்பிலாம்?
கத்திரிக்காய், முட்டைகோஸ், புடலங்காய், பீன்ஸ், பாகற்காய், காராமணி, காளி பிளவர், பீர்க்கங்காய், கொத்தவரங்காய், புதினா, கொத்தமல்லி, நுால்கோல், முருங்கைகாய், கோவைக்காய், கறிவேப்பிலை, குடமிளகாய், வாழைத்தண்டு, முள்ளங்கி, சுரைக்காய், வாழைப்பூ, சாம்பல் பூசணி, தக்காளி, சவ்சவ், வெள்ளரிக்காய் மற்றும் எல்லா கீரை வகைகளையும் சாப்பிடலாம்.
புரதச்சத்து நிறைந்த பருப்பு வகைகள் சாப்பிடலாம்; முடிந்த வரை முளைகட்டிய பயிறு சாப்பிடுவது நல்லது. அரிசி, கேழ்வரகு, கோதுமை, சோளம் போன்ற தானிய வகைகள் சேர்த்து கொள்ளலாம்.
சர்க்கரை நோய் இல்லாதவர்கள், எல்லா பழங்களையும் சாப்பிடலாம். காய்ச்சி ஆறவைத்து, பால் ஏடு நீக்கிய பாலை பயன்படுத்தலாம். வெண்ணெய் நீக்கிய மோர், பால் சேர்க்காமல் பயன்படுத்தலாம்.
மட்டன் சாப்பிடலாமா?
முட்டையின் மஞ்சள் கரு தவிர்க்கவும். சிறு மீன் வகைகளை, வாரத்திற்கு இரு முறை எடுத்துக் கொள்ளலாம். மீன் குழம்பு, தோல் நீக்கிய கோழி குழம்பு சாப்பிடலாம். ஆட்டுக்கறி (மட்டன்) கொழுப்பு நீக்கி பயன்படுத்தலாம். எண்ணெய்யில் பொரித்து உண்பதை தவிர்க்க வேண்டும்.பாதாம், வால்நட் குறைந்த அளவில் எடுத்துக் கொள்ளலாம். நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், சபோலா பயன்படுத்தலாம்.
என்னென்ன சாப்பிடக்கூடாது?
கேக், சாக்லேட், ஐஸ்கிரீம், ஜாம், ஜெல்லி, இனிப்பு வகைகள், பால்கோவா தவிர்க்க வேண்டும்.
வெண்ணெய், நெய், எருமைப்பால், டால்டா, தேங்காய் எண்ணெய், பனை எண்ணெய் (பாமாயில்), கடலை எண்ணெய், எண்ணெய்யில் வேகவைக்கப்பட்ட ஊறுகாய்கள் தவிர்க்க வேண்டும்.மாட்டிறைச்சி, கல்லீரல், மூளை, நண்டு, இறால் தவிர்க்க வேண்டும்.
நீரிழிவு நோய் உள்ளோர் காபி, டீ, பால், சர்க்கரை இல்லாமல் குடிக்கவும், எல்லா கிழங்கு வகைகளையும் (உருளை, சேனை, கருணை, மரவள்ளி, சர்க்கரை வள்ளி கிழங்கு) தவிர்க்க வேண்டும்.
தக்காளி, எலுமிச்சை மட்டுமே சேர்க்க வேண்டும். ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகு, ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, கொய்யா, மாதுரம் பழம் சாப்பிடலாம்.
பலாப்பழம், சப்போட்டா, பேரீச்சம்பழம், உலர் திராட்சை போன்ற இனிப்பு நிறைந்த பழ வகைகளை தவிர்க்க வேண்டும்.
ரத்த அழுத்த நோய் உள்ளோர் அப்பளம், வடை, வற்றல், சிப்ஸ், அரிசிப் பொரி, பாப்கார்ன் தவிர்க்க வேண்டும்.
இந்த உணவு முறையை கையாண்டால், நோய் பாதிப்பின் பிடியில் இருந்து பெருமளவு தப்பலாம்.