1. Home
  2. விளையாட்டு

மெஸ்ஸி கை முறிவு; 3 வாரங்களுக்கு அவுட்!

மெஸ்ஸி கை முறிவு; 3 வாரங்களுக்கு அவுட்!

பார்சிலோனா அணிக்காக விளையாடும் பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, நேற்று செவில்லா அணியுடன் நடந்த போட்டியில், கீழே விழுந்து கைமுறிவு ஏற்பட்டதால், 3 வாரங்களுக்கு விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அர்ஜென்டினாவை சேர்ந்த லியோனல் மெஸ்ஸி, ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா கால்பந்து அணிக்காக விளையாடி வருகிறார். உலகின் சிறந்த கால்பந்து வீரராக கருதப்படும் மெஸ்ஸி, இதுவரை 5 முறை சிறந்த கால்பந்து வீரர் விருதை பெற்றுள்ளார். நேற்று நடந்த ஸ்பெயின் லீக் போட்டியில், செவில்லா அணியுடன் பார்சிலோனா விளையாடியது.

போட்டி துவங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே, மெஸ்ஸி கொடுத்த ஒரு சூப்பர் பாசில், குட்டினோ கோல் அடித்தார். சிறிது நேரத்தில், வலது பக்கம் இருந்து பந்தை கடத்திச் சென்ற மெஸ்ஸி, 4 வீரர்களை தாண்டி அட்டகாசமான கோல் அடித்து, 2-0 என பார்சிலோனாவுக்கு முன்னிலை கொடுத்தார். ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே, எதிரணி வீரருடன் மோதி, மெஸ்ஸி கிழே விழுந்தார். விழும்போது வலது கையை ஊன்றியதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் மெஸ்ஸி துடித்தார். கையில் கட்டு போட்டு மீண்டும் விளையாட முயன்றார். ஆனால், வலி அதிகரித்துக் கொண்டே போனதால், அவரை மருத்துவர்கள் அழைத்து சென்றனர். போட்டி 4-2 என பார்சிலோனாவுக்கு சாதகமாக முடிந்தது.

ஆனால், மெஸ்ஸியின் காயம் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. மெஸ்ஸி காயம் குறித்து பார்சிலோனா அணி வெளியிட்ட அறிக்கையில், அவர் சிகிச்சை காரணமாக 3 வாரங்களுக்கு விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம், பரம எதிரிகளான ஐரோப்பிய சாம்பியன் ரியல் மாட்ரிட்டுடன் பார்சிலோனா மோதுகிறது. கால்பந்து உலகின் மிகப்பெரிய க்ளப் போட்டியாக கருதப்படும் இதில், 10 ஆண்டு இடைவேளைக்கு பிறகு மெஸ்ஸி விளையாட மாட்டார்.

எப்போதுமே பார்சிலோனாவுக்காக மெஸ்ஸியும், ரியல் மாட்ரிட்டுக்காக ரொனால்டோவும் விளையாடும் இந்த போட்டியில், இந்த ஆண்டு இருவரும் விளையாடாமல் போகும் நிலை ஏற்பட்டது போட்டியின் மீதான எதிர்பார்ப்பை குறைத்துள்ளது.

கடந்த ஜூலை மாதம், ரொனால்டோ, ரியல் மாட்ரிட் அணியில் இருந்து ஜுவென்டஸ் அணிக்கு மாறியது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like