1. Home
  2. விளையாட்டு

கடைசி வினாடியில் ஜப்பான் இதயங்களை நொறுக்கிய பெல்ஜியம்!


பெல்ஜியம் ஜப்பான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற விறுவிறுப்பான உலகக் கோப்பை நாக் அவுட் சுற்று போட்டியில், போட்டியின் கடைசி வினாடிகளில் ஜப்பானை 3-2 என வீழ்த்தியது பெல்ஜியம்.

ஆசிய கண்டத்திலேயே சிறந்த அணியாக இந்த உலகக் கோப்பையில் உருவெடுத்துள்ளது ஜப்பான். பிரபல க்ளப்களில் விளையாடும் தலைசிறந்த வீரர்களை கொண்டுள்ள பெல்ஜியம், இந்த உலகக் கோப்பையில் பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். குரூப் போட்டிகளில், 3 வெற்றிகளுடன் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி அசத்தியது பெல்ஜியம்.

இந்நிலையில், ஜப்பானுடன் நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 போட்டியில், பெல்ஜியம் வீரர்கள் தங்களது முழு திறமையை வெளிக்கொண்டு வந்தனர். போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் பலமுறை கோல் அடிப்பதற்கு நெருங்கி வந்தன. ஆனால், பல வாய்ப்புகள் வீணடிக்கப்பட்டன.

ஆனால், இரண்டாவது பாதி துவங்கிய அடுத்த நிமிடமே, ஜப்பான் வீரர்கள் அதிரடியாக அட்டாக் செய்ய, அந்த அணியின் ஹாரகுச்சி கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். மறுமுனையில் பெல்ஜியம் உடனடியாக கோல் அடிக்க முயற்சி செய்தது. ஆனால், பெல்ஜியத்தின் நட்சத்திர வீரர் ஹசார்டு அடித்த பந்து, போஸ்ட்டில் பட்டு எகிறியது. சில நிமிடங்களில், ஜப்பானின் தக்காஷி இனுயி, சுமார் 25 அடி தூரத்தில் இருந்து ராக்கெட் போல ஷாட்டை அடித்து 2 கோல்களாக்கினார்.

எளிதாக வென்றுவிடும் என நினைத்த பெல்ஜியம், ஜெர்மனி, ஸ்பெயின் போல உலகக் கோப்பையை விட்டு வெளியேறிவிடும் நிலை ஏற்பட்டது. ஆனால், விடாமுயற்சி செய்த பெல்ஜியம் வீரர்கள், 69வது நிமிடத்தில் தங்களது முதல் கோலை பெற்றனர். அந்த அணியின் டிபென்ஸ் வீரர் வெர்டோங்கன் தூரத்தில் இருந்து தலையால் முட்டிய பந்து, யாருமே எதிர்பார்க்காதவாறு கோல் கீப்பரை தாண்டி உள்ளே சென்றது. அதன்பின், 72வது நிமிடத்தில், பெல்ஜியம் வீரர் ஃபெல்லாயினி, கோல் அடித்து போட்டியை சமன் செய்தார்.

கடைசி நிமிடங்களில் ஜப்பானுக்கு ஒரு கார்னர் கிக் வாய்ப்பு கிடைக்க, அதில் கோல் அடிக்க அந்த அணி, முயற்சி செய்தது. அப்போது, பந்தை ஜப்பானிடம் இருந்து கடத்திக் கொண்டு மின்னல் வேகத்தில் சென்ற பெல்ஜியம் வீரர்கள், 94வது நிமிடத்தில், போட்டியின் கடைசி வினாடிகளில் கோல் அடித்து தங்களது வெற்றியை உறுதி செய்தனர்.

அட்டகாசமாக விளையாடிய ஜப்பான் அணி, நூலிழையில் காலிறுதி வாய்ப்பை கோட்டை விட்டதை பார்த்து அந்நாட்டின் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

காலிறுதி போட்டியில், முன்னதாக மெக்சிகோவை வீழ்த்திய பிரேசிலை, பெல்ஜியம் எதிர்கொள்கிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like