எல்லா பழங்களையும் உணவுக்கு முன்பு சாப்பிட வேண்டும்... ஆனால் இலந்தைப் பழத்தை...
இலந்தைப்பழம் உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக்கூடியது. குளிர்ச்சியான உடல்வாகு உள்ளவர்கள் மதிய வேளையில் மட்டும் இதனை உண்ணலாம்.
100 கிராம் இலந்தையில் கிடைக்கும் கலோரி 74% மாவுப் பொருள் 17 %, புரதம் 0.8 % மற்றும் தாது உப்புகள், இரும்புசத்தும் உள்ளது. இலந்தைப்பழம் நினைவாற்றலை அதிகரிக்கும் என்பதால் மாணவர்கள் இதைச் சாப்பிடலாம். இந்தப் பழத்தில் இனிப்புச் சுவையும், சிலவற்றில் புளிப்புச் சுவையும்உண்டு. சிலவற்றில் சிறுசிறு புழுக்கள் இருக்கும். இந்தப் பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி, டி சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அதிகம் உள்ளது.
எல்லாப் பழங்களையும் உணவுக்கு முன்பு தான் சாப்பிட வேண்டும். ஆனால் இலந்தைப் பழத்தை பகல் உணவுக்குப் பின்பு உண்பதால் நன்கு ஜீரணமாவதும் பித்தமும் கட்டுப்படும்.இலந்தை பழத்திற்கு உடல் உஷ்ணத்தைக் குறைக்கும் ஆற்றலும் உண்டு. உடலில் சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) குறைவதால் எலும்புகள் பலமிழந்து காணப்படும். இலந்தைப் பழம் கிடைக்கும் காலங்களில் வாங்கி சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெறும். பற்களும் உறுதிபெறும். உடலில் முக்குற்றங்களில் ஒன்றான பித்தம் அதிகரித்தால் தலைவலி, மயக்கம், தலைச்சுற்றல் என பல நோய்கள் உண்டாக வாய்ப்புண்டு. மேலும் பித்த நீர் அதிகரிப்பால் இரத்தம் சீர்கேடு அடையும். இவற்றைப் போக்கி, பித்தத்தைச் சமநிலைப்படுத்தும் குணம் இலந்தைக்கு உண்டு. இலந்தைப் பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பித்தம் சமநிலையில் இருக்கும்.
சிலருக்கு அடிக்கடி உடல்வலி ஏற்படும். சிறிது வேலை செய்தால் கூட அதிகளவு உடல்வலி தோன்றும். பெரும்பாலும் 40 வயதைத் தாண்டியவர்களுக்கே இந்த நிலை ஏற்படும். இந்த உடல்வலியைப் போக்கி உடலைத் தெம்பாக்க இலந்தைப் பழம் நல்ல மருந்தாகும்.
பசியில்லாமல் அவதிப்படுபவர்களும் சிறிது சாப்பிட்டாலும் செரிமானம் ஆகாமல் கஷ்டப்படுபவர்களும் இலந்தைப் பழத்தின் விதையை நீக்கிவிட்டு பழச் சதையுடன் மிளகாய், உப்பு சேர்த்து உலர்த்தி எடுத்துக்கொண்டு காலையும், மாலையும் 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி, நன்கு பசியை உண்டாக்கும்.பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்கவும், அதிக உதிரப்போக்கை தடுக்கவும் இலந்தைப் பழம் பயன்படுகிறது.
பழுத்த காட்டு இலந்தைப்பழங்களை கையால் பிசைந்து, கொட்டையை நீக்கி, அத்துடன் 8 பங்கு நீர்விட்டு கொதிக்கவைத்து, வடிகட்டி, தேவையான அளவு நாட்டுச்சர்க்கரை சேர்த்து கொதிக்கவைத்து, பாகு பதத்தில் மீண்டும் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை தினமும் இரவு படுக்கும்பொழுது 5 முதல் 10 மில்லியளவு சாப்பிட்டுவர உடல் எரிச்சல் தணிந்து, ரத்தஅழுத்தம் சீராகும். சுறுசுறுப்பு உண்டாகும்.
கொட்டையை நீக்கிவிட்டு இலந்தை பழத்தை மட்டும் உலர்த்தி சாப்பிட்டு வர இருமல் தணியும்.
இலந்தை பழத்தில் நிறைய சக்திகள் உள்ளன. அதேப்போல இலந்தை இலையிலும் அதிக மருத்துவ சக்திகள் உள்ளன.இலந்தை இலை தசை,நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும். வேர், பட்டை பசித் தூண்டியாகவும், பழம் சளி நீக்க, மலமிளக்கு, பசித்தீயை மிகுக்கக் கூடியதாகவும் பயன்படுகிறது. இது இரத்த சுத்திக்கும், முதுகுவலி, இருதயநோய், ஆஸ்த்துமா, கழுத்து நோய், கண் தெரிய, இரத்த அழுத்தத்தைக் குறைக்க, தலைவலி, மன உழைச்சலைப் போக்க, எந்த வலியையும் போக்கவும் வல்லது.
இதன் பழத்துடன் புளி, மிளகாய் வற்றல், உப்பு, வெல்லம் ஆகியவை சேர்த்து நன்கு இடித்து வெய்யிலில் காயவைத்து இலந்தை வடையாகப் பயன் படுத்துகிறார்கள்.இலந்தை இலையை மை போல் அரைத்து வெட்டுக் காயத்தின் மீது வைத்து கட்டினால் விரைவில் காணம் குணமாகும்.
இந்த இலையை அரைத்து எலுமிச்சை அளவு எடுத்து பசு மோரில் கலந்து குடித்து வர எருவாய் கடுப்பு குணமாகும்.இலந்தை இலையின் சாறெடுத்து அதனை உள்ளங்கை, உள்ளங் கால்களில் பூசி வர, அங்கு அதிகமாக வியர்வை சுரப்பது கட்டுப்படும்.இலையையும், பட்டையையும் சம அளவு எடுத்து ஒன்றிரண்டாய் நசுக்கி 200 மில்லி நீர் விட்டுக் காய்ச்சி 100 மில்லியாக வற்றியதும் குடித்து வர கழிச்சலும், ரத்தம் கலந்து போவதும் குறையும். வயிற்றுக் கடுப்புக்கு இது ஒரு மாமருந்தாக அமையும்.இளநரையைப் போக்கும் தன்மை இலந்தை இலைக்கு உண்டு.
இதை நன்கு அரைத்து தலையில் தடவி 10 நிமிடங்கள் வரை ஊறவிட்டு தலையை அலச இளநரை மாறும். இலந்தை இலை 1 பிடி, மிளகு 6, பூண்டுப் பல் 4 அரைத்து மாதவிலக்கான முதல் 2 நாட்கள் கொடுத்து வரக் கருப்பை குற்றங்கள் நீங்கிப் புத்திர பாக்கியம்கிட்டும். இலந்தைப் பட்டை 40 கிராம், மாதுளம் பட்டை 40 கிராம் சிதைத்து, அரை லிட்டர் நீரில்போட்டுக் கொதிக்க வைத்து 125 மி. லி. யாக்கி 4 வேளை தினம் குடித்து வர நாள்பட்ட பெரும்பாடு நீங்கும். இலந்தை வேர்பட்டை சூரணம் 4 சிட்டிகை இரவில் வெந்நீரில் கொள்ளப் பசியின்மை நீங்கும். துளிர் இலையையாவது பட்டையையாவது 5 கிராம் நெகிழ அரைத்துத் தயிரில் காலை மாலையாகக் கொடுக்க வயிற்றுக் கடுப்பு, இரத்தப்பேதி தீரும்.