1. Home
  2. விளையாட்டு

சுவாரெஸ் மாஸ்; சவுதியை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு சென்றது உருகுவே!

சுவாரெஸ் மாஸ்; சவுதியை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு சென்றது உருகுவே!

உலகக் கோப்பையின் குரூப் ஏ போட்டியில், சவுதி அரேபியாவை 1-0 என வீழ்த்தி, நாக் அவுட் சுற்றுகளுக்கு தகுதி பெற்றது தென் அமெரிக்க நாடான உருகுவே.

ரஷ்யா, உருகுவே, எகிப்து, சவுதி ஆகிய நாடுகளை கொண்டது உலகக் கோப்பையின் குரூப் ஏ. முதல் இரண்டு போட்டிகளில் ஏற்கனவே ரஷ்யா பல கோல்கள் அடித்து வெற்றி பெற்று நாக் அவுட் சுற்றுக்கான இடத்தை ஏறத்தாழ உறுதி செய்துள்ளது. இந்த போட்டியில் உருகுவே வென்றாலோ அல்லது டிரா செய்தாலோ, ரஷ்யா நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்று, எகிப்து வெளியேற்றப்படும்.

கடந்த போட்டியில் 5-0 என மோசமாக தோற்றிருந்த சவுதி அணி, சொந்த நாட்டில் கடும் விமர்சனத்துக்குள்ளானது. அதனால் உலகக் கோப்பையில் இருந்து வெளியேறினாலும், கடுமையாக போராடி விளையாட வேண்டும் என்ற முனைப்போடு களமிறங்கினர் சவுதி வீரர்கள்.

போட்டி துவங்கியது முதல் இரு அணிகளும் நிதானமாக விளையாடின. இரு அணிகளின் டிபென்சும் சிறப்பாக செயல்பட்டதால், கோல் வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. ஆனால், 23வது நிமிடத்தில் உருகுவேவுக்கு கிடைத்த கார்னர் கிக் வாய்ப்பை பயன்படுத்தி, சான்செஸ் சூப்பர் கிராஸ் கொடுத்தார். அப்போது சவுதி கோல் கீப்பர் அவசரப்பட்டு அதை தள்ளிவிட வெளியே வந்தார். பந்து நட்சத்திர வீரர் சுவாரஸ் கால்களில் விழ, அவர் யாருமே இல்லாத கோல் போஸ்டுக்குள் எளிதாக தள்ளி கோல் அடித்தார்.

அதன் பின் உருகுவே முழு ஆதிக்கம் செலுத்தி விளையாடியது. சவுதி அரேபியாவால், கோல் வாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை. போட்டி 1-0 என முடிந்தது. இந்த முடிவை தொடர்ந்து, ரஷ்யா மற்றும் உருகுவே அணிகள் 6 புள்ளிகளுடன் 16 அணிகளை கொண்ட நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இன்னும் ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில், எகிப்து மற்றும் சவுதி உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியுள்ளன.

newstm.in

Trending News

Latest News

You May Like