1. Home
  2. ஆரோக்கியம்

மீண்டும் சுவைக்கத் தூண்டும் கற்கண்டு பொங்கல்!


ஆரோக்யம் குறித்த கட்டுரையில், அவ்வப்போது ரெஸிபி வகைகளும் நாம்

பார்த்துக்கொண்டிருக்கிறோம். அந்த வகையில், இன்று நாம் கற்கண்டு பொங்கல்

செய்வதைப் பற்றி பார்க்கலாம். இன்று வரலஷ்மி நோன்பு. லஷ்மிக்கு பிடித்த

பொருள்களில் கற்கண்டும், நெய்யும் உண்டு. அதோடு நைவேத்யத்துக்கும்

சர்க்கரைப்பொங்கல் செய்வது வழக்கம். அதற்கு மாறாக கற்கண்டு பொங்கலை செய்து படைக்கலாமே...வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கலுக்கு நடுவில் கற்கண்டு பொங்கல்

இனிப்பு விரும்பாதவர்களுக்கும் பிடித்த ரெஸிபியாக இருக்கும். இனிப்பிலும் தனிச்சுவையோடு

மீண்டும் மீண்டும் சுவைக்கத்தூண்டும் கற்கண்டு பொங்கலை செய்வதுமே எளிது.

தேவையான பொருட்கள்:

சீரக சம்பா பச்சரிசி ( பாசுமதி வெறும் சக்கை. சீரக சம்பா வாசமும் சத்தும் உடையது) - 2 தம்ளர்,

பாசிப்பருப்பு – அரைத்தம்ளர் (தேவையெனில்) கற்கண்டு – 3 தம்ளர், பால்- 1 லி., ஏலக்காய்த்தூள் – 1 டீஸ்பூன், பச்சைக்கற்பூரம் – 2 சிட்டிகை, முந்திரி, திராட்சை (உலர் பருப்புகள் தேவையெனில்)- 1 தேக்கரண்டி,நெய்- அரைத்தம்ளர்.

செய்முறை:
பாசிப்பருப்பு சேர்ப்பதாக இருந்தால் குக்கரில் ஒரு விசில் விட்டு குழைய வேகவைத்து

மசித்து வைக்கவும்.சீரக சம்பா அரிசியைச் சுத்தம் செய்து கால் மணி நேரம் ஊறவைத்து

மிக்ஸியில் ரவை போல் உடைக்கவும். அகன்ற அடிகனமான பாத்திரத்தில் பசும்பாலை ஊற்றி

இரண்டு தம்ளர் நீர் விட்டு கொதிக்கவைக்கவும்.

பிறகு உடைத்த அரிசி ரவையை சிறிது சிறிதாக சேர்த்து கட்டிப்பிடிக்காமல் நன்றாக கலக்கவும்.

அடுப்பு மிதமானத்தீயில் இருக்கட்டும்.பத்து நிமிடத்தில் அரிசி ரவை நன்றாக குழைந்து

வெந்திருக்கும். இப்போது ஒரு டீஸ்பூன் நெய் சேர்க்கலாம். நன்றாக குழையும் தருணம் கற்கண்டை மிக்ஸியில் பொடித்து அல்லது அப்படியே கூட சேர்க்கலாம்.

கற்கண்டை அப்படியே சேர்த்தால் கற்கண்டு கரையும் வரை கைவிடாமல் கிளறிக்கொண்டே

இருக்கவேண்டும். அதனால் பொடித்து சேர்ப்பது நல்லது. பாசிப்பருப்பு மசித்த கலவையைச்

சேர்த்து அவ்வப்போது நெய் விட்டு கிளறவும். எல்லாம் நன்றாக கலந்ததும் ஏலத்தூள், பச்சைக்கற்பூரம்

சேர்த்து இறக்கி நெய்யில் முந்திரி, திராட்சை பொரித்து சேர்க்கவும். கமகமக்கு நெய் வாசனையும் பசும்பாலில் குழைந்த சீரக சம்பா அரிசியும், கற்கண்டு பொங்கலும் மீண்டும் மீண்டும் சாப்பிட தோன்றும்.

விரத நாள்களில் சர்க்கரைப்பொங்கலுக்கு பதிலாக கற்கண்டு பொங்கலையும் நிவேதனத்துக்கு படைக்கலாம்.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like