1. Home
  2. தமிழ்நாடு

திடீர் மாரடைப்புக்கு பைக்கில் சென்று சிகிச்சை தரும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் குழு..!

திடீர் மாரடைப்புக்கு பைக்கில் சென்று சிகிச்சை தரும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் குழு..!

திடீரென மாரடைப்பால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று உடனடி சிகிச்சை அளிக்கும் விரைவு மருத்துவ உதவி திட்டத்தை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது.

நாட்டிலேயே மிகவும் குறைந்த செலவில், சிறப்பான மருத்துவ சிகிச்சை வழங்குவதில் எய்ம்ஸ் மருத்துவமனை முன்னோடியாக உள்ளது. அதிலும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை, மருத்துவ சிகிச்சைகளில் உலகளவில் முதன்மையான இடத்தில் உள்ளது.மருத்துவம் மற்றும் கல்வித் துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது எய்ம்ஸ் மருத்துவமனை. மனிதர்களுக்கான உடல்நலனை உறுதி செய்யும் பொருட்டு அம்மருத்துவமனை நிர்வாகம் பல்வேறு பங்களிப்பை அளித்து வருகிறது.

இதை இன்னும் அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதத்தில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை “ Delhi Emergency Life Heart Attack initiative” என்கிற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் திடீரென மாரடைப்பால் பாதிக்கப்பட்டுபவர்களை, அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று உரிய மருத்துவ சிகிச்சையை விரைவாக அளிக்கக்கூடிய வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.இருக்கும் இடத்திற்கே வந்து சாப்பிடும் உணவுகளை கையில் ஒப்படைக்கும் பணியை ஸ்விக்கி, சோமேட்டோ டெலிவிரி பாய்ஸ்கள் செய்து வருகின்றனர். அதேபோல, அவசர பணிக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் எப்போதும் ரவுண்டிங்கிலே இருப்பார்கள்.

மருத்துவ குழுவினர் இருக்கும் சுற்றுவட்டாரத்தித்தில், 3 கி.மீ-க்குள் யாருக்காவது மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக
அவசர எண் மூலம் செய்தி கிடைத்தால், உடனே எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் நோயாளிகள் இருக்கும் இடத்திற்கு விரைந்துவிடுவார்கள்.அங்குச் சென்று உரிய முதலுதவி சிகிச்சைகளை மேற்கொள்வார்கள். இப்படி செய்வதன் மூலம் பத்து நிமிடத்திற்குள் மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஈசிஜி போன்ற அடிப்படை சிகிச்சைகள் அளிக்க முடியும்.

ஒருவேளை நோயாளியின் நிலைமை மோசமாக இருந்தால், உடனே அந்த இடத்திற்கு அவசர ஊர்தி வரவழைக்கப்படும். பிறகு, மேல் சிகிச்சைக்காக பாதிக்கப்பட்ட நோயாளி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவர். இத்திட்டம் தொடங்கப்பட்டதை அடுத்து, மாரடைப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலைக்குச் சென்ற 80 பேர் முதலுதவி சிகிச்சைகள் மூலம் காப்பாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சில நோயாளிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் மூலம் பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி எய்ம்ஸ் விரைவு மருத்துவ உதவி திட்டம் குறித்து பேசிய மருத்துவர் ரந்தீப் குலேரியா, மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை தருவது முக்கியமானது. ஆனால் நகரில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலால், அவசர ஊர்திகள் உரிய இடத்திற்குச் சென்று சேருவதில் கடும் சிரமம் ஏற்படுகிறது. இதனால் பல உயிர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்படுகிறது.

இதை கருத்தில் கொண்ட டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தற்போது விரைவு மருத்துவ உதவி திட்டத்தை துவங்கியுள்ளது. இருசக்கர வாகனத்தில் சென்று உதவி செய்யும் மருத்துவக் குழுவினர் எளிதாக நோயாளியின் இடத்தை சென்றடைந்து விடுவார்கள். இது பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன் தரும் சேவையாக அமையும் என்று அவர் கூறினார்.

newstm.in

Trending News

Latest News

You May Like