ராகவா லாரன்ஸ் படத்தை வெளியிட நீதிமன்றம் தடை!!
நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ருத்ரன் படத்தின் இந்தி மற்றும் பிற மொழிகளின் டப்பிங் உரிமையை ரெவன்ஸா குளோபல் வென்சர்ஸ் என்ற நிறுவனம் பெறுவது தொடர்பாக, ருத்ரன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் ஒப்பந்தம் செய்திருந்தது.
12 கோடியே 25 லட்சம் ரூபாய் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்த ரெவன்ஸா நிறுவனம் முதல் கட்டமாக 10 கோடி ரூபாய் செலுத்தியிருந்தது. இந்நிலையில், 4 கோடியே 50 லட்சம் ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும் எனக் கூறிய தயாரிப்பு நிறுவனம், திடீரென இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.
இதுதொடர்பாக, மத்தியஸ்தம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில், ஏப்ரல் 14ஆம் தேதி படத்தை வெளியிட பட குழு முடிவு செய்துள்ளது. படத்தை வெளியிட அனுமதித்தால், தங்களுக்கு 10 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று ரெவன்ஸா நிறுவனம் கூறியது.
எனவே படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என அந்நிறுவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, படத்தை ஏப்ரல் 24ஆம் தேதி வரை வெளியிட இடைக்காலத் தடை விதித்தார்.
மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி பட தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 24ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
newstm.in