1. Home
  2. விளையாட்டு

உலகக் கோப்பை: ஈரானை போராடி வீழ்த்தியது ஸ்பெயின்

உலகக் கோப்பை: ஈரானை போராடி வீழ்த்தியது ஸ்பெயின்

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின் குரூப் பி-யை சேர்ந்த ஸ்பெயின் மற்றும் ஈரான் மோதிய போட்டியில், டியேகோ கோஸ்டாவின் 'லக்கி' கோலால் ஸ்பெயின் வெற்றி பெற்றது.

இந்த உலகக் கோப்பையில் கடும் போட்டியை கொண்ட குரூப்பாக கருதப்படுவது குரூப் பி-யாகும். தற்போதய ஐரோப்பிய சாம்பியன் போர்ச்சுகல், முன்னாள் உலக சாம்பியன் ஸ்பெயினுடன், ஈரான் மற்றும் மொரோக்கோ அணிகளும் இந்த குரூப்பில் உள்ளன. முதல் போட்டியில் ஈரான் மொரோக்கோவை வீழ்த்திய நிலையில் , ஸ்பெயின் போர்ச்சுகல் போட்டி டிரா ஆனது. இன்று முன்னதாக நடைபெற்ற போட்டியில், போர்ச்சுகல் மொரோக்கோவை வீழ்த்தியது. அடுத்த சுற்றுக்கு தகுதி பெற, ஸ்பெயின் இந்த போட்டியில் நிச்சயம் வெல்ல வேண்டிய சூழ்நிலையில் இருந்தது.

மிகவும் திறமையாக டிபெண்ட் செய்யும் ஈரான் அணியை தாண்டி கோல் அடிக்க பெரிய அணிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றன. எதிர்பார்த்தது போலவே, ஸ்பெயின் அணியை தனது பாணியில் பாஸ் செய்ய விடாமல், கடும் நெருக்கடி கொடுத்தது ஈரான். போட்டியில் 90% நேரம், பந்து, ஸ்பெயின் வீரர்கள் காலிலேயே இருந்தது. முதல் பாதி முடியும் போது, ஈரான் அணி வீரர்கள் வெறும் 49 பாஸ்கள் மட்டுமே செய்திருந்தனர். கடந்த 50 வருடங்களில் உலகக் கோப்பையிலேயே இதுதான் ஒரு அணியின் மிகக் குறைந்த பாஸ் எண்ணிக்கையாகும். ஸ்பெயின் வீரர்கள் பாதி பேர், ஈரானை விட அதிகமான பாஸ்களை செய்திருந்தனர். ஆனாலும், முதல் பாதி, கோல் எதுவும் இல்லாமல் முடிந்தது.

இரண்டாவது பாதியில், 54வது நிமிடத்தில், ஸ்பெயினின் இனியெஸ்டா பந்தை இரண்டு வீரர்களை தாண்டி எடுத்துச் சென்று, கோஸ்டாவிடம் கொடுத்தார். பந்து ஈரான் வீரன் காலில் பட்டு, எகிறி மீண்டும் கோஸ்டாவின் காலில் பட்டு அதிர்ஷ்டவசமாக கோலுக்குள் சென்றது. ஸ்பெயின் முன்னிலை பெற்றது. 62வது நிமிடத்தின் போது, ஈரான் கோல் அடித்து போட்டியை சமன் செய்தது. ஆனால், வீடியோ மூலம் சரிபார்த்து, ஆப் சைடு விதியின் படி, கோல் நிராகரிக்கப்பட்டது. அதன்பின் ஈரான் சில வாய்ப்புகளை உருவாக்கினாலும், கோல் அடிக்க முடியவில்லை. 1-0 என ஸ்பெயின் வெற்றி பெற்றது.

முதல் இரண்டு போட்டிகளை தோற்ற மொரோக்கோ ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது. இந்நிலையில், 3வது போட்டியின் முடிவுகளை பொறுத்து, ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் ஈரான் அணிகளுள் இரண்டு அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவர்.

newstm.in

Trending News

Latest News

You May Like