நீர் மோரினால் கிட்டும் நன்மைகள்..!
கோடைகாலத்தில் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு குளுகுளுவென மோர் கொடுத்து உபசரிப்பது நம் தமிழர்களின் பண்பாட்டில் ஒன்றல்லவா?
நம் உண்ணும் உணவு பொருட்களில் சில சமயங்களில் காரம் அதிகமாக சேர்ந்து விடும். அப்படிப்பட்ட உணவினை நாம் உண்ணும் போது, வயிறு எரிச்சலில் அவதிப்பட்டு வருவோம். இதனை சரிசெய்ய ஒரு டம்ளர் மோர் குடித்தால் போதும்.
தயிரினை நாம் உண்ணும் மதிய உணவில் கடைசியாக சாப்பிடுவது காலம் காலமாக கடைப்பிடித்து வரும் ஒரு பழக்கம். இதற்கு ஒரு முக்கியமான காரணம் தயிரில் செரிமானத்திற்கு தேவையான புரோபயோடிக்ஸ் என்ற பாக்டீரியாக்கள் உள்ளன. தயிரை மோர் ஆக்கும் போதும் அந்த நன்மைகள் கிடைக்கின்றன. மோருடன் சிறிது, இஞ்சி, சீரகம் சேர்த்து குடித்து வந்தால் செரிமானம் சீராக்கப்படும். வயிறு உப்புசம், அசௌகரியமும் சரியாகிவிடும்.
உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் வெளியேறி விட்டாலே நம் முகத்திற்கு தனி பொலிவு ஏற்பட்டுவிடும். முகத்தை அழகுபடுத்தும் ரசாயனப் பொருட்கள் கலக்கப்பட்ட அழகு சாதனங்களை விட்டுவிட்டு மோர், தயிர் இவற்றை கொண்டு நம் முகத்தை மசாஜ் செய்து கொள்ளலாம். இது சருமத்திலுள்ள சுருக்கங்களை நீக்கும். சருமத்தை மென்மையாகவும் மாற்றும்.
மோருடன் உப்பு கலந்து தினசரி குடித்து வந்தால் நீர்ச்சத்து குறைபாடு நம் உடலில் ஏற்படாது. மோரில் உள்ள எலக்ட்ரோலைட்ஸ் மற்றும் நீர் சத்து அதிகமாக இருப்பதால் கோடை காலங்களில் உடலை வறட்சி நிலையிலிருந்து காக்கும்.
நார்ச்சத்து உள்ள பொருட்களை நாம் அதிகம் சாப்பிடும் சமயத்தில் மலச்சிக்கல் ஏற்படும். மலச்சிக்கல் உள்ளவர்கள் தொடர்ந்து மோர் குடித்து வர இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
நம்மில் பலபேர் அசிடிட்டி வந்துவிட்டால் அசிடிட்டி டானிக்கை தான் தேடுவோம். ஆனால் நம் வீட்டிலேயே உள்ள வைத்தியம் தான் மோர் அசிடிட்டியை குணப்படுத்த மோர் தவிர, சிறந்த மருந்து வேறு எதுவும் இல்லை. ஒரு டம்ளர் மோருடன் மிளகு, சீரகம், இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய் இவற்றை சேர்த்து அரைத்து அந்த விருதினை சிறிது, மோரில் கலந்து குடித்தால் போதுமானது. அசிடிட்டி பிரச்சினை தீர்ந்துவிடும்.
மூல நோய்க்கு ஒரு சிறந்த மருந்தாக மோர் பயன்படுத்தப்படுகிறது. எந்தவித மசாலாக்களும் சேர்க்கப்படாமல் மோரில் சிறிது உப்பு மட்டும் கலந்து குடித்து வர மூலநோய் குணமாகும். குழந்தைகளுக்கு ஏற்படும் சாதாரண வயிற்றுப் போக்கினை மோர் கொடுத்து சரி செய்யலாம். சளி பிடிக்கும் என்று நினைப்பவர்கள் லேசாக சூடுபடுத்தி சிறிது மஞ்சள் தூள் கலந்து கொடுத்தால் சளி பிரச்சனை வராது.
மோரினால் கிட்டும் நன்மைகள்:
1. தயிரை விடச் சிறந்தது மோர். எளிதில் ஜீரணமாகக் கூடியது.
2.உடல் எடையைக் குறைக்கவல்லது, உணவு உண்ட பின் ஒரு குவளை நீர்மோர் பருகினால் உண்ட உணவுகள் விரைவில் சீரணமாகி உடலைச் சீராக வைக்கும்.
3. பெண்களின் மாதவிலக்குக் காலங்களில் உண்டாகும் போக்கைக் கட்டுப்படுத்தவும் வயிற்றுவலியைக் குறைக்கவும் வெந்தயம் சேர்த்த நீர்மோர் உதவும்.
4.மூல நோய்க்கு மோர் பிரமாதமான மருந்து.
5. வயிற்றுப்போக்கு, அஜீரணக் கோளாறுகளுக்கெல்லாம் மோர் சிறந்த மருந்து.
6. மோர் குடித்தால் உடனே பசி எடுக்கும்.
7. வெயிலால் உடம்பு சூடாகி சிறுநீர் பாதையில் எரிச்சல் உண்டானால் அதற்கும் மருந்து இதுதான்.
8. நீர்க்கடுப்பைப் போக்கும் அருமருந்து, ரத்தசோகைக்கும் மோர் நல்லது!
9. நம்மை அறியாமல் சாப்பிடும் மோசமான உணவுப் பொருட்கள் மூலம் உடலில் சேரும் விஷத்தை அகற்றும் வல்லமைகூட மோருக்கு உண்டு!
10. பால், மோர், பழச்சாறுகள் அளிப்பது குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு நன்மை அளிக்கும்.
11. குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு இரண்டு விதங்கள்: ஒன்று சாதாரணமானது, மற்றது கிருமியால் ஏற்படுவது.
12. வயிற்றுப் போக்கு ஆகும் குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 4 முறை மோர் கொடுக்கலாம். மோரை அப்படியே அளித்தால் சளி பிடிக்கும் என்று பயப்படும் தாய்மார்கள், சிறிய வாணலியில் தயிரை லேசாக கொதிக்க வைத்து சிறிது மஞ்சள் தூள் கலந்து சாதத்தில் பிசைந்து கொடுத்து வரலாம்.
13.காமாலை நோயைச் சாந்தப்படுத்தும். எந்த விதமான பேதியையும் கட்டுப்படுத்தும்.
14.எளிதில் செய்து விடக் கூடிய மோரைக் குடும்பத்திலுள்ள அனைவரும் பருகிப் பயன் பெற வேண்டும்.
சருமத்திற்கு உகந்த மோர்:
1. முகத்தில் தயிர், பால் ஏடு தேய்த்து வருவது தெரியும். சருமத்தில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு மோர் சிறந்த மருந்தாக உள்ளது.
2. சருமத்தில் பாதிக்கப்பட்ட பகுதியை மோரில் நனைத்த துணியைக் கட்டுப் போட்டு வருவதன் மூலம் சரும பாதிப்பு விரைவில் குணமடைவதைக் காணலாம்.
3. தோல் வீக்க நோய்க்கு மோர் கட்டு அருமையான மருந்தாகச் செயல்படுகிறது.
குறிப்புகள்:
வெயில் காலத்தில் மோர் நிறைய தயாரித்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்துக்கொண்டு குழந்தைகளுக்குத் தண்ணீருக்கு பதிலாக மோர் கொடுக்கலாம். உடல் சூட்டை தணிக்கும்.
கோடை காலத்தில் ப்ரிட்ஜில் வைத்தாலும் மோர் புளித்துவிடும். அதற்குத் தயிரிலிருந்து எடுத்த வெண்ணையை அந்த மோர் தீரும்வரை, மோரிலேயே வைத்திருந்தால் மோர் கடைசிவரைக்கும் புளிக்காமல் இருக்கும்.
ஆனால், சளி தொந்தரவு, தொண்டை எரிச்சல், இருமல் போன்ற உபாதைகள் இருக்கும்போது மோர் சாப்பிடக்கூடாது. மோர் சாதமும் கூடாது.
நீர் மோர் செய்யும் முறை:
தேவையானவை:
தயிர் – 1/2 கப்
தண்ணீர் – 1 ½ கப்
கறிவேப்பிலை – 1 ஆர்க்கு (பொடியாக நறுக்கியது.)
மல்லித்தழை – சிறிதளவு (பொடியாக நறுக்கியது.)
இஞ்சி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது.)
பச்சைமிளகாய் – அரைமிளகாய் அளவு- 2 கப் மோருக்கு. (காரம் உங்கள் தேவைக்கேற்ப கூட்டியோ, குறைத்தோ சேர்த்துக் கொள்ளவும்.)
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம்- சிறிதளவு
வெந்தயம்- 4(விரும்புவர்கள் சேர்க்கலாம்)
செய்முறை:
ஒரு பெரிய பாத்திரத்தில் தயிரை ஊற்றவும். இதனுடன் தண்ணீர் சேர்த்து தயிர் கடையும் மத்து கொண்டு சிலுப்பிவிடவும். கட்டிகள் இல்லாமல் தயிர் நன்றாக கரைந்துவிடும். தயிரில் இருக்கும் வெண்ணெய்ச் சத்தும் தனியே பிரிந்துவிடும். இதனுடன் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, மல்லித்தழை, இஞ்சி, பச்சைமிளகாய்,பெருங்காயம், தேவையானஅளவு உப்பு சேர்த்து கலக்கவும். சுவையான இந்த நீர்மோரை டம்ளரில் ஊற்றிப் பருக அல்லது சாதத்துடன் கலந்து சாப்பிட நன்றாக இருக்கும்.