திருக்குறள் சொல்லுங்க... குடும்பத்தோடு 21 வகையான உணவை இலவசமா சாப்பிடுங்க!!
புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த நிருபன் ஞானபானு என்ற இளைஞர், 6 ஆண்டுகளாக அமெரிக்காவில் உள்ள உணவகம் ஒன்றில் சமையற்கலை வல்லுநராக பணிபுரிந்திருக்கிறார். சொந்த ஊர் திரும்பிய நிருபன் ஞானபானு, நோணாங்குப்பம் பகுதியில் பசுமையான சூழலில் தென்னங்கீற்றால் வேயப்பட்ட குடிசை வடிவில் ஜல்லிக்கட்டு என்ற பெயரில் உணவகம் ஒன்றை தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் வாடிக்கையாளர்களை கவரவும், தமிழ் மீதுள்ள பற்று காரணமாகவும் ஒரு புதுமையை தனது உணவகத்தில் புகுத்தியுள்ளார். அதாவது 100 திருக்குறளை ஒப்புவித்தால் மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, காடை வறுவல், இறால் தொக்கு, நண்டு வறுவல், வஞ்சிரம் மீன் வறுவல் என 21 வகையான மெகா அசைவ விருந்து இலவசம் என அறிவித்தார். பள்ளி மாணவர்கள் 100 திருக்குறளை ஒப்புவித்தால் அவர்கள் குடும்பத்தோடு வந்து அசைவ உணவு விருந்தை இலவசமாக உண்டு செல்லலாம் என்றும் அறிவித்தார்.
தன்னுடைய இந்த முயற்சி மூலம் திருக்குறள் படிப்பவர்களின் எண்ணிக்கை கூடினால் அது தனக்கு மகிழ்ச்சியே என்கிறார் நிருபன் ஞானபானு. இந்த போட்டியில் களமிறங்கினார் அரியூர் பகுதியைச் சேர்ந்த கோமதி என்ற பெண். இவர், 100 திருக்குறளை ஒப்புவித்து விதவிதமான இலவச உணவுப் பதார்த்தங்களை உண்டு மகிழ்ந்தார்.
newstm.in