1. Home
  2. விளையாட்டு

உலகக் கோப்பை நாக் அவுட் சுற்று: ஒரு பார்வை!

உலகக் கோப்பை நாக் அவுட் சுற்று: ஒரு பார்வை!

உலகக் கோப்பையின் நாக் அவுட் சுற்றுக்கு நேற்று ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் அணிகள் தேர்ச்சி பெற்றன. ஏற்கனவே தேர்ச்சி பெற்றிருந்த ரஷ்யா மற்றும் உருகுவேயுடன் இரு அணிகளும், ரவுண்ட் ஆப் 16 சுற்றில் மோதுகின்றன.

8 போட்டிகள் கொண்ட ரவுண்ட் ஆப் 16 சுற்றின், முதல் இரண்டு போட்டிகளை பற்றிய ஒரு அலசல்...

உருகுவே vs போர்ச்சுகல்

தென் அமெரிக்காவின் போர்ச்சுகல் என உருகுவேயையும், ஐரோப்பாவின் உருகுவே என போர்ச்சுகல்லையும் சொல்லலாம். சில உலகத் தரம் வாய்ந்த நட்சத்திர வீரர்களை கொண்டுள்ள இரு அணிகளும், தங்களது தடுப்பாட்டதை நம்பியே ஒவ்வொரு உலகக் கோப்பையும் களமிறங்குகின்றன. எந்த எதிராணியாக இருந்தாலும், கடைசி வரை அவர்களை கோல் அடிக்கவிடாமல் தடுப்பதற்கான திறன் இரு அணிகளிடமும் உள்ளது.

போர்ச்சுகலை எப்படி ரொனால்டோ தாங்கி நிற்கிறாரோ, அதேபோல, உருகுவேயை சுவாரஸ் தாங்கி நிற்பார். உலகக் கோப்பை போட்டிகளில் பெரிதும் பேசப்பட்ட சர்ச்சைகளில் ஒன்று, கடந்த முறை சுவாரஸ் இத்தாலி வீரர் சியேல்லினியை கடித்தது தான். யாருமே எதிர்பார்க்காத இந்த சம்பவத்தை தொடர்ந்து, சுவாரஸ் மீது 10 சர்வதேச போட்டிகள் தடை விதிக்கப்பட்டது. அதேபோல ரொனால்டோ, 2010ம் ஆண்டு உலகக் கோப்பையின் போது, க்ளப்பில் தனது சக வீரரான வெயின் ரூனியை, திட்டமிட்டு வெறுப்பேற்றி, ரெட் கார்டு வாங்கி வெளியேற வைத்தார்.

க்ளப் அளவில் சுவாரஸ் ரொனால்டோவுடன் பலமுறை மோதியிருந்தாலும், உலகக் கோப்பையின் தாக்கமே வேறு. ஜெயிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் இந்த இரண்டு கால்பந்து ஜாம்பவன்களும் எதிரெதிரே நிற்கும் போது என்ன நடக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

நேற்றைய போட்டியில் ஒரு பெனால்டி வாய்ப்பை ரொனால்டோ மிஸ் செய்தாலும், இந்த முறை போர்ச்சுகல் அணிக்காக 4 கோல்கள் அடித்துள்ளார். அவரை தடுக்கும் பொறுப்பு, உருகுவேயின் கேப்டன் கோடின் பக்கம் வந்து சேரும். க்ளப் போட்டிகளில் ரொனால்டோவை பலமுறை சந்தித்துள்ள கோடின், இந்தமுறை நிச்சயம் தயாராக இருப்பார். ருசிகரமான இந்த போட்டி, வரும் 30ம் தேதி இரவு 11.30 மணிக்கு நடைபெறுகிறது.

ஸ்பேயின் vs ரஷ்யா

உலகக் கோப்பையை நடத்தும் நாடான ரஷ்யா, முதல் இரண்டு போட்டிகளில் அதிரடி வெற்றிகளை பதிவு செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. சவுதியை 5-0 என்றும், எகிப்தை 3-0 என்றும் துவம்சம் செய்தது ரஷ்யா. ஆனால், உருகுவேயிடம் 3-0 என தோற்றது. இதனால், குரூப் ஏ-வில் இரண்டாவது இடத்தை பிடித்து, குரூப் பி-யில் முதலிடம் பிடித்த ஸ்பெயினுடன் மோதுகிறது.

மிகப்பெரிய சர்ச்சையோடு உலகக் கோப்பைக்குள் நுழைந்தது ஸ்பெயின். வெற்றி பயிற்சியாளர் லோபடேகி அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டார். அதிரடியாக விளையாடி, குரூப் பி-யில் முதலிடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்பெயின், கடுமையாக போராடி போர்ச்சுகல் போல 5 புள்ளிகளோடு முதலிடம் பிடித்துள்ளது. அட்டாக்கில் ஸ்பெயின் சிறந்து விளங்கினாலும், டிபென்ஸ் மோசமாக உள்ளது.

கடைசி போட்டியில் மொரோக்கோ 2-2 என டிரா செய்தது. ஆனால், போட்டியின் பெரும்பாலான நேரம், ஸ்பெயின் தோற்றுவிடுமோ என்ற பயத்திலேயே ரசிகர்கள் இருந்தனர். 80வது நிமிடத்தில் மொரோக்கோ 2-1 என முன்னிலை பெற்றது. கடைசி நிமிடம் தான் ஸ்பெயின் கோல் அடித்து டிரா செய்தது. கோல் கீப்பர் டி கியா மற்றும் டிபென்ஸ் வீரர்கள் செய்த தவறுகளால் மட்டும், ஸ்பெயின் இந்தமுறை 3 கோல்களை கோட்டை விட்டுள்ளது. கார்னர் கிக் மூலம் ஒரு கோல் வேறு.

எனவே, ஸ்பெயின் டிபென்ஸுக்கு கடும் நெருக்கடி கொடுக்க ரஷ்யா முயற்சி செய்யும். பெரிய வீரர்களை கொண்ட ரஷ்யா, கார்னர் கிக் மூலமாகவும் ஸ்பெயினை வெளியேற்ற முயற்சி செய்யும்.

சவுதி மற்றும் எகிப்துடன் சிறப்பாக விளையாடினாலும், உருகுவேயிடம் ரஷ்யா பலமாக வீழ்ந்தது. பல நட்சத்திர வீரர்களை கொண்டு பொறுமையாக பாஸ் செய்து விளையாடும் ஸ்பெயின், ரஷ்யாவை வீழ்த்த அதிக வாய்ப்புள்ளது. உலகக் கோப்பை துவங்கும் முன், இந்த இரு அணிகளும் மோதும் போட்டியின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் என கூறியிருந்தால் யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். ஆனால், அதிரடியாக கோல்களை குவித்துள்ள ரஷ்யா, டிபென்ஸில் தள்ளாடி வரும் ஸ்பெயினுடன் மோதுவது, எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்த போட்டி, ஜூலை 1ம் தேதி மாலை 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like