போலி செய்திகளை பரப்பியதற்காக 94 யூடியூப் சேனல்களை முடக்கியது மத்திய அரசு..!!
யூடியூப், கூகுள் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான வீடியோ பகிரும் தளமாகும். இந்த தளத்தில் தினமும் ஆயிரக்கணக்கிலான வீடியோக்கள் பதிவேற்றப்படுகின்றன. யூடியூப் மூலம் அதிக பணம் சம்பாதிக்க முடியும் என்பது இதன் கூடுதல் சிறப்பு. இது இந்தியாவிலும் மிகவும் பிரபலமானது. லட்சக் கணக்கிலான இந்திய பயனர்கள் இதில் வீடியோக்களை பார்த்து மகிழ்கின்றனர்.
இந்த நிலையில், 2021-22 ஆம் ஆண்டில் போலி செய்திகளை பரப்பியதற்காக 94 யூடியூப் சேனல்களை மத்திய அரசு தடை செய்துள்ளது என்று தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்தார். இதனுடன், 19 சமூகவலைதள கணக்குகள் மற்றும் 747 யூஆர்எல்களும் தடை செய்யப்பட்டுள்ளன.
மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு பதிலளித்த மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கூறுகையில், “தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000, பிரிவு 69ஏ-வின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் இறையாண்மைக்கு எதிராக இணையதளத்தில் பொய்யான செய்திகளை பரப்பி பிரச்சாரம் செய்யும் நிறுவனங்களுக்கு எதிராக மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
கொரோனா தொடர்பான போலிச் செய்திகளைச் சரிபார்க்க, பிரஸ் இன்பர்மேஷன் பீரோவின் உண்மைச் சரிபார்ப்புப் பிரிவு மார்ச் 31, 2020 அன்று உருவாக்கப்பட்டது. இந்த பிரிவு சமூகவலைதளங்களில் போலி செய்திகள் மற்றும் 875 இடுகைகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுத்துள்ளது.
இணையத்தில் பொய்யான செய்திகளை பரப்புவதன் மூலமும், பிரச்சாரம் செய்வதன் மூலமும் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்படும் நிறுவனங்களை அரசாங்கம் கட்டுப்படுத்தியது" என்று கூறினார்.